நானும் தொழில் நுட்பங்களும்..!
நான் பிறந்த 60களின் கடைசியில் எமக்கு கல்வீடே கிடையாது..! அந்தச்சமயத்தில் பகுதி மண் வீடோ அல்லது மண்வீடோ இருந்தது. ஆனால் இரவு விளக்குகள் எரியும். மண்ணெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் விளக்குகளே அதிகம் பயன்பட்டது. எல்லோரும் கூட்டமாக இருந்து கதைப்போம். சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவார்கள். வீட்டில் பொழுது போக்குகள் கிடையாது. பெரிவர்கள் அவர்களது வேலைகளைச் செய்வார்கள். 10 மணிக்கு முன்னரே அனைவரும் படுத்துவிடுவார்கள். காலை 4 மணிக்கு முன்னரே எழுந்துவிடுவார்கள். சாப்பாடுகள் பல மாதிரியும் இருந்தாலும், பழைய சோறு அல்லது பழஞ்சோறு, பழம்தண்ணீர் என்பன நிறைவான உணவு.
இரவு மிச்சங்கள் எல்லாம் அடுத்தநாள் உணவில் தோன்றும். வருத்தங்கள்
வருவது குறைவு. அந்தக்காலத்தில் நிறைவும் நிம்மதியும் இருந்தன என்றால் மிகையாகாது..!
70
தொடக்கங்களில் கல்வீடு வந்தது..!
நான் தவழும் காலத்தில் கல்வீடு வந்தது. இருந்தாலும் விளக்குகள்
இருந்தன. வீட்டின் ஒரு பகுதியில் வெங்காயக் கட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. இன்னோர்
பகுதியில் பூசனிக்காய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அம்மா, அப்பா, நான் நாவலப்பிட்டி
மற்றும் மூதூர் போன்ற இடங்களில் இருந்ததாக ஞாபகம். அந்தக்கல்வீடு அம்மாவிற்காக கட்டப்பட்டாலும்
அந்நேரம் அம்மம்மா, ஜயா மற்றும் அம்மாவின் தம்பி, தங்கை இருந்தார்கள். நாங்கள் அந்த
வீட்டிற்கு வரும் வரை மின்சாரம் அந்தப்பகுதிகளுக்கு வரவில்லை. சில நகர் புறங்களில்
மின்சாரம் வந்தது, கிராமப்புற மக்களுக்கு ஒரு ஆச்சரியமான அனுபவம்..!
75களிலே
மின்சாரம் வந்தது..!
நாங்கள் ஊருக்கு வந்த காலத்தில் மின்சாரத் தூண்கள் வீதிகளில்
போடப்பட்டன. ஒவ்வொரு வீடு வீடாக மின்விளக்குகள் வரத்தொடங்கின. இரவு பகல்போல் மாறியது.
எண்ணெய் விளக்குகளின் பாவனை குறையத் தொடங்கியது. ஒரு பெரிய பிலிப்ஸ் ரேடியோ வீட்டில்
பாட்டுப்பாடியது. அதில் வரும் நிகழ்ச்சிகளை
அனைவரும் ரசித்துக்கேட்போம்.
இந்திய வானொலிகளின் சேவைகளும் இலங்கையில் கேட்கக்கூடியதாக
இருந்தன. அதுவும் யாழ்ப்பாணத்தில் இன்னும் அதிகம். இந்திய சினிமா செய்திகளை நான் அதிகம்
கேட்டது இந்தக்காலத்தில் தான்..!
அது மாத்திரமன்றி, சிந்தாமணி, வீரகேசரி போன்ற பத்திரிகைகள்
நாம் அதிகம் படிப்பவை..! பார்ப்பவை..!
