இடமே இல்லை..!
இன்று திங்கக்கிழமை என்பதாலும், போயா விடுமுறை என்பதாலும், நல்லூர்,
செல்வச்சந்நிதி கோவில் திருவிழாக்கள் என்பதாலும் யாழில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது.
எங்கு பார்த்தாலும் கூட்டம்..! காலையே க.பொ.ச செமினார் வகுப்பிற்காக மகளை யாழிலுள்ள
வீரசிங்கம் மண்டபத்தில் விட்டு வந்தேன். அதன் பிறகு, வீடுவந்து ஏனைய வேலைகளைச் செய்து
, திருமலை போவதற்கான ஆயத்தங்களைச் செய்தேன்.
மாலை 2.00மணியளவில் மனைவி மகளை வீரசிங்கம் மண்டபத்திலிருந்து கூட்டிவந்தார்.
நானும் மதியம் சாப்பிட்டுவிட்டு மாலை பஸ்ஸிற்குத் தயாரானேன்.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்தார்கள். நான் அவர்களிடம் விடைபெற்று,
மாலை 3.30 இற்கு வீட்டில் இருந்து புறப்பட்டேன். சரியாக 4.00 மணிக்கு கிட்டவாக வாகனத்தரிப்பிடத்தில் மோட்டார் வண்டியை நிறுத்திவிட்டு,
பஸ் நிற்கும் பகுதிக்குச் சென்றேன். அங்கே அதிக கூட்டமாக இருந்தது. பஸ்ஸிற்குள் ஏறக்கூட
முடியவில்லை. அவ்வளவு கூட்டம். கொஞ்ச நேரம் பொறுத்து உள்ளே சென்றால் எல்லா சீற்றிலும் ஆட்கள் இருந்தார்கள்..! எனது பையை வழமைபோல் வைக்க இன்று இடமே இல்லை. எனது சீற்றிலும் யாரோ இருந்தார்கள்.
கடந்த வாரம் போன் சார்ஜ் இல்லை என்பதால் விகோட் சொல்ல முடியாமல் திண்டாடினேன்.
இம்முறை வரும்போதே விகோட்டை எழுதி வைத்திருந்தேன். ஆனால் இன்று வேறுமாதிரி சூழ்நிலை இருந்தது..! போன்
இல்லாவிட்டால் சீற் மாறிய விபரம் ஒன்றுமே தெரியாது..!
எனக்குத் தெரிந்த மாணவர்களும், தற்போது பெரிய மனிதர்களாக காலவோட்டத்தில்
மாறி இருந்தார்கள்..!
நடத்துனர் வந்ததும் நிலைமையைச் சொல்ல, அவரும் எமது சீற்றில் இருந்தவர்களை
இறக்கிவிட்டு எங்களை இருக்கச்சொன்னார். எனது
போன் இன்று சார்ஜ் இல்லையாயின் எனது நிலைமை
சற்றுச் சிக்கல் தான்.
நான் ஏறக்குறைய ஓமந்தை வரும்வரை நன்றாக இருந்து விட்டு, ஒரு தாயார் யாழில் இருந்து 2 மணித்தியாலமாக நின்றுகொண்டிருந்தார்..!
அவருக்கு எனது சீற்றைக்கொடுத்து எழுந்து நின்றேன். கொஞ்ச நேரத்தில் வவுனியா வந்தது. இன்னும் மக்கள் பலர் ஏறினார்கள்..! ஏற்கனவே
இடமில்லை. தற்போது காலே வைக்கமுடியவில்லை..! ஒருவாறு அந்தத்தாயாருக்கு உதவுவதற்காக
நின்று வந்தேன். ஹொரோபொத்தான வந்ததும் எனது நிலைமையைச் சொல்லி, அந்தத் தாயாரை கொஞ்ச
நேரம் நிற்கவைத்து, மொரேவாவில் திரும்ப சீற்றைக்கொடுத்தேன்.
அதிக சனத்தால் பஸ் சற்றுத் தாமதமாகவே வந்தது. துவரங்காட்டில் இறங்க
கொஞ்சம் சிரமப்பட்டேன். மூதூர் பையன் ஒருவர் எனக்கு அந்நேரம் உதவினார்.
எமது நிறுவனம் உள் துறைமுகவீதியில் இருந்தபோது அலுவலக உதவியாளராக இருந்த
ஒருவரின் சகோதரனைக் கண்டேன். அவரிடம் சொல்லி, சகோதரனை என்னுடன் கதைக்கச்சொன்னேன்.
அதேபோல் என்னிடம் NCAT என்ற
கற்கைநெறியை தொழில்நுட்பக்கல்லூரியில் படித்த ஒருவர் , கிறிஸ்தவ பாஸ்டராக மாறி, இறைவழிபாடு செய்கின்றார்..! அவருடன் கதைத்ததில்
திருப்தி. அவருக்கும் என்னுடன் கதைத்ததில் திருப்தி என்பதை அவரது குடும்பத்தினரை அறிமுகப்படுத்தியதில்
இருந்து புரிந்துகொண்டேன். சில மாணவர்கள் முகம்கொடுத்துக் கதைப்பதற்கு இப்போதும் கூடக்
கூச்சப்படுவார்கள்..!
மேலும் சில மாணவர்கள் திருமணம் முடித்து, பிள்ளையும் பெற்று சோடியாக
இருந்தார்கள். அவர்களிடம் எமது 25 வருட நிறைவு நிகழ்வு பற்றிச்சொல்லி, அவர்களையும்
எமக்கு ஒத்துழைக்க அழைத்தேன்.
இன்று மக்களின் கூட்டம் அதிகம் என்பதால் வண்டி பிந்தியே வந்து சேர்ந்தது.
இருந்தாலும் எனது வேலைகளை அந்த இடைப்பட்ட நேரத்திற்குள் செய்ய முடிந்தது இறைவனின் கருணை.
அனுபவம் தொடர்ந்து என்னைப் புதுமைப்படுத்துகின்றது..!
ஆ.கெ.கோகிலன்
19-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக