பேச்சி..!

 


 


சூனியக்கிழவிகளின் பல கதைகளைச் சின்னவயதில் கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட ஒரு சூனியக்கிழவியின் ஆட்டம் தான் இந்தப்படம்..!

ஆனால், இந்தக்கிழவி ஒரு காட்டிற்குள் ஒரு வீடுகட்டி பல அடிமைகளை வைத்துக்கொண்டு, துஷ்ட சக்திகளை வசியப்படுத்திப் பல பாதக காரியங்களைச் செய்துகொண்டிருக்கின்றாள்..! குறிப்பாகத் தான், நீண்ட ஆயுளுடன் இருக்க, ஒவ்வொரு மனிதனையும் கொன்று, அவர்களது ஆயுளை எடுத்துத் தனது ஆயுளைக் கூட்டிக்கொண்டு போகின்றாள்..! இந்த நிலையில், அவளது செயலின் நோக்கத்தைக்கண்ட ஊர்வாசிகள், ஒரு சாமியாரின் துணைகொண்டு, அவளது உடலைப்புதைத்தும், ஆத்மாவை ஒரு மரத்தில் ஆணியால் அடித்தும் கட்டிப்போடுகின்றார்கள்..!

இந்த நிலையில், அந்தக்காட்டிற்கு மக்கள் போகப்பயப்படும் சூழலில், ஒரு குழு, முகாம் போட வருகின்றார்கள்..! வரும்போது ஒரு ஊர்வாசியையும் கூட்டி வருகின்றார்கள்..! ஊர்வாசி இந்த கதையைச் சொன்னாலும், அதனைக்காதில் வாங்காமல், வம்பில் மாட்டி உயிரைவிடுகின்றார்கள்..! ஊர்வாசியும் உயிரைவிடுகின்றார்..! வந்தவர்களில் ஒரு பெண் மாத்திரம் தப்புகின்றார். அவர் யார் என்று பார்த்தால், அவள் தான் சூனியக்காரியின் வாரிசு..!

அவள், சூனியக்காரியின் நீண்ட ஆயுளுக்கு துணைபுரிவதற்காகத் தான் அந்தக்காட்டிற்கு ஆட்களைக் கூட்டி வந்தாள், எனச்சொல்லிக் கதையை முடிக்கின்றார்கள்.

பார்க்கும்போது பல சந்தர்ப்பங்களில் பயம் வந்தது..! அது தான் படத்தின் வெற்றி.  இருந்தாலும், “நீண்ட ஆயுள் சூனியக்காரிக்கு ஏன் தேவைப்படுகின்றது..?” என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. கொலைகள் நடக்கின்றன..!  அதனால் அவளின் ஆயுள் கூடுகின்றது..! ஆனால், தனது நீண்ட ஆயுளை வைத்து, “என்ன பண்ணப்போகின்றாள்..?” என்பது தெரிந்தால், இன்னும் சுவாரசியமாக இருக்கும். சிலவேளை உலகத்தையே நகரமாக மாற்றப்போகின்றாளோ தெரியாது..?

சிறிய பட்ஜெட் படம் என்றாலும் பார்க்க, ரசிக்க முடிந்தது..! அனைத்து நடிகர்களின் பங்களிப்பும் தரமாக இருந்தன..! இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உட்பட அனைத்தும் சிறப்பாக இருந்தன..! நம்ப முடியாத கதை என்றாலும், நம்பக்கூடிய வகையில் எடுத்த இயக்குனர், இராமச்சந்திரன் பி  என்பவரைப் பாராட்டலாம்.  அச்சமூட்டும் படங்களை ரசிக்கும் நபர்கள், இந்தப்படத்தையும் ஒரு முறை பார்க்கலாம்.

 


ஆ.கெ.கோகிலன்

08-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!