Car Service

 



நான் 2021 இற்குப்பிறகு எனது காரினை Car Service செய்ய நினைக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம்,  காரைப் பயன்படுத்துவதற்கான சூழல்  மிகக்குறைவு என்பதும், இன்னும் குறிப்பிட்ட தூரங்களைக்கூட கடக்கவில்லை என்ற எண்ணமும் தான்.

இருந்தாலும் ஒரு வாகனத்தின் சரியான பாவனைக்கு, அதன் உற்பத்தி நிறுவனம் பரிந்துரைத்த முறைகளின் படியே வாகனத்தைப் பராமரிக்க வேண்டும்.

 2023இல் அது தொடர்பான எண்ணம் வந்ததும், எங்கே செய்யலாம் என தேடியபோது வழமையான இடத்தைவிட்டு வேறு ஒரு புதிய இடத்தில் செய்வோம் எனநினைத்து, அதற்கான ஆயத்தங்களைச் செய்தேன்.

முடிவாக இன்று அதனைச் செய்துமுடித்தேன். கிட்டத்தட்ட அரைநாளை எனது காருடனே  செலவழித்தேன். இதற்கு முதலுள்ள  Service களின்போது, நான் காரைவிட்டுவிட்டு வீட்டுக்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்றுவிடுவேன். பின்னர், வேலை முடிந்ததும் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு வாகனத்தைக் கொண்டுவருவேன். இறுதியாகச் செய்த போது, பல தவறுகளை எனது வாகனத்தில் செய்து இருந்தார்கள்.  அது தவறுதலாகவும் இருந்திருக்கலாம், அல்லது வேண்டும் என்றும் செய்திருக்கலாம். மீண்டும் ஏன் அப்படியான சிக்கலுக்குள் மாட்டுவான் எனநினைத்துப் பழைய இடத்திற்குச் செல்லாமல் புதிய  இடமொன்றிற்குச் சென்று, இந்த வேலையை முடித்தேன்.

ஒரு குழந்தையை குளிப்பாட்டித் துடைத்து, பொட்டு மற்றும் பூ என்பன வைப்பது போன்று அனைத்து நிகழ்வுகளும் இருந்தன. நானும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் நுணுக்கமாகக் கவனித்துப் படமும் எடுத்துக்கொண்டேன்.  எல்லாம் திருப்தியாகச் செய்தாலும் மழைவிடாததால் வேலையை இன்னும் பூரணமாக நிறைவு செய்ய முடியவில்லை.  இந்தக்காலத்தில் இப்படித் தொடர்ச்சியாக மழைவருவது குறைவு. அண்மையில் வந்த வெப்பத்தை இந்த மழைமூலமே இயற்கை தணித்துள்ளது. அதனால் மழையைக் குறைசொல்ல ஒன்றுமில்லை.

பின்னர், செய்தவேலையோடு வீடுவந்து, ஈரமான பகுதிகளை வெயிலில் காயவைக்க முனைந்தேன்.

ஆனால் அது தடைப்பட்டது.

 

Car Service செய்யும்போது, குறிப்பாக ஓயில் மாற்றியதும், கார் சில்லுகளை மாற்றி, அவற்றின் ஒழுங்குகளைக் கணினியின் உதவியுடன் செய்தது ஒரு முக்கிய தேவையான வேலையாக இருந்தது. அத்துடன் பாகங்களைக் கழுவுவதும் தரமாக இருந்தது. வழமையாக வீட்டில் நானே அவற்றினைக் கழுவுவதுண்டு.  ஆனால் எனது வேலையைவிட அவர்களின் வேலை தரமாக இருந்தது. அதற்கான கூலியும் மிக அதிகமாகவே இருந்தது. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. இல்லாவிட்டால் இன்னும் அதிகமாகவே செலவுசெய்ய வேண்டிவரும். பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது.  ஒரு பொருள் நீண்ட காலம் பாவிக்க, நல்ல பொருளாக மாத்திரம் இருந்தால் போதாது. அதனை நன்றாகப் பயன்படுத்திப் பராமரிக்கவும் வேண்டும்.

இக்கருத்து உயிர்களுக்கும் பொருந்தும்.

 

ஆ.கெ.கோகிலன்

05-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!