இடம் மாறிய கார்..!
அரச நிறுவனங்களில் வளங்களை எவ்வளவு வினைத்திறன் மிக்க வைகையில் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த வேண்டும்.
யாரோ இரண்ரொரு பேர் அப்படிச்செய்வதால் மக்களுக்கு நன்மை கிடைக்குமா..?
பொருளாதாரத்தில் முன்னேற்றம் கிடைக்குமா எனப்பார்த்தால் சாத்தியமில்லை என்று தான் சொல்லத்
தோன்றும். ஆனால் ஒவ்வொரு மனங்களிலும் நல்ல மாற்றத்தை யாரோ ஒருவர் தொடங்கி வைக்க வேண்டும்.
அது சரியான முறையில் மக்களால் பின்பற்றத் தொடங்கினால்
நல்லது நிச்சயம் நாட்டில் நடக்கும். நாம் மற்றவர்களைக் குறை கூறுவதைவிட நாம் செய்யவேண்டிய
திருத்தங்களே பல இருக்கின்றன..! பொதுவாக எனக்கு யாரையும் குறை கூறப்பிடிக்காது. அப்படியும்
தவறுகள் தவிர்க்க முடியாமல் அதிகமானால், அவரின் அறிவில் குறைபாடு உள்ளது என்று விலத்திவிடவே
முயற்சிப்பேன்..! அவருக்குப் பாடம் எடுப்பது
அந்தச்சமயத்தில் நன்மை தராது. சில வேளைகளில் காயங்களைத் தரலாம்..!
எமது நிறுவனத்திற்கு பல வருடங்களுக்கு முன்னர் வந்த காரை இன்று தான் இன்னோர் சகோதர நிறுவனத்திற்கு
கொடுத்தேன். எனது கையால் தான் அந்தக்கொடை நடக்கவேண்டும் என்று இருக்கின்றது.
உண்மையில் இது கொடை அல்ல..! தலைமையகத்தில் முதலே தெரிவிக்கப்பட்டு,
தாமதமாகி வந்த கட்டளை..! அதை நடைமுறைப்படுத்தியதே எனது வேலை. சிலர் எமக்குரிய பொருளை
ஏன் மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைப்பார்கள். தேவை ஏற்பட்டால் திரும்ப
எடுப்பது கடினம் என்பார்கள். இவை அனைத்தும் உண்மை என்றாலும், எம்மால் பயன்படுத்த முடிந்தால்
மாத்திரம் அவற்றை வைத்துக்கொள்வது நல்லது. எப்போதாவது ஒரு நாள் பயன்படுத்த முடியும்
என்பதற்காக சும்மா வெறுமனே வைத்திருப்பது,
ஏறக்குறைய வைக்கோல் பட்டறை நாயை ஒத்த நிலையில் தான் நாம் இருப்போம். தானும் தின்னாது..! தின்ன வரும் மாடுகளையும் தின்ன
விடாது..!
இப்படியாக இருக்க எனக்கு விருப்பம் கிடையாது. எமது நிறுவனத்தில் சிலருக்கு
இந்தச்செயற்பாடு பிடிக்காமல் போகலாம். எமது நாட்டின் வளத்தை இன்னோர் நாட்டிற்கு கொடுக்கவில்லை.
நாட்டின் வளத்தை நாட்டின் இன்னோர் பகுதிக்குத் தான் கொடுத்தேன். இது என்னைப்பொறுத்தவரை
நியாயமான செயற்பாடாகவே படுகின்றது.
இதே மாதிரியான சூழல் யாழிலும் வந்தது..! நானே எமக்கான பஸ்ஸை எடுத்து,
திரும்ப இன்னோர் சகோதர நிறுவனத்திற்கு வழங்கவேண்டிய சூழல் வரும்போது ஒத்துழைத்துக்கொடுத்தேன். என்னைப்பொறுத்தவரை வீண்
விரயத்தை இயன்றவரை தடுத்துள்ளேன். ஆனால் கொண்டு சென்ற இடங்களில் அவை சரியாகப் பயன்படுத்தப்படுகின்றதா
என்பதை உறுதிப்படுத்துவது எனது கடமை கிடையாது. எனக்கு மேலேயுள்ளவர்கள் தான் அவற்றைப்
பார்க்க வேண்டும்.
சகோதர நிறுவனத்தில் இருந்து இருவர் வந்தார்கள். எமது நிறுவனத்தில்,
காரைக் கையளிப்பதற்கான பூரண தயார்படுத்தலை, செய்ய தவறியதால் சிறு சங்கடம் ஏற்பட்டது..!
இருந்தாலும், சில மாற்று நடவடிக்கைகளூடாகவும், ஆவணங்களின் உதவியுடனும் இடம்பெயர்வு
வெற்றிகரமாக எந்தச் சிக்கலுமின்றி நடந்து முடிந்தது மகிழ்ச்சி..!
எமது நிறுவனக்கார், சகோதர நிறுவனத்தில் தற்போது பயன்படக்கூடிய வகையில்
நிற்கும் என நான் நம்புகின்றேன். உச்சபயன்பாடு என்பதும் பொருளாதாரத்தில் கருத்தில்
எடுக்கப்படவேண்டிய விடயம். விரையமும் பொருளாதாரத்தை சிதைக்கும்..!
ஆ.கெ.கோகிலன்
23-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக