கள்வன்..!

 



மக்களுக்கும்  வன விலங்குகளுக்கும் இடையில் இருக்கும் போராட்டம் என்பது நீண்ட கால வரலாறு கொண்டது. மனிதர்கள் காடுகளுக்குள் புகுந்து தமக்குத் தேவையானவற்றை எடுப்பதும், காட்டை அழிப்பதும், அதில் களனிகள் அமைப்பதும் ஆதிகாலம் தொட்டு இருந்து வருகின்ற நிலைமை. இன்றும் காடுகளுடன் அண்டிய ஊர்களில் மக்களுக்கும் விலங்குகளுக்குமான மோதல் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன..! அறிவுள்ள மனிதர்களுக்குள்ளேயே மண், பெண், பொன்  ஆசைகளால் அடிபடுவதும், அநாதைகள்  ஆவதும் இன்றும் உலகெங்கும் வியாபித்து இருக்கின்றது..! அப்படியிருக்க விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையில், பிணக்குகள் எப்படியும் வரலாம். அறிவுள்ளவர்களே அடிபடுகின்றபோது, அறிவற்ற விலங்குகளை அடிபணிய வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல..!

இந்தப்படத்தின் கதையே யானைகளால் வரும் பிரச்சனைகள் அடிப்படையில் பின்னப்பட்டுள்ளது..! யானை மிதிப்பதும், மரணங்கள் சம்பவிப்பதும், அரசு அதற்கு நிவாரணத்தொகை வழங்குவதும் சில ஊர்களில் அடிக்கடி நடக்கும் சம்பவம்.

அப்படிப்பட்ட சம்பவத்தை வைத்து, அதற்குள் அநாதை இளைஞர்கள் களவு செய்வதும், பிடிபடுவதும், அதற்காகத் தண்டனைகளைப் பெறுவதுமாக இருக்க, ஒரு சந்தர்ப்பத்தில் திருடப்போன இடத்தில் பெண்பிள்ளை ஒருவரைக் கண்டு, அவளது செயலில் விருப்புக்கொண்டு, அது காதல் வரை நீண்டு கலியாணம் மற்றும் குழந்தை என்று முடிவதற்கு, அநாதையில்லத்தில் இருந்து அநாதையான முதியவரை அழைத்துச்சென்று, யானையால் மிதிபட்டு சாக வைத்து, அதற்காக வரும் நிவாரணப்பணத்தில் வேலை வாங்கி, அந்த விரும்பிய பெண்ணைக் கட்டுவதே நோக்கமாகக் கொண்ட இளைஞனின் ஆசை நிறைவேறாமல்  அந்த முதியவரே அதனை இன்னோர் விதத்தில் செய்து, அந்த இளைஞர்களுடன், தானும் இணைந்து ஒரு குடும்பமாக வாழுவதாகப் படம் முடிகின்றது..!

களவு, காதல், வஞ்சகம், வீரம், பாசம் என அனைத்து உணர்வுகளையும் கலந்துகொடுத்துள்ளார் இயக்குனர் பி.வி.சங்கர்.

முதியவரை கொல்லப்போட்ட திட்டம் உணர்ந்து, காதலி, காதலனை வெறுப்பதும், முதியவர் சாதாரண நபர் அல்ல என்பதுடன் சாகஸ கலைஞர் என்பதால் விலங்குகளை எப்படி கையாள வேண்டும் என்ற அனுபவம் பெற்றவர் என்பது ஆச்சரியம்.

அநாதை இளைஞர்கள், உதவிக்கு வழியின்றி, இவ்வாறு தவறான நிலைக்கு சென்றதை மன்னிக்கும் முதியவர், பெரியவர் தான்.

இறுதியாக, இளைஞரின் நண்பர் முதியவரை போதையேற்றி காட்டுக்குள் யானைகள் கொல்லட்டும்  என்று போட்டுவர, கதாநாயக இளைஞர் அவரை மீட்கச்செல்வது காதலின் வெற்றி..!

ஆகமொத்தம் கதையே மாறுபட்ட களத்தில் இருப்பதால் ரசிக்க முடிந்தது.

ஜி.வி.பிரகாஷ்குமார், இவானா, தீனா மற்றும் பாரதிராஜா என எல்லோரும் நன்றாக நடித்திருந்தார்கள்.

ஒவ்வொரு புதிய கலைகளின் வருகையும், அதனால் பழைய கலைகளுக்கு ஏற்பட்ட அவலமும் தொடர்ந்து நடைபெறுவது இயற்கையே..! அதனைத் தாங்க மாற்றங்களைத் தொடர்ந்து செய்தேயாக வேண்டும்.  அதற்காகத் தொடர்ந்து முயலவே வேண்டும். இற்றைப்படுத்தல் என்பது ஒவ்வொரு துறைக்கும் தேவையானதே..!

இல்லை என்றால் உலகத்தின் போக்கை, எம்மால் ஈடுகொடுக்க முடியாது. மாற்றம் ஒன்றே மாறாதது.

இந்தத் திரைப்படத்தில் வேலைசெய்த அனைத்துக் கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் தமது பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளார்கள். குறிப்பாக யானைகள், சிங்கம் சம்பந்தப்பட்ட கணினி வரைகலைகள் சிறப்பு. காட்டூன் படங்களாக முதியவரின் வாழ்வைச் சொன்னது சிறப்பு.

பார்க்கக்கூடிய ஒரு படம்.

 


ஆ.கெ.கோகிலன்

04-08-2024.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!