இந்தக்காலத்தில் கோவில்களுக்குப் போவது வழக்கம். ஒன்று அதுவே
ஒரு பொழுது போக்குத்தான். அதுமாத்திரமன்றி, புக்கை, வடை மற்றும் மோதகம் போன்றவற்றை
ஜயர் பிரசாதமாகத் தருவார். அதுவும் எம்மைக்
கவர்ந்த ஒருவிடயம் அந்தக்காலத்தில்..! திருவிழாக்காலங்களில் மேளக்கச்சேரி, வில்லுப்பாட்டு,
பாட்டுக்கோஷ்ரி மற்றும் சின்னமேளம் போன்ற நிகழ்ச்சிகளும் எம்மை கோவிலை நோக்கி இழுக்கும்
பொழுதுபோக்குக் காரணிகள்.
இப்படியான காலத்தில் ஊரில் ஒரு நகைசெய்பவர் வீட்டில் தொலைக்காட்சி
வந்தது..! அதனால் அவர்களுடன் பழகுவது அதிகரித்தது. பல நேரங்களில் நான் அங்கே நிற்பது
தான் வழக்கம். பனி காலங்களில் இந்திய தூரதர்ஷனில் படம் போட்டால் பார்த்துவிட்டுத் தான்
வீடு வருவேன். தாயாரிடம் இதனால் ஏச்சும் அடிகளும் வாங்கிய தருணங்களும் இருந்தன.
80
களில் தொலைக்காட்சி ஊருக்குள் வந்தது..!
புதிய பொழுதுபோக்குகள்
ஊருக்குள் வரத்தொடங்கின. காசு வாங்கி, டிவியில் படங்கள் போட்டார்கள். ஒரு நாள்
3 அல்லது 4 அல்லது 5 படங்கள் பார்த்த வரலாறு எனக்கு உண்டு. சமூகங்கள் தாண்டி அனைத்து
வீடுகளுக்கும் போய்வரும் பழக்கம் அதனால் ஏற்பட்டது. அது என்னை மாத்திரம் ஈர்க்காமல்
எனக்கு அடுத்த தம்பியையும் ஈர்த்ததால் பல முறை அம்மாவிடம் திட்டும் ஏச்சும் அவர் வாங்குவதைப்
பார்த்திருக்கின்றேன். நான் ஒருவாறு புத்திசாலித்தனமாகத் தப்பிவிடுவேன். பெற்றோர்,
தம்பியை மரத்தில் கட்டிவைத்து தண்டித்ததை இன்றுவரை ஞாபகத்தில் வைத்துள்ளேன். அவரும் படிக்க விருப்பமில்லாமல் இரவு பகல் பார்க்காமல்
படங்கள் பார்ப்பதால் பல பிரச்சனைகளும் வீட்டில் எழுந்தன. எனது ஊரிலுள்ள வைரவர் கோவிலில்
சிவாஜியின் சித்திரா பௌர்ணமி மற்றும் ரோஜாவின்
ராஜா எனப்பல படங்கள் பார்த்த நினைவு இன்றுவரை இருக்கின்றது. இந்தக்காலகட்டத்தில் களவாக
நீலப்படங்கள் பார்த்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. ஊருக்கும் உறவுகளுக்கும் பயந்து
பார்த்த அனுபவங்கள் இன்றுவரை பதட்டமாகவே இருக்கின்றன..!
இலங்கை ரூபவாகினியில் பல சிவாஜியின் படங்கள் போட்டபோது, உறவினர் வீட்டில் போய் இருந்து படம் பார்த்தது
இன்னும் பசுமரத்து ஆணிபோல் இருக்கின்றது. அந்தநேரம் பல சுவையான மற்றும் கசப்பான சம்பவங்களும்
நடந்தேறின.
85களில்
தொலைக்காட்சி வீட்டிற்குள் வந்தது..!
ஊருக்குள் அலைந்து திரிந்து நானும், தம்பியும் படம் பார்ப்பதை
அறிந்து, தடுக்க முயன்றும் முடியாமல் போய் இறுதியில் வீட்டிற்கே ஒரு கறுப்பு வெள்ளைத்
தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிப்பொருத்தியது, அந்தக்காலத்தில் பெருமகிழ்ச்சியான விடயமாக
இருந்தது..! இலங்கை ஆமியின் படங்களும் இந்தக்காலத்தில் வெளிவந்தன. உள்ளூர் தொலைக்காட்சி
சேவைகளும் நடந்தன. அதற்கு காசும் கொடுப்பது வழக்கம். மணியம், ரெலிவோய்ஸ் என சில நிறுவனங்களில்
பல படங்கள் பார்த்துள்ளேன். நானே தனியாகத் தியேட்டர்களுக்குச் சென்று பல படங்கள் பார்த்துள்ளேன்.
