ஆடு ஜீவிதம் (The Goat Life)..!
மலையாளத்தில் வந்த ஒரு வாழ்வியல் பாடத்தை தமிழில் மொழிபெயர்த்து
வைத்துள்ளார்கள்..!
உண்மைச் சம்பவத்தை தழுவிய கதை..!
வெளிநாடுகளுக்குப் போவது என்பது பலரது கனவு..! தற்போது அது
பல நன்மைகளை மக்களுக்கு கொடுத்துள்ளது. அதனைக் காலத்தின் தேவையாகக் கூட நாம் கருதலாம்.
எம்மிடம் அந்தக்கால ஆதீக்கத்தில் திருடியதை, மீண்டும் கஷ்டப்பட்டு திரும்ப நாட்டிற்கு
கொண்டுவரும் மக்களின் முயற்சியாகவும் இந்தச் சூழலைப்பார்க்க முடியும்.
அதேவேளை, வெளிநாட்டிற்குப்போய் அழிந்தவர்களைப் பற்றி நமக்குத்
தெரியாது. அதைப்பற்றி யாரும் கதைப்பதில்லை. பொருள் ஈட்டுவதையே நோக்கமாகக்கொண்டுள்ள
இப்போதைய சமூகத்தில் தொலையும் அன்பான,பாசமான பயனுள்ள வாழ்க்கைக்கு மாரியாதையில்லாமல்
போய்விட்டது..!
இந்தக்கதையில் நாயகன் நிம்மதியான, அன்பான வாழ்க்கை வாழ்ந்தாலும்,
தனது பொருளாதாரத்தை நிமிர்த்த மனைவி, தாய் இருவரையும் விட்டு வெளிநாடு செல்கின்றான்.
அவன் அதற்காகத் தனது பொருளாதாரத்தையே பணயம் வைக்கின்றான். பம்பாய் போய் அங்கிருந்து
அரபு நாட்டிற்குச் செல்கின்றான். அங்கு அவனுடன் ஒரு தம்பி மாதிரியான நண்பனும் கூட வருவதால்
விமான நிலையத்தை தாண்டும் வரை, அவர்கள் யாதும் தெரியாத அப்பாவிகளாக இருந்தார்கள். பின்னர்
ஒரு இரக்கமற்ற அரபுக்காரனிடம் மாட்டி, மொழி தெரியாமல் மிரண்டு, இடையில் தம்பி மாதிரியான
நண்பனை வேறோர் இடத்திற்கு கூட்டிச்செல்ல, இவன் தனித்து ஒரு ஆட்டுப்பண்ணையில் வந்து
அகப்படுகின்றான்..! அங்கே அவன் படும் துன்பங்களும் துயரங்களும் எழுத்தில் வடிப்பது
கடினம்..! மிக அற்புதமாக அனைத்தையும் காட்சிகளாகக் எமக்குக் கடத்தியிருக்கின்றார்கள்..!
இந்தப்படத்தில் பங்குபற்றிய அனைத்துக் கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்..!
சில காட்சிகள் மனதை விட்டு அகல மறுக்கின்றன..! தண்ணீர் எமக்கு
இயற்கையாக கிடைக்கும் ஒன்று. அதனை நாம் கண்டுகொள்வதே இல்லை. எனக்கு திருகோணமலையில்
இருந்தபோது தான், தண்ணீரின் அருமை புரிந்தது..! நாம், தண்ணீர் இருக்கும் இடத்தில் வாழ்வது
என்பதே மிகப்பெரிய கொடுப்பினை..!
பணம் பணம் என்று அலைவதைவிட, எம்மால் இயன்ற முயற்சிகளை இங்கே
போட்டால், நாடும் நாமும் இன்னும் சிறப்பாக இருக்க முடியும் என்பது என்றும் உண்மையே..!
மொழியே தெரியாக இடங்களில், அதுவும் மிருகங்களோடு வாழும் இரக்கமற்ற
மனிதர்களிடம் தொழிலிற்காக மாட்டுவது என்பது மிகக்கொடுமையானது.
