மெய்பொருள் காணுதல்

 


 


அண்மையில் வந்த வரலாற்றுத் தழுவல் திரைப்படமான பொன்னியின் செல்வனில் (PS2) இருந்த பல குறைகளை கண்டு, அதனால் சமூகம் கெட்டுவிடும், வரலாறு தப்பாகிவிடும், என்று பலரும் கவலைப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் பார்க்க முடிகின்றது. 

எப்போதும் நாம் உண்மையாக இருக்கவேண்டும்.  ஆனால் மற்றவர்கள் உண்மையாக இருக்கவேண்டும் என்று நாம் யாரையும் வற்புறுத்தத்தேவையில்லை.  அது எமது வேலை கிடையாது. அவர்களுடைய வேலை.

அறியாமல் இருப்பவர்களை ஏமாற்றுபவன் தானாகவே இயற்கையால் ஏமாற்றப்படுவான்..! இது எனது நம்பிக்கை.  இந்துக்களில், பிராமணர்கள் போட்ட சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்க ஏனைய சமூகத்தினர் முண்டியடிக்கின்றோம். ஆனால் அதன் உண்மைத்தன்மைகளை  பற்றி அறிய முனைவதில்லை. அதே நேரம் எத்தனையோ பிராமணர்களே பிராமணக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதில்லை. நாத்திகர்கள் போல் திரிகின்றார்கள்.  பல பிராமணப் பெண்கள் கூட, அவர்கள் முன்னோர் வகுத்த பாதைகளில் தற்போது பயணிக்க தயங்குகின்றார்கள்.  மேற்குலக நாடுகளின் நாகரீகத்தை விரும்பும் அளவுக்கு பிராமணப்பெண்கள் மாறிவருவது ஆச்சரியமாக இருக்கும் இந்தச் சூழலில், மணிரத்தினம், ஜெயமோகன் என்பவர்கள் பொன்னியின் செல்வனின் கதையை மாற்றிவிட்டார்கள். பிராமணர்களுக்குச் சார்பாக படம் எடுத்துவிட்டார்கள் என்று கத்துவது தேவையில்லாதது. விரும்பினால் பாருங்கள். இல்லையென்றால் விடுங்கள். எத்தனை படங்கள் வருகின்றன. எல்லாவற்றையும் பார்க்கின்றோமா..? பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு இருங்கள். அதற்காகக் கூவாதீர்கள். எல்லாருக்கும் எல்லாம் பிடிப்பதும் இல்லை. அப்படி இருக்கவும் கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான அறிவும், சுவையும் இருக்கு..! அதனடிப்படையில் அவர்கள் தமது நிலைப்பாட்டை எடுக்கட்டும்.  சும்மா காட்டுக்கத்து கத்துவதால் எந்தப் பயனும் இல்லை. மாறாக நமது சக்தியை இழந்து, சமூகம் மீது தேவையில்லாமல் கோபிக்க வேண்டிவரும்.

மணிரத்தினம் ஒரு புத்திசாலி. தன்படத்தைக்காசாக்கும் சூக்குமம் புரிந்தவர். அதற்கு ஏற்ப, அவரின் விசுவாச  முன்னனி நடிகர்களையும், தொழில்நுட்ப வல்லுணர்களையும், இந்திய அளவில்  அவருக்கும் அவரது முன்னோர்களுக்கும் இருக்கும் கௌரவத்தையும், சரியான முறையில் காசாக்கும் வித்தை உணர்ந்தவர்.  இந்தப்படம், பிரமாண்டம் என்ற பெயரில் 30இற்கு மேற்பட்ட ஹீரோ அந்தஸ்துள்ள நடிகர்களை,  படத்தில் வரும் மிகக்குறைந்த காலத்திற்கு ஏற்ப சம்பளங்களை வழங்கி, படத்திற்கு நட்டம் வரமுடியாத அளவிற்கு திட்டமிட்டுள்ளார். 30 ஹீரோக்களின் ரசிகர்களும் சேர்ந்தால் தமிழ்நாட்டின் அல்லது தமிழர்களின் முழு மக்கள் தொகையும் வந்துவிடும். மேலும் உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர், உலக அழகி என அவரின் அறிமுகங்களையும் பயன்படுத்தினால் நிச்சயம் படம் போட்ட பணத்தைவிட பல மடங்கு எடுக்கும் என்பது நிச்சயம்.  அதற்கு ஏற்ப லைக்கா சுபாஸ்கரனும் இணைந்து, பெரும் வெற்றிபெற்று, உரிமை கோராத பொன்னியின் செல்வன் என்ற நாவல்கள் வழிவந்த கதையினை இரு பாகங்களாக எடுத்து வெற்றியடைந்துள்ளார்கள்.

 

கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்பது ஒரு நாவல். பலரைக்கட்டிப்போட்டது உண்மை. அதில் கூட வரலாற்றுத் தவறுகள் உண்டு. அவற்றைவிட, நாவலின் கதை சுவாரசியமாக இருப்பதால் அதனை தமிழர்கள் பொக்கிசமாக மதித்து, வாசித்து ரசித்தார்கள்.

அதேபோல், பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி 2 என்பது மணிரத்தினம் குழுவின் கற்பனை..!  கல்கி எழுதிய கதையின் தழுவல் மற்றும் நழுவல்.

கல்கி காலத்திற்குப் பிறகு வந்த வரலாற்று ஆய்வுகளின் முடிவுகளுக்கு ஏற்ப சில விடயங்கள் மாற்றப்பட்டதால், மூலத்தை விட்டு  கதை நழுவிச் சென்றுவிட்டது. அதனாலேயே நழுவல் என்கின்றேன்.  இது பலருக்கு பிடித்தும் இருக்கின்றது.  பிடிக்காமலும் இருக்கின்றது. ஆக இதுவும் வரலாறு அல்ல.

இக்கதையை வாசித்த வாசகர்கள்  அல்லது இத்திரைப்படங்களைப் பார்த்த  ரசிகர்கள், அதனை பின்னர் வரலாறு என்று நம்பிப்பரப்பக்கூடாது. ரசிப்பதற்கு மட்டும் என்பதை நன்கு உணரவேண்டும். இவற்றை உண்மையான வரலாறு என்று கடத்துவீர்களாயின் நீங்களே பின்னர் காயப்படுவீர்கள். இந்தப்பிரபஞ்சத்தில் உண்மையே நீடித்து நிலைக்கும். பொய்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடும். ஆகவே எதனைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை.

பயங்கரமாகச் சிந்திக்காமல் படத்தைப் பார்த்து ரசியுங்கள். கருத்தைக்காவப்போகின்றீர்கள் என்றால், அதன் மெய்ப்பொருளைக் கண்டு காவுங்கள்.

 

ஆ.கெ.கோகிலன்

29-04-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!