சாரதி..!

 

 


நீண்ட நாட்களாக எனது காரை திருமலைக்கு கொண்டுவரவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. கடந்த திங்கள் அன்று மனைவியின் தம்பியின் குடும்பத்தைக் கூட்டிவரவேண்டிய சூழல் வந்தது. அதனை செய்ய அதிகாலை 2.45இற்கு எழுந்து, குளித்து, வெளிக்கிட்டு, காரை எடுத்துக்கொண்டு, மனைவியின் தம்பி வீட்டுக்குச்சென்று, அவர்களது  வெளிநாட்டுப்பைகளையும் ஏற்ற, காரே நிரம்பிவிட்டது..! ஒருவாறு அவர்கள் சமாளித்துகொண்டு இருந்ததால், திருமலைக்கு அவர்களைக் கூட்டி வரக்கூடியதாக இருந்தது.

வரும்போது, வழமைபோல் கோவிலைக்கண்டால் பய பத்தியுடன் ஒரு கும்பிடு போட்டுவிட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

ஊரிலுள்ள அம்மன் கோவில், கைதடிப்பிள்ளையார் மற்றும் முருகண்டிப்பிள்ளையார் இவர்களைத் தாண்டிப் போவது என்றாலே, அவர்களிடம் அனுமதி பெற்றுவிட்டுத்தான் செல்ல மனம் சொல்லும்..! அங்கு ஜயர் இருந்தாலும் அவர்களிடம் அபிஷேகம் செய்ய எனக்கு மனசு வருவதில்லை. ஒரு கற்பூரம் போதும். அந்த இடத்திலுள்ள சக்திக்கு நன்றி சொல்ல..! இவ்வாறாக வவுனியா வர நேரம் எடுத்தாலும், அங்குள்ள கடையொன்றில் சில பலகாரங்களை வாங்கிக்கொண்டு, மிகவிரைவாகச் சென்றதால், எமது நிறுவனத்திற்கு நேரத்திற்கு வந்து, கையெழுத்தைப்போட முடிந்தது. அது மாத்திரமன்றி, நேர இயந்திரத்தையும் சமாளிக்க முடிந்தது..!  பின்னர் அலுவலகத்திற்கு ஆட்கள் வரமுன்னர் மேலுடுப்பை மாற்றிக்கொண்டு, மனைவியின் தம்பி குடும்பத்தை நகரிலுள்ள அவர்களது வீட்டிற்கு கூட்டிச்சென்றேன். போகும்போது  காளியம்மாளையும் காண முடிந்தது..! அந்த சக்திக்கும் சலூட் அடித்துவிட்டு, மனைவியின் தம்பி குடும்பத்தை அவர்களது வீட்டில் இறக்கிவிட்டு, அலுவலகத்திற்குப் பறந்து வந்தேன். பின்னர் 10 மணிக்குத் தொடங்கிய மத்தியகுழுக்கூட்டம் முடிய நிறைய நேரம் எடுத்தது..! அதிகாலையே எழுந்ததால், தூங்கி, விழுந்து அதனைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அன்றைய நாள் காலையில் வாங்கிய வடை, கிழங்கு ரொட்டி மற்றும் ரோல்ஸ்  காலைச்சாப்பாடானது. மதியம் எனது அலுவலக ஊழியர்  ஒருவர், மொனராகலையில் இருந்து வரும்போது  கொண்டுவந்த மரவள்ளிக்கிழங்கு, தக்காளி மற்றும் மிளகாய் போட்ட ஒரு சலட் மற்றும் தேங்காய் துருவலில் செய்த உறைப்பற்ற வெள்ளைச் சம்பல், அத்துடன் இரண்டு சூடைமீன் புளி அவியலும் இருந்தது..! வேண்டாம் என்று சொல்ல, அவர் சாப்பிட்டுப் பார்க்கச்சொல்ல, மனமில்லாமல் சாப்பிட்டேன். பின்னர் தான் தெரிந்தது

மரவள்ளிக்கிழங்கை இப்படியும் சமைக்கலாம்.. சாப்பிடலாம்.. என்று..!

மதியச்சாப்பாடே தேவைப்படவில்லை. மாலை மழை பெய்தது. அதனால் சூழல் குளிர்ச்சியாகவும், மழைத்தூறல் விழுந்து கொண்டும் இருந்தன.  கார் இருந்ததால் பேக்கரி சென்று இரவிற்கும், அடுத்தநாள் காலைக்கும் வேறுபட்ட பேக்கரிப் பொருட்களை வாங்கிவந்து உண்டு, உறங்கினேன்.

அடுத்த நாள் எமது துப்பரவுத் தொழிலாளி ஒருவரின் பிறந்தநாள். அவர் எனக்குப் பலகாரங்களும், மதியம் கோழிக்கறிச் சாப்பாட்டையும் தந்தார். நிறைவான உணவுடன் நாள் கழிந்தது..!  அடுத்தநாள், வழமையான மதியக் கடைச்சாப்பாடு  கிடைக்காததால், அருகிலுள்ள இன்னோர் கடைச்சாப்பாடு கிடைத்தது.  இரவு மனைவியின் தம்பி வீட்டிற்குச் சென்றேன். அவர், என்னையும்  தனது குடும்பத்தினரையும் அழைத்துக்கொண்டு சிவன்கோவில் வீதியிலுள்ள துல்சி என்ற 4ம் மாடி உணவகத்தில் கோழிசூப், கோழிக்கொத்து, நாண் ரொட்டி என வாங்கியுண்டு, வயிறு வீங்கிப் படுக்கப்போனேன்..! அவர்கள் மட்டும் சைவத்துடன் இருந்தார்கள்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் 2023 இல் உயர்தரப்பரீட்சை எழுதி முடிவுவந்த ஆட்களுக்கான பதிவுகள் தொடங்கி நடைபெற்று வந்தன. எனது மகளின் வயதை ஒத்த பிள்ளைகளைப் பார்க்க எனது மகள்களாகவே தெரிகின்றார்கள்..!  சுனாமி வந்த காலத்தில் பிறந்த பிள்ளைகள், சுனாமியால் வந்த கட்டடத்தில்  படிக்க வந்ததை எண்ணக்காலத்தின் வேகம் புரிகின்றது..!

20 வருடங்களுக்கு முன், பார்க்கும் போது இளவயதுப் பெண்கள், பெண்களாகத்  தான் தெரிந்தார்கள்.. தற்போதும் அப்படித்தான்  பார்க்கின்றேன். ஆனால் அவர்கள் எல்லாம் மகள்களாகத் தெரிவது தான்,  காலம் செய்த மாயம் என எண்ணத்தோன்றுகின்றது..!

காலம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஆனால் காலம் எப்போதும் இருக்கும். நாம் காணாமல் போய்விடுவோம்  அல்லது இன்னொரு வடிவத்திற்கு மாறியிருப்போம். இது தான் உண்மை..! சில வேளைகளில் காலம், தேவையென்றால் திரும்ப எம்மைக் கூட்டிவரும்..!

வெள்ளிக்கிழமையான இன்றும்  கடந்த இருநாட்கள் போல் அமைய, நானும் அலுவலக வேலையை நிறைவுசெய்து, மனைவியின் தம்பி குடும்பத்துடன் யாழ்நோக்கிய பயணத்தை சாரதியாகத் தொடர்ந்தேன்.

 

ஆ.கெ.கோகிலன்

09-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!