அந்தச்சமயத்தில் அவை ஒரு பிழையான செயற்பாடாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது அம்மாவை
ஏமாற்றியது வருத்தமாக இருக்கின்றது. இந்தச் சமயத்தில் உயர்தரம் படித்ததால், சற்று அனுபவம்
கூடிவிட்டது. பல பெரிய மனிதர்கள் வேலையும் செய்துள்ளேன். ஆளும் வளர்ந்து, 18 வயதிலே
30ஐ தாண்டியவர் போல் இருந்ததால் பல சிக்கல்களிலும் மாட்டியே வெளியே வந்தேன். என்னால்
படித்து இந்த நிலைக்கு வரமுடியுமா என அந்தவயதில் யோசிக்கும்போது நிச்சயமாக இல்லை என்றே
பதில் வருகின்றது. ஆனால் இறைவனும் இயற்கையும் என்பால் வழங்கிய அருளால் ஒரு பிரச்சனையும்
இல்லாமல் என்னால் நிம்மதியாக நிறைவாக வாழ வழியமைந்து விட்டது..!
90களில்
நாட்டில் கணினி வந்தது..!
அதுவரை கணினி என்ற பெயரையே உச்சரிக்காத எனக்கு கணினி என்பது
எனது இந்தியப்பட்டப்படிப்பின் ஊடே அறிமுகமாகியது. ஆனாலும் நான் கணினியைப் பார்க்காமலே
ப்றோக்கிராமிங் மொழிகள் படித்தேன்..!
கணிதம் போலவே அவற்றை படித்து, குறிப்பாக கடதாசியில் எழுதி
எழுதிச் செய்த பயிற்சியூடாக மனப்பாடம் செய்து, பின்னர் ஒப்பித்து முதல் வகுப்பில் சித்திபெற்றேன்..!
நாட்டில் பணம் படைத்த சிலரிடம் மாத்திரம் கணினி இருந்தது.
அந்த நேரத்தில் வெளிநாட்டு மோகம் தலைவிரித்து ஆடத்தொடங்கியது.
94இல்
எனது உறவினர் வீட்டில் கணினி வந்தது..!
இந்தக்காலத்தில் எனது மாமாவின் மகனுக்கு, மாமா ஒரு கணினியை
ஏறக்குறைய ரூபா.350,000.00 அந்நேரப்பெறுமதியில் வாங்கி, மகனிடம் படிக்கக்கொடுத்தார்.
அந்தச்சமயத்தில் நான் அங்கே இருந்ததால் அதனைப் பார்க்க விரும்பினேன். ஆனால் அவன் கிட்ட
என்னை அனுமதிப்பதில்லை..! அதனைத் தொட்டுப்பார்க்கவென்றே அவனுடன் நட்பாகப் பழக ஆரம்பித்தேன்.
அவன் என்ன கெடுதல் செய்தாலும் பொறுத்தேன். பயனாக, என்னை அந்தக்கணினியைப் பார்க்கப்
பயன்படுத்த அனுமதித்தான். அந்த நேரத்தில் தான் “இன்போமிக்ஸ்” என்ற டேட்டாபேசை அறிந்துகொண்டேன்.
இவ்வாறாகப் பல விடயங்களை அந்நேரத்தில் அந்தக்கணினி மூலம் அறிந்துகொண்டேன். பிற்காலத்தில்
ஒரு புத்தகம் எழுத அந்த அறிவு உதவியது என்றால் அதுமிகையாகாது. அந்தக்கணினியின் தற்போதைய
பெறுமதி பார்த்தால் 30 மில்லியனுக்குக் கூட..!