அரபு நாடுகளில் சட்டங்கள் எப்படியிருக்கின்றன..? என்பதைப்
பார்க்க வேதனையாக உள்ளது.
ஒரு ஆபிரிக்க மனிதன், இவர்கள் இருவருக்கும் உதவும் காட்சிகள்
மனிதம் எங்கும் இருக்கின்றன என்பதை நன்றாக உணர்த்தியிருக்கின்றார் இயக்குனர்..!
பாலை வனங்களில் மண் நிறப் பாம்புகளும், பிணம் தின்னும் கழுகுகளும்,
மணற்புயலும் உண்மையாக இருப்பதைப்போல கணினி ரீதியாக படைத்துள்ளார்கள்..!
ஆடுகள், ஒட்டகங்களுடன் வாழும் வாழ்க்கை, ஒரு அழகான மனிதனை
எப்படி விலங்காக மாற்றி, அவனை நோயாளியாகவே ஆக்கிவிடுகின்றது..!
நாயகனின் நினைவுக்காட்சிகளாக வரும் காட்சிகள் மனதைக் குளிர்விற்கின்றன..!
மனைவியுடன் நடக்கும் உரையாடலும், சீண்டலும் நிஜக்குடும்பத்தை கண்ணுக்குள் கொண்டுவருகின்றன..!
பாலை வனத்தில் மக்கள் நடமாடும் வீதியை கண்டுபிடிக்க அவர்கள்
படும் பாடு, பார்க்கும் எங்களுக்கே நாக்கு வரண்டுவிடுகின்றது..! சுற்றியிருக்கும் இடங்கள்
எல்லாம் மணலும், வெயிலுமே..! மூவரும் நடந்து நடந்து களைத்து, சாகின்ற அளவிற்கு வருகின்றார்கள்..!
தம்பி மாதிரியாக வந்தவன், பாலை வனத்தை கடக்கும் முயற்சியில்
இறக்க, உதவிய ஆபிரிக்க மனிதனும் மறைய, இறுதியில், நாயகன் ஆபிரிக்க மனிதன் வைத்துச்சென்ற
நீரையும், பேரிச்சம்பழத்தையும் உண்டு விழும்போது, தவறிய போத்தல் உருண்டு உருண்டு ரோட்டிற்கு
வரும்போது, நம்பிக்கை பிறந்தாலும், அதில் பயணிக்கும் மனிதர்கள், இவனின் கோலத்தைப் பார்த்து
உதவுவதைத் தவிர்க்க, இறைவனைப்போல ஒரு அரபுக்காரன் காரில் அழைத்து நகரில் கொண்டுபோய்
விடுவது, ஒட்டுமொத்த அராபிகளிடம் ஏற்பட்ட வெறுப்பை நீக்க உதவியது..!
உணவு தயாரிக்கும் முறையாக, ரொட்டியைச்சுட, சாம்பலுக்கள் தட்டிய
மாவைப்போட்டு வாட்டுவதும், அதை நீருடன் தொட்டு உண்பதும், ஆட்டுப்பாலை அப்படியே குடிப்பதும்,
அந்தக்கொடுமையான அரபுக்காரனுக்கு ஏதோ இரக்கம் வந்து அதனை கதையின் நாயகனுக்கு கொடுப்பதும் அவர்களது வாழ்வியலைக்காட்டின..!
நாயகனைப்போல் முன்பு வேலைக்கு வந்து, மாட்டிய ஹிந்திக்காரன்
ஒருவன், தளர்ந்து, நோயாளியாகி இடையில் மரணமாவதும், அவனைப்போல் இல்லாமல் தான் எப்படியாவது
தப்ப வேண்டும் என்று நாயகன் முயல்வது நம்பிக்கையைக் காட்டியது.
நாட்டைவிட்டு, வெளியேற முற்பட்டாலும் அங்குள்ள, நாட்டைவிட்டு
வெளியேறும் நடைமுறைகள் பயத்தை ஏற்படுத்தின.
