முரணான ஆசைகள்

 


 



உறவுகளுக்குள்  நடக்கும் அரசியலே நாட்டின் அரசியலுக்கும், உலகின் அரசியலுக்குமான அடித்தளமாகும்.

சொத்துக்கள் என்பது ஆண் பிள்ளைகளிற்கும்  அவர்களின் ஆண் வாரிசுகளுக்கும் என்று, மன்னர் காலங்களில் கருதப்பட்ட வழக்குகள் இன்றும் காணப்படுவது அதிசயம்.

அப்பாவிகளையும், முட்டாள்களையும் உறவுகளே ஏமாற்றுவது வேதனையானது. ஆனால் அதில் பலிகடாக்களாகும் முட்டாள்களை என்ன சொல்வது?

ஆசையே உலக நிலைப்பிற்கும், இயக்கத்திற்கும், அழிவுக்கும் காரணம்.

பணம், பொருள், நிலம் இவை அனைத்தும் மனிதர்களிற்கு, மிகவும் தேவையான வேண்டப்பட்ட விடயங்களே தான். ஆனால் அவை வேடிக்கையாகவும்,  விநோதமாகவும் பறிக்கப்படுவதைப் பார்த்தால் உறவுகள் மேலே கவலை தான் வருகின்றது.

சின்ன வயதில் இருந்தே, நிஜம் தெரியாமல், பெரிய எண்ணத்துடன் வாழ்ந்த ஒரு பெண்,  அவரின் இளமை முடிய, துணையின்றி  அவர் அவதிப்பட்டும்,  சமூகத்தையும், சூழலையும் பார்த்து மரத்துப் போயும் வாழும் நிலைக்கு மாறிய அவரை, நல்ல நிலைக்கு திரும்ப மாற்ற முடியாமல், அந்நிலையிலே தொடரவும், அதற்கு உதவுவது போன்று அவரது சொத்துக்களை மடக்குவதும், உறவுகள் செய்யும் காவாலித்தனம்.

தந்தை ஸ்தானத்தில் இருந்து, நல்லதை செய்ய முடியாமல், தவிர்க்கும் அண்ணனாக இருப்பதால் அந்த அப்பாவித் தங்கைக்கு என்ன பயன்..?

என்ன தான் மாறுபட்ட கருத்துக்கள், கொள்கைகள் இருந்தாலும் அயல்களுடன் அனுசரிக்க பழகாவிட்டால் அந்த இடத்தில் நிம்மதியாக எப்படி வாழ முடியும்..?

மனிதர்களையும், அயலையும் நம்பாமல் எப்படிக் குறித்த இடத்தில் வாழ்வது..?

நாய்களை வளர்ப்பது தான் பாதுகாப்பு என்று நம்புவது பெரிய முட்டாள் தனம். நஞ்சூட்டப்பட்ட இறைச்சித்துண்டுகளுக்கு இரையாகும் நாய்களை நம்பும் அப்பாவியை, ஏமாற்றுவது அண்ணன் எனும் போர்வையில் இருக்கும் தந்தை ஸ்தான மனிதருக்கு மனம் வரக்கூடாது.

நல்ல வழியைக்காட்ட, சகோதரங்களுடன் சேர்ந்து இருக்க, பழகத் தூண்ட வேண்டும்.  சொந்த ஊரிலே நிம்மதி கிடைக்கவில்லை என்றால், எங்குமே அது கிடைக்க வாய்ப்புக் குறைவு.

சொந்தத்தாயிடம் அன்பு கிடைக்கவில்லை என்றால் அவ்வாறான அன்பை எந்தத்தாயிடமாவது பெறமுடியுமா என்பது சந்தேகமே..?

வாரிசுகள் என்பது ஆண்களாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆரியர்கள் வகுத்ததை ஆளும் வர்க்கங்களே பின்பற்ற முனையும் போது மற்றவர்கள் எம்மாத்திரம்..?  உண்மையில் இக்கொள்கை  என்பது  மிகப்பெரிய முட்டாள் தனம். பெண்கள் ஆளும் நாடுகளும், குடும்பங்களும் உலகத்தில் நிறைய இருக்கின்றன..! வாரிசுகளாகப் பெண்களும் இருக்கலாம் என்பதை பல சாதாரணமானவர்கள் உலகிற்கு காட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்..!

 

ஒரு தீர்வை வழங்கும் போது, அதையொத்த பல தீர்வுகளை எடுத்து, அவற்றுள் எது மிகப்பொருத்தமானதும் சிறந்ததும் என்று ஆராய வேண்டுமே தவிர, தீர்வை வழங்குபவருக்கு சாதகமானதாக இருக்கும் தீர்வானது நிச்சயம் ஒரு சிறந்த தீர்வாக இருக்க முடியாது. அங்கே மறைவாக வியாபாரமும், சாணக்கியமும் சேர்ந்தே இருக்கும் என்பது என் எண்ணம்.  தீர்வு பெறுபவர் நிச்சயம் நீண்ட காலத்திற்குப் பின்னராவது தாம் ஏமாற்றப்பட்டதை உணர்வார்.

 

உறவுகளுக்குள் வியாபாரமும் சாணக்கியமும் அசிங்கம் என்று நம்புபவன் நான். அப்பாவிகளை ஏமாற்றுபவர்கள் அவர்களாகவே ஏமாற்றப்படுவார்.

வாழ முடியாதவர்களுக்கும், வாழ வழியில்லாமல் தவித்தவர்களுக்கும் தீர்வாக நிச்சயம் மரணம் என்பது கிடைக்கும். ஆனால் ஏமாற்றுபவர்களுக்கு நீண்ட ஆயுள் என்ற பேரில் தான், தண்டனை தீர்வாக இருக்கும்.

 

ஆ.கெ.கோகிலன்

20-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!