கைபிடிபூட்டு (Handlelock)

 



பிரச்சனைகளும், தீர்வுகளுமே வாழ்க்கை..! இதனை கணித பாடத்துடன் ஒப்பிடலாம். விதிகளைச் சரியாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால், எந்தப் பிரச்சனை என்றாலும், அதற்கு தீர்வு காண முடியும் அல்லது அந்தப் பிரச்சனைக்கு யாராலும் தீர்வு காண முடியாது என்பதையாவது தீர்க்கமாகச் சொல்லமுடியும்.

இப்போது மீண்டும் கணிதம் படிப்பிக்க ஆசை வருகின்றது..! எனது கல்விப்பயணம், கணிதத்தில் தொடங்கியது. தற்போது கணிதத்திற்குப் போகக்கூடிய வாய்ப்பு வருகின்றது. பார்ப்போம். எந்த அளவில் நமது ஆற்றல் இருக்கின்றது என்பதை..?

அனுபவங்களே பிரச்சனைகள் ஊடாகத் தான் கிடைக்கின்றது..! ஆனால் அதனூடாக படிக்கும் பாடம், தான் தீர்வுகள்..!

கைவிரலில் காயத்தோடு யாழ்வந்து, குடும்பத்தின் கவனிப்பால் காயம் விரைவாக ஆறியது..! இருந்தாலும் சில வாரங்கள் ஓய்வாக இருக்க வேண்டும். வழமைபோல் உடற்பயிற்சிகளோ அல்லது கடினமான வேலைகளோ செய்ய முடியாது. இந்த வாரம் முழுக்க மருத்துவ லீவை எடுக்க முடியும். இரண்டு நாட்கள் எடுத்ததும், அங்குள்ள நிலைமையை அவதானிக்க, திருமலை போக மனம் தூண்டியது. பல வேலைகள் செய்யவேண்டி இருக்கின்றது. உதவிப்பதிவாளரும் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெற்றதால், அந்த இடத்தையும் நானே தற்போது நிரப்பவேண்டி  நிலை இருக்கின்றது. அது மாத்திரமன்றி, துப்பரவுச்சேவை ஒப்பந்தம் செய்யவேண்டிய நிலையும் இருந்தது. மேலும் அடுத்த இருவாரங்களில் மீண்டும் கல்விச்செயற்பாடுகள் தொடங்க இருப்பதால், ஊழியர்களுடன் ஒரு கலந்துரையாடல் கூட்டமும் வைக்கவேண்டி இருந்தது.

இது மாத்திரமன்றி, இரண்டாம் மதிப்பீட்டு வேலை, மீள் மதிப்பீட்டு வேலை, மேலும் பல வேலைகள் வரிசையாகக் காத்து இருந்தன..!

இரண்டு நாள் மருத்துவ விடுப்பை முடித்துவிட்டு மீண்டும் திருமலை செல்ல தீர்மானித்து, வழமைபோல் பஸ் இருக்கையை முற்கூட்டியே பெற்றுக்கொண்டேன். எனது மோட்டார் இருசக்கர வண்டியில் ஏதோ எண்ணைக்கசிவு இருப்பதால், திருத்துமிடத்தில் பார்க்கச்சொல்லிவிட்டேன். ரூபா.2000 மீண்டும் செலவழித்தும் பிரச்சனை தீரவில்லை. தற்போது இன்னோரு பிரச்சனையைச் சொன்னார். கள்ள வைத்தியர்கள் போல், இவர்களும் ஒரு பிரச்சனைக்கு தீர்வுக்குப் போனால் மேலும் மேலும் வேறு வேறு பிரச்சனைகளை உருவாக்கி, பணம் சம்பாதிப்பதையும், உதிரிப்பாகக் கடையில் விற்பனையைக் கூட்டவுமே முயற்சிக்கின்றார்கள். வைத்தியர்கள் இவ்வாறு மாறுவதற்கு மக்கள் தான் காரணம். வைத்தியர்களைக் கைநீட்டுவது மாத்திரமன்றி, தாமும் சரியாக நடக்க வேண்டும்.

எண்ணைக்கசிவு தொடர்ந்தும் இருக்க, மாலை பஸ்ஸிற்கு அந்த வண்டியில் சென்று தரிப்பிடத்தில் கைபிடிப்பூட்டை போட்டேன். வழமையாக அப்படிச்செய்வதில்லை. ஆனால் கடந்த சில வாரங்கள் நான் வண்டியை நிறுத்துமிடமும் வரும்போது வண்டி நிற்கும் இடமும் வேறுபட்டு இருக்கும். சில சமயம் நேரம் செலவழித்து எனது வண்டியைத்தேட வேண்டியிருக்கும். இந்த நிலையில் தரிப்பிட ஊழியர் வண்டிக்கு பூட்டுப்போட வேண்டாம் என்றார். சரி என்றுவிட்டு, பூட்டைத்திறக்க அது திறபடவில்லை. வியர்க்க வியர்க்க முயன்றும் முடியவில்லை. அங்கே நின்றவர்களைக் கூப்பிட்டுத் திறந்து பார்த்தேன். வழமையாக இடக்கையைத் தான் எனக்கு பயன்படுத்த முடியும். அந்தக்கையில் காயம் இருப்பதால் வலக்கையாலே முயன்றேன். அதன் பலம் போதாது என்பதால் மற்றவர்களின் உதவியை நாடினேன். அதுவும் முடியவில்லை. திருமலை பஸ்ஸிற்கான நேரம் வந்துவிட்டது. அப்படியே இருக்கவிட்டு, பஸ்ஸைப்பிடித்து திருமலை சென்றேன். ஆனால் மனதில் பூட்டுத்தொடர்பான எண்ணம் ஓடியது. நீண்டகாலமாக நான் கைபிடிப்பூட்டு போடுவதில்லை. ஆனால் இன்று ஒரு முறை மாத்திரம் போட்டேன். அதுவே பிரச்சனையாக மாறிவிட்டது.

