முதியோர் பயணம்..!

 



அண்மையில் நான் வவுனியாக போகவேண்டிய சூழல் வந்தது. என்னுடன் வந்தவர்கள் எனது அம்மாவும்,  அம்மாவின் தம்பியும். அதேபோல் வவுனியாவில் இருந்தவர்கள் அம்மாவின் தங்கையும், அம்மாவின் அண்ணனும்..! இவர்கள் அனைவருமே ஏறக்குறைய 70 வயதைத் தாண்டியவர்கள். இவர்களில் நான் தான் சிறுவன். ஏறக்குறைய 50 ஐ தாண்டியவன்.

 

2020 கொரோனா வந்ததன் பின்னர் நான் நீண்ட தூரம் குறிப்பாக யாழ் மாவட்டம் தாண்டி வெளியே, குறிப்பாக எனது காரில் போகவில்லை. எனக்கு வந்த வருத்தம் நீண்டதூரப் பயணம் எனக்கு சாத்தியப்படாது எனப் பயமுறுத்தியது. இருந்தாலும்  தொடர் தேகப்பயிற்சிகளாலும், இயற்கையின் கிருபையாலும் நீண்ட தூரம் பயணம் செய்யலாம் என்ற நம்பிக்கை, இந்தப்பயணத்தின் மூலம் தற்போது வந்துள்ளது. அதுவும் நான் தனியே காரை ஓட்டிச்செல்லமுடியும் என்ற துணிவும் வந்துள்ளது.

நீண்ட காலமாக இருந்த ஒரு குழப்பம் என்னவென்றால், என்னால் நீண்ட தூரம் கரை ஓட்டமுடியாது. அதற்கு எனது இடக்கால் ஒத்துழைக்காது என்பது தான். அந்த எண்ணம், இந்தப்பயணத்தின்  மூலம் மறைந்துள்ளது. நான் தனியே இந்தக்காலுடன் காரை ஓட்ட முடியும். அதுவும் தனியே தொலை தூரத்திற்கு ஓட்ட முடியும்.

இந்த நம்பிக்கை வருவதற்கு காரணமாக இருந்தவர் எனது அம்மாவின் அண்ணர். அண்மையில் அவர் கனடாவில் இருந்து, தனது சகோதரங்களைப் பார்க்க இலங்கை வந்தார். யாழ்ப்பாணமும் வந்து ஒரு நாளிலே திரும்பி விட்டார். என்னால் அவரை முதல் வருகையின் போது பார்க்க முடியவில்லை. அதற்கு எனது வேலையும், குணமும் காரணம். சும்மா பொய் சொல்லி லீவு எடுக்க எனக்கு மனம் வரவில்லை. தற்போதைய சூழலில் அலுவலக வேலை கூடியுள்ளது. சில ஊழியர்கள் வேலையை விட்டு நின்றதாலும், மாற்றம் பெற்றதாலும், ஓய்வு பெற்றதாலும் ஏற்பட்ட ஒரு புதிய சூழ்நிலை இது. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது. மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம், குறிப்பாக இலங்கை மக்கள் இருக்கின்றோம்..! எல்லோரும் தம்மால் இயன்றளவு  உழைப்பை நாட்டிற்காகப் போட்டால் தான், நாடும் ஒரு காலத்தில், இன்னும் சிறப்பாக எம்மை வைத்திருக்கும் நிலைக்கு வரமுடியும். அதனை அனைவரும் புரிய வேண்டும்.  மாறாக நாட்டை அழிக்கும் வகையில் இயங்குவதால் எந்தப் பயனும் கிடைக்காது.

 