அரேபியர்கள், ஒரு சிறைச்சாலைக்குள் வந்து, தமது வேலைக்காரர்கள்
தப்பி வந்தால், அவர்களைக் கண்டுபிடித்து, அடித்து, இழுத்துப்போவது எவ்வளவு துன்பமானது
என்பது இந்தக்காட்சிகளைப் பார்க்கும்போது புரிந்தது..!
தங்களது ஒப்பந்தத்தில் இல்லாத நபர் என்பதால் நாயகன் இறுதியில்
தப்புவது பெரிய நிம்மதியைத் தந்தது. இல்லை என்றால் மீண்டும் அந்தப் பாலைவன வாழ்க்கைக்குச்
செல்வதைத்தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.
இப்படிச் சட்டத்திற்கு முரணான மனிதர்கள், மனிதர்களை நடத்துகின்றார்கள்
என்றால், மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் என்ன செய்கின்றன..? ஒவ்வொரு முதலாளிகளையும்
அவை கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியிலான தீர்வுகள்
கொடுக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஏஜென்ஸிக்காரர்களிடம் மாட்டி வாழ்வை
இழந்த அனுபவம் எனது குடும்பத்திலும் உண்டு..!
முறையான, வழியில் தொழிலைப்பெற்று அதற்கான மொழித்தகுதி, தொழிற்திறன்
என்பவற்றுடன் சென்றால் இவ்வாறான சிக்கலில் மாட்டாது தவிர்க்கலாம்.
இந்தத்திரைப்படம், ஒரு உண்மைச்சம்பவத்தை வைத்து எழுதப்பட்டு
மலையாளத்தில் வந்த கதையில் இருந்து உருவாக்கப்பட்டது..! அதிலுள்ள பல விடயங்கள் இங்கு
காட்சிப்படுத்தப்பட்டதா என்பது கேள்விக்கூறியே..! கதையை வாசித்தால் தான் உண்மை புரியும்.
சிலவேளை இன்னும் வலிக்கும்..!
நாயகன், அவனுக்கு ஏற்பட்ட வடுக்களில் இருந்து மீண்டு, நம்பிக்கையுடன்,
அதேவேளை தாய், மனைவி மற்றும் பிறந்த பிள்ளைக்கு என்று, ஒரு பொருளும் இல்லாமல் ஊருக்குப்போவதாக
படம் முடிவது, நெஞ்சில் வலித்தது..!
பல விருதுகளை அள்ளவேண்டிய படம். பிருதிவிராஜின் நடிப்பு நிஜமாகவே
இருந்தது..! கௌரவிக்கப்பட வேண்டியவர். அவர்
மாத்திரமன்றி, அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக்கலைஞர்களும் சிறப்பாக பங்காற்றியிருந்தார்கள்..!
இப்படியொரு படத்தைக்கொடுத்து, பல யதார்த்தங்களைப் புரியவைத்ததற்காக
இயக்குனர் ப்ளெஸ்ஸியை (Blessy), நிச்சயம் பாராட்ட வேண்டும்.
பிறந்த ஊரில் கஞ்சியைக் குடித்து வாழும் வாழ்க்கை எவ்வளவோ
மேலானது என்பதை, இப்படி பணம் சம்பாதிக்கப்போய்
அல்லல்படுவது மாத்திரமன்றி, எத்தனை உயிர்கள் மண்ணில் புதைந்தனவோ, பனிக்கட்டிகளில் உறைந்துள்ளனவோ,
கடலில் தாண்டு இருக்கின்றனவோ அல்லது காடுகளில் சிக்கி விலங்குகளிடம் உணவாக மாறியுள்ளனவோ
இயற்கைக்கே மட்டுமே தெரியும்.
படைத்த இடத்தில், பாசத்தோடு, பாடுபடுவதும், பயனுடையவர்களாக
இருப்பதும் பாக்கியமே.!
ஆ.கெ.கோகிலன்
29-07-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக