மொட்டை மாடி..!

 


நான் வீடுகட்டும்போது ஒரு மொட்டைமாடியை விருப்பத்துடன் கட்டினேன். எனக்கு இரவில் பிடித்தமான ஒரு இடமாக அது இருக்கின்றது. மழைகாலம் தவிர்த்து, அநேகமாக அங்கு போவதும், இரவில் முதலாம் பாகம் நித்திரை அங்கே கொள்வதும் ஒரு வழமை. அதனால் எனக்கு எப்போதும் இயற்கையுடன் இணைந்த திருப்தி கிடைப்பதுண்டு. சிலருக்கு எனது இந்தக் கூற்று, முரணாக இருக்கலாம்.

ஆனால் அது எனக்கு 100 சதவீதம் தேவையானதாக இருக்கின்றது. சில சமயம் அந்த இடத்திலே நீண்ட உறக்கத்திற்குக் கூடப் போக மனம் வரும். அப்படியே இயற்கை என்னைக்கட்டிப்போடும். ஆனால் இதுவரை விடியும்வரை அங்கே உறங்கியது கிடையாது. இயற்கை மாறுவதும், சூடு குறைந்து குளிர்வருவதும், அமைதியாக இருந்த சூழல், ஆரவரமாக மாறுவதையும்,  வாகனங்களினதும், விலங்குகளினதும், பறவைகளினதும்  ஒலிகளைக் கேட்கக்கூடிய வகையில் சூழல் மாறுவதையும் அமைதியான பின்னிரவில் ரசிக்க முடியும்.

வெப்ப காலங்களில் பொதுவாக நான் நித்திரையை இரு பாகங்களாக மாற்றியே உறங்குவது வழமை. மேலும் மின்விறிசி பயன்படுத்துவதை அதிகபட்சம் தவிர்க்கவே விரும்புவேன். மின்சாரத்தினை சேமிப்பதைத் தாண்டிலும், உடல் உலர்வதை தடுப்பதையே மிக முக்கியமான நோக்கமாகக் கொண்டிருப்பேன்.

எனது வீடு கட்ட ஆரம்பித்து, ஏறக்குறைய 10 வருடங்கள்  ஆகிவிட்டது. மொட்டைமாடியில் உறங்கும் அனுபவம் எனது மனைவி பிள்ளைகளுக்கு இன்று தான் கிடைத்தது. வேலை, படிப்பு போன்ற காரணங்களால் அவர்களால் இதனை அனுபவிக்க முடியவில்லை. நான் பிள்ளைகளையும், மனைவியையும் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இன்று என்னைப்போல் மொட்டை மாடியில் உறங்கும் அனுபவத்தை அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். இயற்கையாக வாழ்வது என்பது பெரிய விடயம் அல்ல. அதற்கு மனமும் உடலும் இடம் தர வேண்டும். அதற்கு எனது மனைவி பிள்ளைகள் மனம் மாறி வந்ததே பெரிய ஆச்சரியம் தான்.

பூமியில் மிக எளிமையாக வாழவும், மகிழவும் இறைவன் வழிவகுத்துள்ளான். ஆனால் எமக்கு, அந்த எளிமையான வழி புரிவதில்லை. அதற்கு வியாபார உலகத்தின் மோசடிகளே காரணம். இதனை உணர்ந்தால் நிறைவான, நிம்மதியான வாழ்வு அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும்.  அதற்கு முயற்சி வேண்டும். அதோடு மனநிறைவும் வேண்டும். பதிலாக  மனநிறைவற்று முயற்சியைச் செய்வதால் வெறுப்பே மிஞ்சும்.

முயற்சியைச் செய்து, எளிய வழியில் நிறைவான வாழ்க்கை வாழ்வதே இந்தப்பூமியில் சொர்க்கம்.

 

ஆ.கெ.கோகிலன்

12-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!