அங்கும், சில சிக்கல்கள் இருந்தன. அவற்றை ஒருவாறு சமாளித்து, சென்ற நோக்கத்தை நிறைவு செய்ய முயன்று, இயன்றவரை முடித்து, மேலதீகமாக இரண்டாம் மதிப்பீட்டைப் பார்க்க, பல மாணவர்கள் சித்தி பெறமுடியாத வகையில் எல்லைப்புள்ளிகளுக்கு கிட்டவாக இருந்தார்கள். படிப்பித்த விரிவுரையாளர் முதல் மதிப்பீட்டைச் செய்வதால், தனது பிள்ளைகளின் விடைத்தாள்களைச் சரியான முறையில் திருத்தவேண்டும். 80 வீதமானவர்கள் சித்திபெறாத வகையில் திருத்தியிருந்தால், அங்கே விசாரணை நடாத்தவேண்டிய நிலை எனக்கு இருக்கின்றது. அதுமாத்திரமன்றி, எனது துறையைச் சேர்ந்த பாடம் என்பதால் ஏறக்குறைய  ஐந்து மாணவர்கள் என்னால் சித்திபெறக்கூடியதாக இருந்தது..! அவர்களுக்கு தகுதி இருந்தும் சரியாகத் திருத்தப்படாததால் இந்த நிலை வந்தது.

இவற்றை முடித்துக்கொண்டு, கூட்ட அறிக்கையையும் தயார்படுத்திவிட்டு, வெளிக்கிட மதியம் ஆகிவிட்டது.

வழமையைவிட இன்று 12.30இற்கு நிறுவன வாசலடிக்கு வரும் பஸ்ஸில் ஏறினேன். அது கொடிகாமத்தின் ஊடாகப் பருத்துறைக்கு போகின்றது என்ற விபரம் புரிந்தது..! சரியென்று, கொடிகாமத்திற்கு பயணச்சீட்டை  எடுத்துவிட்டு, அந்த பஸ்ஸிலேயே பயணித்தேன்.  நினைத்த மாதிரி அரை மணித்தியாலம் முன்பாக யாழ்வந்துவிட்டேன். வழமையான போக்குவரத்து உதவிகளையும் செய்தே வந்ததால், உடல் சற்று ஆரோக்கியமாக இருப்பதாக உணர்ந்தேன்.

இறங்கும் தருணத்தில் ஏறக்குறைய 20 வருடத்திற்கு முன்னர் கணித விரிவுரையாளராக, திருமலையில் சந்தித்த மனிதரை, தற்போது வவுனியா தொழில்நுட்பக்கல்லூரியின் முதல்வராகவும் இருப்பவர். அவரைச் சந்தித்து, நேரத்தேவையால் விரைவாக விடைபெற்று, வழமையாக மனதிற்குள் இருந்த பூட்டுப்பிரச்சனைக்கு எப்படித் தீர்வு காணலாம் என்று எண்ணியபடியே, தரிப்பிடத்திற்குச் சென்று முயன்றேன். ஒரு மாற்றமும் இல்லை..! அதே நியைில் இருந்தது..! இன்றும் ஒருவரின் உதவியுடன் முயன்றேன் பலனில்லை. பஸ்ஸில் வீடு போவோம். அதற்காகத்தான் வேளைக்கு வந்தேன். பிந்தி வந்தால் பஸ் கிடையாது. இந்த நிலையில், அருகில் பூட்டு திருத்தும் கடை, மோட்டார் வண்டி திருத்தும் கடை இருப்பதால் அங்கேபோய், யாராவது ஒருவரை கூட்டிவரச்சொன்னார்கள். இருட்டாதபடியால் முயல்வோம் என்ற எண்ணத்தில் வெளிக்கிட, இன்னொருவர் தேங்காய் எண்ணையை பூட்டிற்குள் விட்டுப்பார்க்க சொன்னார். அதன்படியே, தேங்காய் எண்ணையும் கொடுத்தார். உதவிக்கு வந்தவரும் நானும் முயன்றேன். என்ன ஆச்சரியம்,  பூட்டு உடனேயே திறந்தது..! வழமையாகப்பலமுறை எண்ணைவிட்டு பூட்டைத்திறந்து பார்த்த பல அனுபவங்கள் இருந்தும், இந்த இடத்தில் எண்ணையை எங்கே தேடுவது என்ற எண்ணத்தில் மனித வலுவை மாத்திரம் நம்பியே தோற்றேன்..!

தேங்காய் எண்ணையை, அவர்களது தரிப்பிட கடையிலுள்ள சுவாமி படவிளக்கிற்கு வைத்திருந்ததால், அது எனக்கு உதவியது.

பிரச்சனை தீர்ந்ததால் மகிழ்வுடன், வீடுவந்தேன். ஆரம்பத்தில் சொன்னது போல் ஒவ்வொரு இடங்களிலும், பிரச்சனைகளும், தீர்வுகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

வாழ்வே சுவாரசியமாகச் செல்கின்றது..!  சிக்கலான கேள்விக்கு விடை கிடைப்பது சந்தோசம் தானே..!

வாழ்வும் அப்படியே..!


ஆ.கெ.கோகிலன்

02-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!