இந்தியன் 2

 

 


நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுவதற்கு யார் காரணம்..? சிலர், அரசியல் வாதிகளைக் கைகாட்டுவார்கள்..? சிலர், அரச ஊழியர்களைக் காட்டுவர்..? சிலர் பணக்காரர்களை அதுவும் வியாபாரங்கள் செய்து மக்களின் பணத்தை அள்ளும் மனிதர்களை நோக்கி கைகாட்டுவார்கள்..?  எத்தனை பேர் நாமும் கூடக்காரணம் என்பதை உணர்ந்துள்ளார்கள்..?

இந்தப்படத்தில் இந்த நிலையை விளக்க முற்பட்டு, கடைசியில் மக்கள் அனைவரும் ஊழல் செய்யாமல் வாழமுடியாது என்பது போலவும், ஊழலை ஒழிக்க நினைக்கும் இந்தியன் தாத்தாவை கல்லாலும், தடிகளாலும், கிடைத்ததை எல்லாம் வைத்து, அந்த முதியவரைத் தாக்க வருவதாகவும் சொல்லி, ஊழல், மக்களை முழுங்கி விட்டது என்பது போலவும், ஊழல் எதிர்பவர்களை நோக்கி, மக்கள் வெறுப்பது போலவும் காட்டியிருப்பது எங்கேயோ இடிக்கின்றது..!

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகும் போது, நான் குரங்கு தான் பிடிக்கப்போனேன் என்று சொல்வது போல் இருக்கும், இந்தியன் 2 எனக்குப் பிடிக்காமல் போனதற்குரிய முக்கிய காரணமே, கதை மையத்தில் இருந்து நழுவவிட்டது தான்.

1996இல் வவுனியாவில் இணைந்த பல்கலைக்கழகத்தில் நான் வேலைசெய்தபோது தியேட்டரில் இந்தியன் 1 பார்த்தேன். அந்த நேரம் அந்தப்படம் மிகச்சிறப்பாகவும், ரசிக்கும் படியும் இருந்தது.

ஏறக்குறைய 30 வருடங்களின் பின்னர் அதே தாத்தா உயிரோடு இருப்பதாகவும், அவரை கூப்பிட்டால் தான் ஊழலை ஒழிக்க முடியும் என்று இளைஞர் சமூதாயத்தைச் சொல்ல வைத்தது கேவலமாக இருக்கின்றது.

இளைஞர்கள் இறங்கிச் செய்யவேண்டிய வேலையை ஒரு வயது முதிர்ந்த கிழவன் வந்து தான் செய்ய வேண்டும் என்று எண்ணுவதே யாதார்த்தத்திற்கு முரணானது..!

சரி அப்படியொரு தேவையிருந்தாலும், அவரை ஒரு ஆலோசனை வழங்கக்கூடியவராகக் காட்டி, இளைஞர்களுக்கு வர்மக்கலைகளைச் சொல்லிக்கொடுத்து, அவர்கள் மூலம் ஊழல் வேட்டையைச் செய்திருக்கலாம்.

இதில் உண்மையாக வயதான  கமலை இன்னும் கிழவனாகக் காட்டி, அது மாத்திரமன்றி அவரை கிழவன் அல்ல, இளைஞன் என்பது போல் பில்டப் கொடுத்து உடலைக்காட்டி அங்கேயுள்ள பல இளைஞர்களுடன்  சண்டைபோட வைத்தது வெறுப்பாக இருந்தது. சங்கரின் சரக்கு எங்கே போய்விட்டது..?

அதுபோதாததற்கு, ஒற்றைச்சில்லு மோட்டார் வண்டியில் ஏறிச்சாகசங்கள் செய்வது வெறுப்பின் உச்சம். ரசிக்க முடியவில்லை.  ரெயினைத் திருப்பிக்கொண்டு வருவது, கடுப்பையே தந்தது..! இடையில் நிற்பாட்டிவிட்டு இறங்கித்தப்புவதற்கு பதிலாக ஸ்ரேசனில் இறங்கியது தேவையில்லாத காட்சி.

இறந்த விவேக், மனோபாலா மற்றும் மாரிமுத்து  மூவரும் படத்தில் வரும்போது கவலையாக இருந்தது.

சில காட்சிகள் நன்றாக இருந்தாலும், கதை உயிரோட்டத்தில் தவறுகள் இருக்கின்றன. லைக்காவின் பணத்தை விரயப்படுத்த எடுத்த படம்போல் இருக்கின்றது.

அதில் 3ம் பாகம் வேறு வர இருப்பதாகச் சொல்லப்படும் போது, அதனை எடுத்து நீங்களே பாருங்கள் எனச்சொல்லவேண்டும் போல் தோன்றியது.

கமலை இவ்வாறு கேவலப்படுத்தி மேக்கப்போட்டு வெறுக்க வைக்கக்கூடாது.  சித்தார்த், ராகுல் ப்ரித்தி சிங், பிரியா பவாணி போன்றோர் நன்றாக நடித்தாலும், காட்சிகளின் வலுவற்ற தன்மையால், மனதைத்தொடவில்லை.

தாயார் இறந்ததைப் பார்த்து கலங்கி,  ஊழலை ஆதரிப்பது என்ன நியாயம்..?

முதல் பாகத்தில் மகனையே கொன்ற இயக்குனர், இரண்டாம் பாகத்தில் ஊழல் செய்த கணவனுக்கு தாயார் துணைநின்று, தூக்குப்போட்டு  செத்தது கணவனுக்கு கொடுத்த தண்டனையாக இருக்கவேண்டுமே தவிர, ஊழலை வெறுக்கும் மகனை ஊழல்வாதி ஆக்க அல்ல என காட்டவேண்டும். இந்த முரண் எனக்குப் பிடிக்கவில்லை. இயக்குனர், ஊழலே இனி தர்மம் என்பது போல் சொல்ல விரும்புவது பெரும்பாலான மக்கள், அந்தப்பாதையில் செல்வதாலோ என்னவோ..?

பிரமாண்ட இயக்குனர் சங்கர், நல்ல புதிய கதையுடன் இளைய நடிகர்களை வைத்து, இயக்க வேண்டும்.

படத்தில் தொழில்நுட்பங்கள், ஒளிப்பதிவு, இசை எல்லாம் சிறப்பாக இருந்தாலும், கதையின் மையம் நழுவியதால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்..!

 


ஆ.கெ.கோகிலன்

17-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!