தூய்மை பணியாளர்கள் சிலர் விலத்தல்..!

 

 


சிலர் விதிகளை தமக்கு சார்பாக வளைப்பதால், சரியாகப் பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல் வந்துவிடும்.

நாம் எப்படி வளர்க்கப்படுகின்றோமோ அப்படியே தான் எமது எண்ணங்களும் சிந்தனைகளும் இருக்கும்..!

இப்படித்தான் இருக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதனை ஏற்பவர்களும் இருக்கின்றார்கள்..! எதிர்ப்பவர்களும் இருக்கின்றார்கள்...! மூன்றாவதாக ஒரு நபர்,  அதை எடைபோடும்போது, அவரது நியாயம், அந்த இரண்டில் அவரது வளர்ப்போடு தொடர்பு பட்டதை மட்டுமே ஈர்க்கும்..!  அதனையே சரி என நினைப்பார்.

பச்சைக்கண்ணாடி போட்டுப்பார்த்தால் எல்லாம் பச்சை..! சிவப்புக்கண்ணாடி போட்டால் எல்லாம் சிவப்பு..!

அதனைக் கழட்டிப்போட்டு பார்த்தால் தான் உண்மை நிறம் தெரியும்.

அப்படியான சூழலில்  தான் எமது நிறுவனத்தில் கடமைபுரியும் சில தூய்மைப் பணியாளர்கள் இருந்துள்ளார்கள்..! சிலரின் அறியாமைகளைத் தமக்கு ஆதரவாக மாற்றி அதன் மூலம் நன்மை அடைவதையும், அறியாமையுடன் வைத்திருந்து, அவர்களை மேலும் கீழே கொண்டுசென்று விடப்படுவதைக்கூட அறியாமல், அல்லல்படுபவர்களை நான் பார்த்து வேதனைப்படுகின்றேன்.

நான் முதலிலே சொன்னது போல் விதிகள் இருந்தால் அதனை பின்பற்றுவதுடன், மற்றவர்களுக்கும் அதனைத் தெரியப்படுத்தி, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். சில சிக்கல்களை முதலே தெரிந்தால், அவர்களால் சரியான முடிவுகளை எடுக்க முடியும். வெளிப்படையாகக் கதைப்பதால் பல தீமைகளைத் தவிர்க்கலாம். உண்மையான காரணங்களை மறைத்துக்கொண்டு, தமது நன்மைக்காக சிலரைச் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துபவர்கள் எங்கும் இருக்கின்றார்கள்..! அதேபோல், அதனை தெரியாதது போலும், ஏமாறுவது போன்று ஏமாந்தும் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வர்த்தகத்திறனையும் சிலர் கொண்டுள்ளார்கள்..! சாணக்கியத்தனம் மிக்க மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டியது சாதாரணமானவர்களின் முக்கிய நிலைமை.

நீண்ட காலமாக வேலைசெய்த துப்பரவுத்தொழிலாளர்கள் சிலர், எனது விதிகளின் இறுக்கத்தால் வேலை செய்யமுடியாது எனக்கடிதத்தைக் கொடுத்துவிட்டு, நின்றுவிட்டார்கள்..!  அவர்களுக்கு எவ்வளவோ சொல்லியும், அவர்களால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு நிறுவனத்தில் பணி புரியும் நிரந்தரப்பணியாளர்களையும், கம்பனிகளின் கீழ் வேலைசெய்யும் பணியாளர்களையும் சரியான முறையில் வழிப்படுத்த வேண்டும். சில சமயம், கம்பனிகளில் வேலை செய்பவர்கள்  சிலர் ,கம்பனி முதலாளிகளைவிட நிறுவன அதிபர்களிடம் நல்ல பெயரைப்பெற முனைவர்..! அதற்காக எந்த எல்லைவரை சென்றும் பல காரியங்களைச் செய்வார்கள்.  தமது கடமைகளைத்தாண்டிய வேறு எந்த வகையான வேலைகளைச் செய்தாலும் அதனை நியாயப்படுத்த முடியாது. கடமைக்கான வேலைகளில் கேள்விகள் எழும்போது தக்க பதில்களைக் கொடுக்கத்தவறின்  விளைவுகள் விபரீதமாக மாறி, அவர்களது வேலைகளையே இழக்க நேரிடும். இங்கே அந்த நிலை வரமுதலே அவர்களாகவே வேலையை விட்டு நின்றது ஆச்சரியமானதாகவும், நியாயமானதாகவும் இருக்கின்றது.

அணைவுகளின் ஊடாக, அவர்களை அறியாமலே தவறுகள் செய்வதும், அந்தத்தவறை இன்னொருவிதத்தில்  நிறுவனத்திற்கு இலாபமாக காட்டினாலும், செய்ய வேண்டிய வேலையை விடுத்து,  வேறுபட்ட காரியங்களை ஆற்றுவது குற்றமாகக் கவனிக்கப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே அரச விதிகளில் கவனத்துடன் நடக்க வேண்டும். இல்லை என்றால், அதற்கேற்ப செய்யவேண்டிய முறைகளைப் பின்பற்றி, தமது தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும். எப்போதுமே திருந்துவதற்கு ஒரு வாய்ப்புக்கொடுக்க வேண்டும். அதனை மீண்டும் சரியான முறையில் பின்பற்றாது விட்டால், அடுத்த தடவை தண்டனையை நிச்சயம் வழங்கலாம்.  மாறாகத் தொடர்ந்து பொறுத்து இருப்பதும், தீமையினையே நிறுவனத்திற்கும், நிறுவனத்தலைமைக்கும் ஏற்படுத்தும்.

 

ஆ.கெ.கோகிலன்

05-08-2024

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!