இந்தச் சூழ்நிலையில் பெரியமாமாவிடம் இருந்து அழைப்பு வந்தது. தனக்கு வயதாகிவிட்டது. தனியே போய்வருவது கடினம். அதிகம் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தியே செல்லவேண்டிய சூழல் உள்ளது. எனவே என்னைக்கூட்டிச்செல்ல உன்னால் வவுனியா வரமுடியுமா எனக்கேட்டார். முதலில் எனக்கு மனம் இல்லை. இந்தச் சமயத்தில் எமது நிறுவனத்தில் நடந்த இரு கூட்டங்கள், எனது மனதை சிறிது கவலைப்படுத்தியது.  அந்த எண்ணத்தை மறக்க, இரு நாட்கள் லீவு  எடுத்துக்கொண்டு, அம்மா, சின்ன மாமாவைக் கூட்டிக்கொண்டு வவுனியா போய்வரத் தீர்மானித்து, பெரிய மாமாவிற்கு, வவுனியா வருவதாகச் சொன்னேன். அவரும்  மனம் மகிழ்ந்திருப்பார் எனநினைக்கின்றேன். சொன்ன மாதிரியே அடுத்த நாள் காலை 7.00 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டு, சின்னமாமாவை ஏற்றிக்கொண்டு, அம்மா வீடு சென்று, அம்மாவையும் அழைத்துக்கொண்டு வவுனியா புறப்பட்டோம். மெதுவாக, எமது  சூழலை ரசித்துக்கொண்டு சென்றோம். போகும் போது, கைதடிப்பிள்ளையார் மற்றும் முருகண்டிப்பிள்ளையாரின் அருளையும் வாங்கிச் சென்றோம். அத்துடன் முருகண்டியில் வடையுடன் சுடச்சுடத் தேனிரும் அருந்தி, எம்மைத் மேலும் தெம்பாக்கினோம். வேறும் சில பொருட்கள் வாங்கின்கொண்டு, வவுனியா வர  நேரம் 11.00 இனைத்தாண்டிவிட்டது. அங்கே பெரியமாமாவும், சின்னம்மாவும் வெளியே போய் இருந்தார்கள். வீடு பூட்டியிருந்தது.  சின்னம்மா பராமரிக்கும் பல நாய்களும் குலைத்தன. கொஞ்ச நேரம் கேற்றுக்கு வெளியில் நின்று, பின்னர் நானே கேற்றினைத் திறந்து உள்ளே சென்று அங்கேயுள்ள கதிரைகளில் இருந்தோம்.  வீட்டில் ரேடியோ பாடிக்கொண்டிருந்தது.  சிறிது நேரத்தில் அந்த நாய்களும் எம்மை பார்த்து, உரிமையாளரின் உறவுகள் என்பதை உணர்ந்து கொண்டனவோ இல்லையோ குலைப்பதை நிறுத்தின. நாமும் அங்கே இருந்து,  இவர்கள் எங்கே போனார்கள்..? எனக்கதைக்கும்போது  ஓட்டோவில், இரு பெரிய பலாப்பழங்களுடன் பெரியமாமா வந்தார். பின்னர் பல விடயங்களைக் கதைத்தோம்.  சிறிது நேரத்தில் அம்மாவின் தங்கையும் வந்தார். அவர் தான் அந்த வீட்டில் நாய்களைப் பராமரித்தபடி தனியே வாழ்கின்றார். சாயி பகவான் பக்தையாக இருப்பதால் பல சாயி நிறுவனத் தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். எம்முடன் கதைப்பதைத் தவிர்த்துத் தனது சமையல் வேலையைத் தொடர்ந்தார். எமக்கும் சரியான நேரத்தில் மதிய உணவைத் தந்தார். பின்னர் பிற்பகல் மணி 3.00 அளவில் பெரிய மாமாவைக் கூட்டிக்கொண்டு வெளிக்கிட்டு, எனது நண்பரையும் பார்த்து, பூக்கன்று ஒன்றையும் வாங்கிக் கொண்டு, பெரியமாமாவும் அவரது  அலுவல் ஒன்றையும் முடித்துக்கொண்டு,  பெரியமாமாவின் நெளுக்குள காணியையும் பார்த்து, அவருடைய நண்பருடனும் கதைத்துவிட்டு, யாழ் நோக்கிப் பயணப்பட்டோம்.  மீண்டும் ஏறக்குறைய 6.00 மணியளவில் முருகண்டியில் கும்பிட்டு,  வடையும் தேநீரையும் உண்டு மகிழ்ந்தோம். பின்னர் 6.30 மணியளவில் பயணத்தைத் தொடர்ந்து, எனது வீட்டை அடைய மணி இரவு 8.00இற்கு மேலாகிவிட்டது. மனைவி இரவு உணவைத் தயார்படுத்தி வைத்திருந்தார்.  எனது வீட்டில், அவர்கள் அனைவரும் இரவு உணவை முடித்துக்கொண்டார்கள்.  அதன் பின்னர் அவர்களை நான் அம்மாவீட்டில் விட்டுவர மணி இரவு 9.30 இற்கு மேலாகிவிட்டது. பின்னர் களைப்புடன் படுத்து உறங்கிவிட்டேன். இந்தப்பயணம் நான் கொழும்பு சென்று வரலாம் என்ற நம்பிக்கையை  திரும்பக் கொண்டு வந்துள்ளது.  கொரோனாவும், சில உறவுகளின் மரணங்களும், பொருளாதாரச் சிக்கல்களும், இயற்கையாகக் கிடைக்கும் கஷ்டங்களும் கடந்த சில வருடங்களில் எம்மை அடியோடு மாற்றிவிட்டது. பறக்கலாம் என நினைத்த காலத்தில் நடக்கவே போராடவேண்டிய சூழலுக்குள் சிக்குண்டதை வாழ்வின் வரலாற்றுப்பாடமாக மனதில் பதிந்த நிலையில், அவற்றை மறக்க அல்லது மீண்டும் எழத்தொடங்க போடும் ஒரு முயற்சியாகவும், ஊக்கமாகவும் இந்தப் பயணம் அமைந்தது உண்மையே. அதுவும், இவர்கள் அனைவரிற்கும் கடமை செய்யும் வாய்ப்பு எனக்கு மட்டுமே இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவர் வீட்டிலும் பல நாட்கள் உண்டு, உறங்கியுள்ளேன். அதற்கு என்ன மாற்றீட்டினை நான் தரமுடியும். என்னால் முடிந்த உதவியை மாத்திரமே நான் செய்ய இயலும்.  அதனைத் தான் இன்று ஓரளவிற்காவது செய்தேன் என்ற திருப்தியில் கண்ணை மூடினேன்.

 

ஆ.கெ.கோகிலன்

17-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!