ஒரு கட்டத்தில் மாமாவின்
மகனுக்கு அந்தக்கணினியும், அதுதொடர்பான படிப்பும்
சுமையாக மாறிவிட்டது..! பின்னர் அவன் கணினியைத் தொடாமலே மாயமாகிவிட்டான்..!
2000இன்
ஆரம்பத்தில் கணினி என்னிடம் வந்தது..!
நான் ஒரு ஆசிரியராக இருந்த காலத்தில் எனது சம்பளப்பணத்தைச்
சேர்த்து ஒரு கணினி வாங்கினேன். அதன் பெறுமதி ஏறக்குறைய ஒரு இலட்சத்தைவிடக்கூட..! எனது அனைத்து உழைப்புக்களையும், கடனும் எடுத்தே
அதனை வாங்கினேன். நான் இலாப நட்டம் பார்க்கவில்லை.
எனது படிப்பு, பொழுதுபோக்கு என ஏறக்குறைய நித்திரை தவிர ஏனைய நேரங்கள் முழுக்க கணினியிலே
இருந்தேன். இந்தச்சமயத்தில் தமிழில் ஒரு புத்தகத்தை நானே டைப்செய்து தேவையான அனைத்து
வரைபுகளையும் இணைத்து உருவாக்கி, இறுதியில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் வெளியிட்டேன்.
வாங்கிய கணினி, அந்நேரத்தில் எனக்கு ஒரு மதிப்பைத் தந்தது..! திருகோணமலையில் இருந்த
காலம் அது..! அந்நேரம் அயலில் ஒருவரிடமும் கணினி இல்லை. வாங்குவதென்றால் பெரும் செலவு..!
நான் வாகனம் வாங்கவில்லை. ஆனால் கணினியும், அதனுடன் தொடர்புடைய அனைத்துக்கருவிகளையும்
வாங்கிப் பழகி, கடைசியில் அவற்றை எல்லாம் சும்மா குப்பையில் போட்டுவிட்டேன்..! படித்ததோடு, ஒரு வித நிஜ அனுபவத்தை உணர்ந்ததோடும் சரி..! இப்போது
நினைத்தால், எனது உழைப்பை அழித்துள்ளேன் என்பது புரியும். இந்த இயல்பு எனக்கு இல்லை
என்றால் தகவல் தொழில்நுட்பத்துறையில் என்னால் இருந்திருக்க முடியாது..!
2002இல்
சாதாரண கையடக்கத் தொலைபேசி வந்தது.
தகவல் தொழில்நுட்பம் என்றால் கணினியும், தொலைதொடர்பும் இணைந்து
தான் என்பது அனைவரும் அறிந்ததே..! அந்தக்காலத்தில் பல நிறுவனங்கள் இணைப்பற்ற தொலைபேசிகளை
வழங்கிவந்தன..!
எனது குடும்பத்தில் முதலாவது கைபேசியை வாங்கியது எனது மனைவியின்
தந்தையார் தான்..! அதனைத் தொடர்ந்து நானும் ஒரு நொக்கியா போனை வாங்கினேன்.
கொஞ்சக்காலத்தில் அதனை மனைவியிடம் கொடுத்துவிட்டேன்.
2005இல்
கமெரா உட்பட பல வசதிகள் கொண்ட கையடக்க தொலைபேசி வந்தது..!
நான் பெரதெனியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.ஸி படித்த காலத்தில்
பல வசதிகள் கொண்ட தொலைபேசிகள் வந்தன. ஆசை யாரை விட்டது..! என்னையும் தொற்றியது..! இரண்டு
மூன்று மாதச்சம்பளத்தைக்கொடுத்து, கமெராவுள்ள ஒரு போனை முதலாவதாக வாங்கினேன். சொனிஎரிக்சன்
என்ற நிறுவனத்தின் வெளியீடு. ஏறக்குறைய அந்நேரத்தில் என்னிடம் இருந்து ரூபா25,000.00ஜப்பறித்தது..!
பின்னர் பல போன்கள் சந்தையில் வந்தன. இரண்டாவது நொக்கியா போனை வாங்கி சிறிது நாட்களில்
மனைவியிடம் கொடுத்தேன்.
