ஊழியர் கூட்டம்..!

 


 


நான் யாழ்ப்பாணம் வந்த காலத்தில் இருந்து ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே சிறிய பனிப்போர் இருந்துகொண்டே இருந்தது. அந்தக்காலத்தில் மூன்று பணிப்பாளர்களின் கீழ் வேலைசெய்யக்கூடிய வாய்ப்பையும் யாழ் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் தந்தது. நான் கடந்த காலங்களில் பட்ட பாடங்களால், யாருடனும் முரண்படாமல் எனது வேலையை என்னால் இயன்றவரை யாரையும் ஏமாற்றாமல் செய்யவே முனைந்திருக்கின்றேன். மிகவும் குறைவான நாட்களே லீவே எடுத்துள்ளேன். அருகிலுள்ள கோயில் திருவிழாக்களுக்குக் கூட போவதைத் தவிர்த்து எனது கடமையை செய்துள்ளேன். அதன் பரிசாகவே எனது தற்போதைய பதவி வந்துள்ளது என நம்புகின்றேன். யார் ஆண்டாலும், ஆளாவிட்டாலும் எனது கடமையை தவறாமல் செய்யவே நான் முனைவேன். எனது கணக்கை இயற்கைக்கே காட்டுகின்றேன். பிரபஞ்சம் என்னை அவதானிப்பதாக நம்புகின்றேன். அதனை ஏமாற்ற எனக்கு விருப்பம் கிடையாது. அதேபோல் பிரபஞ்சமும் என்னை ஏமாற்றாது என்ற நம்பிக்கையும் எனது வாழ்க்கைப்பாடத்தில் வந்துள்ளது. இவ்வாறே தொடர்வேன்..!

இந்த மனநிலையில் நான் இருக்கும்போது, இன்று ஊழியர் கூட்டம் எமது நிறுவன நூல்நிலையத்தில் நடந்தது. நாட்டின் பொருளாதாரச் சூழல் பலரையும் பாடாய் படுத்துகின்றது. பணத்தேவை கூடியுள்ளது. கிடைக்கும் பணம் போதாமல்  இருக்கின்றது. இதனைக்காரணமாக வைத்து இரு ஊழியர்களுக்கு இடையே வாய் தர்க்கம் கூடி ஒருவர் கூட்டத்தைவிட்டே சென்றுவிட்டார். நான் பணிப்பாளராக நடுவில் இருந்து கத்தியும் எந்தப்பலனும் இல்லை. எனது வார்த்தையைக் கேட்கவும் தயாராக இல்லை.  நான்  அவரைப்பிடித்து நிறுத்த முடியாது. எல்லோரும் கல்வியில் சிறந்தவர்கள். யாருக்கும் யாரும் பாடம் எடுக்கத்தேவையில்லை என்பது எனது எண்ணம்.

அவர் போனபின்னர், எல்லோருக்கும்  பொதுவாக ஒரு வேண்டுகோளை வைத்தேன்.  அது “என்ன பிரச்சனை என்றாலும் அதனைத் தீர்க்க வழியுண்டு..”  அதற்கு முதலில் மனத்தில் இடமும் திடமும் வேண்டும். எல்லோரும் மன அழுத்தத்தில் இருந்தால் தீர்வை நோக்கிச் செல்லாமல் இன்னும் பல பிரச்சனைகளுக்குள் மாட்டவேண்டியே ஏற்படும். ஆகவே பொறுமையுடன், சில ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுவதன் ஊடாக சிறப்பான தீர்வுகளை நோக்கி நகர முடியும் என அனைவருக்கும் தெளிவுபடுத்தினேன்.

ஒருவாறு ஊழியர் கூட்டம் முடித்த பின்னர், ஊழியர் நலன்புரிக்கூட்டமும் தொடர்ந்து நடந்தது. பழைய நலன்புரிப்பொருளாளர் வாசித்த கணக்கறிக்கையால் சிலருக்கு  ஏற்பட்ட திருப்தியின்மை காரணமாக கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் ஒரு குழுவை அமைத்து, அது தொடர்பாகச் சரியான விசாரணையை மேற்கொள்ளப்பணித்தேன்.  அத்துடன் புதிய குழுவின் யாப்பையும் சில மாற்றங்களுடன் ஏற்றுக்கொண்டு, வங்கியில் ஊழியர்  நலன்புரிக்கான கணக்கை ஆரம்பிக்க கேட்டுக்கொண்டேன்.  கிட்டத்தட்ட எமது நிறுவனம் உருவாகி 25 வருடங்களுக்குப் பிறகு தான் ஊழியர் நலன்புரிக்கான ஒரு வங்கிக்கணக்கு ஆரம்பிக்கக்கூடிய சூழல் வந்துள்ளது.  அதற்கு அனைவருக்கும், குறிப்பாக புதிய குழுவிற்கும் எனது நன்றியையும் வாழ்த்தையும் கூறி,  ஒற்றுமையே பலம்..! என்றும் மனம் இருந்தால் இடமுண்டு..! என்றும் எண்ணியபடி கூட்டத்தைவிட்டு வெளியேறினேன்.

 

ஆ.கெ.கோகிலன்

09-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!