இரத்த தானமும் எனது லீவும்..!

 


 

வவுனியா சென்று வர இரண்டு நாட்கள்  தேவைப்படலாம் எனநினைத்து, இரண்டு நாட்களுக்கு லீவு போட்டுவிட்டேன். அத்துடன் இன்றைய நாளில் எமது நிறுவனத்தில் இரத்த தானம் செய்ய மாணவர்கள் முயன்றதால், அதுவும் முள்ளிவாய்க்கால் சூழலை நினைவு கூரும் தருணம் என்பதால் தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்க நினைத்தேன். மூன்று இன மாணவர்களும் இங்கே படிக்கின்றார்கள். எமது நிறுவனமோ அரசின் உதவியாலே இயங்கும்  ஒரு நிறுவனமே தவிர ஒரு பல்கலைக்கழக தன்மைகளுடன் கூடியது அல்ல. அதனை மாணவர்களும், எமது ஊழியர்களும் உணர்ந்தார்களா என்பதே தெரியவில்லை. மாறாக பல்கலைக்கழகத்துடன் போட்டிபோடும் நிலையிலே இருக்க விரும்புகின்றார்கள்.  தகுதியை வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் மற்றவர்கள் செய்வதை எல்லாம் நாமும் செய்யவேண்டும் என்று நினைப்பது, எமக்கான தனித்துவ அடையாளங்களை தொலைத்துவிடும்.

ஜனாதிபதியின் நேரடி உத்தரவின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகமும்,  கல்வி அமைச்சின் கீழ் வருகின்ற பல நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் எமது நிறுவனத்தில் ஒரு நிரந்தர அல்லது உறுதியான பணிப்பாளர் நாயகத்தைக் கூடப்பெறமுடியாத சூழலில் இருக்கும் எமது தலைமையகத்தின் வலுவிற்குள், மேலும் சிக்கல்கள் வந்தால், தீர்வுகளாக நாமே பந்தாடப்படுவோம் என்ற தயக்கம் எனக்கு பல காலமாக இருக்கின்றது. இயன்றவரை அதனை எனது காலத்தில் தவிர்த்தோ அல்லது குறைத்தோ வந்துள்ளேன். இம்முறை உலக அதிசயமாக மக்களின் போதிய வாக்குகளே பெறாமல், இயற்கையால்  கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியின் காலத்தில் இது நடப்பதால் எனக்கும் ஒன்றும் சொல்லத்தெரியவில்லை. மக்களின் மனங்களும் தெளிவாகப் புரியவில்லை. இருந்தாலும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற ஒரு விடயம் மாத்திரம் மனதில் உண்டு. அதனடிப்படையில் துறைத்தலைவர்களின் அனுமதியுடன் இரத்த தானத்தை செய்ய அனுமதி வழங்கினேன். அவர்கள் ஒரு படி மேலே சென்று முள்ளிவாய்க்கால் காஞ்சியும் செய்து வழங்கியுள்ளார்கள். இரத்தம் உயிர்களைக்காக்கத் தேவை.  உணர்வுகளுடன் தொடர்புபட்ட இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல், அவர்களுக்கு தடைகளையும் போடாமல் நானாகவே லீவை எடுத்துக்கொண்டு, பெரிய மாமா, சின்ன மாமா மற்றும் அம்மாவுடன் அவர்களின் தேவைகளையும், சிக்கல்களையும் குறைக்க ஆலோசனைகள் வழங்கியதுடன், குறுகிய பயணங்களையும் செய்ய உதவியும் செய்தேன். கிட்டத்தட்ட இன்றைய நாள் முழுவதும் பெரிய மாமாவுடனே இருந்தேன். பல விடயங்களைக் கதைத்தோம். விவாதங்கள் செய்தோம். அரசியல் மற்றும் இயற்கை தொடர்பில் அலசினோம். மதிய உணவை எனது வீட்டிலே வழங்கினேன்.  ஆக, வவுனியா பயணத்திற்கு என்று பெற்ற லீவை, எனது வீட்டிலும், அம்மாவீட்டிலும் மற்றும் குறும் பயணத்திலும் கழித்தேன்.

மேலும் இந்த ஒரு நாளும், எனக்கான ஆத்ம பலத்தை பெறுவதற்கு உதவிய ஒரு நாளாக எடுத்துக்கொள்ளலாம்.

உண்மையும், உதவியுமே ஆத்ம பலத்தைக் கூட்டும்.

 

ஆ.கெ.கோகிலன்

18-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!