எனது பெரதெனியாக்காலம் முழுக்க அந்த சொனியெரிக்சன் போன் தான்
இருந்தது. காலப்போக்கில் அதுவும் பயனற்று இறந்துவிட்டது. யாழ்ப்பாணத்திலே அதனை அடக்கம்
செய்தேன்.
அதேபோல் ஒரு தொடுகைப்போனை கொழும்பில் ஏறக்குறைய ரூபா.10,000.00
இற்கு வாங்கினேன். அதன் பெயர் “G5” எனநினைக்கின்றேன். நான் வாங்கிய முதலாவது “Touch Phone” அது தான்..! ஒரு வருடத்திற்குள் அது படுத்துவிட்டது..!
இதனடக்கமும் யாழில் தான் நடந்தது..! ஏறக்குறைய
2011 இன் கடைசியில் இன்னோர் நொக்கியா போன் வாங்கினேன். இதற்கு ஒரு ரூ.10,000 செலவழித்து
இருப்பேன். இருந்தாலும் இன்றுவரை அந்தப்போன் என்னிடம் வேலைசெய்யக்கூடிய அளவில் இருக்கின்றது.
2010இல்
லப்டொப் கணனி என்னிடம் வந்தது..!
லப்டொப் வாங்கியதன் முக்கிய நோக்கம் எனது பட்டப்பின் பட்டத்திற்கான ஆராய்ச்சி வேலைகளைச் செய்வதற்கே..! இதற்கும் ஒரு
இலட்சத்திற்கு மேல் செலவுசெய்துவிட்டேன். என்ன செய்ய..? எனது படிப்பு முடிக்கும் வரை
அது உயிருடன் இருந்தது..!
2017 இல் வசதிகூடிய கையடக்க தொலைபேசிகள் வந்தது.
சாம்சொங் வகை ஆரம்ப
கால டச் கையடக்க தொலைபேசி ஒன்று என்னிடம் வந்தது..! 2011இன் பின்னர்
இலத்திரனியல் கருவிகளுக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்திக்கொண்டேன். அதனால் ஓர் இரண்டு மாடி வீடு கட்ட முடிந்தது என்றால்
ஆச்சரியப்படுவீர்கள். இலத்திரனியல் பொருட்கள் எம்மிடம் இருந்து, எம்மையறியாமலே எவ்வளவோ
பணத்தைத் திருடி ஏப்பம்விட்டுவிடும்..!
வீடு வந்ததன் பிறகு பதவியும் வந்தது..! அதனைத்தொடர்ந்து ஒரு
தொடுகைக் கைபேசி தேவையாக வர, வாங்கினேன். கொரோனா வரமுன்னர் அதனை மனைவியிடம் கொடுத்துவிட்டு
இன்னோரு கைபேசி வாங்கினேன்.
தற்போது அவசரத்திற்கு கதைக்க, மகளுக்கு ஒரு சாதாரண போனை மட்டும்
வாங்கிக்கொடுத்துள்ளேன். இந்த 3 போன்களின் விலையைச் சேர்த்தால் ஒரு இலட்சம் வரும்.
விஞ்ஞானம் வளர்கின்றது..! சந்தையில் பல வித பொருட்கள் வருகின்றன. காலத்தோடு ஓட அவற்றை
வாங்கவேண்டியுள்ளது. ஆனால் அதற்கேற்ப பொருளாதார விருத்தி நாட்டில் இல்லை. இனிமேல் இவற்றைக்
கட்டுப்படுத்தாவிட்டால், உணவுக்கும் உலை வைத்துவிடும்..!
தற்போது
பயமே வருகின்றது..?
உலகப் போக்கையும், தொழில்நுட்பங்களின் வளர்ச்சியையும், மனித
எண்ணங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியையும் பார்க்கும்போது, எதிர்காலம் என்பது பெரும் பயத்தை
எமது சந்ததிக்கு ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் மட்டுமே மிஞ்சுகின்றது..!
ஆ.கெ.கோகிலன்
20-06-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக