உதவிப் பதிவாளர்
நான் திருகோணமலையில் வேலைசெய்ய காலத்தில் பதிவாளராக வந்த சகோதர மொழியைச் சேர்ந்த, எனது சகோதர மொழி நண்பரின் மனைவி, ஏறக்குறைய 15 வருடங்களுக்கு மேலாக இங்கு தனது சேவையை ஆற்றியுள்ளார்..!
வேறுமொழி பேசினாலும் எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். எந்த இனப்பிள்ளைகள்
என்றாலும் தன்னால் இயன்ற உதவியை செய்ய முனைபவர். ஒவ்வொரு நாளும் எவ்வளவு துன்பங்கள்
இருந்தாலும், நோய்கள் இருந்தாலும் அதனைக்காட்டாது தன்னை நன்றாக அலங்கரித்து, பார்ப்பவர்களை
பரவசப்படுத்தும் விதத்திலேயே நடப்பவர். அதனால் அவரை பெரும்பாலும் எல்லோருக்கும் பிடிக்கும்.
கடந்த அரை வருடத்தில், நான் சிலவேளை இடமாற்றம் பெற்று கொழும்பு போகலாம் என நினைத்தார்களே
தவிர அவருக்கு பதவி உயர்வோடு இடமாற்றம் வரும் என்று யாரும் நினைக்கவில்லை..! பதவி உயர்வுக்கு
அவர் தகுதி படைத்தாலும் இடமாற்றம் செய்யவேண்டிய தேவையில்லை. எமக்கும் வேறு எந்தப்பதிவாளரும்
இல்லை. அப்படியான சூழலில் அவர் சென்றது இன்று அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. இருந்தாலும்
ஒருவரின் முன்னேற்றம் வரும்போது சில கஷ்டங்களும் வரும் தான். அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கூழுக்கும் ஆசை..! மீசைக்கும் ஆசை..! என இருக்கக்கூடாது. சில சமயம் ஒன்றைப் பெறுவதற்கு
ஒன்றை இழக்க வேண்டிய சூழல் வரலாம். உதாரணத்திற்கு நன்றாக படிக்க வேண்டும் என்றால் நன்றாக
நித்திரை கொள்ள முடியாது..! நித்திரையைத் தியாகம்
செய்தால் தான் நிறைவான கல்வியைப் பெறமுடியும்.
இப்படி வாழ்வில் பல சந்தர்ப்பங்கள் வரும். அந்தந்த சூழ்நிலைகளுக்கு
ஏற்ப அவரவர்கள் தமக்கு எது வேண்டுமோ அதனைப்பெற சிலவற்றைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.
வேலை வேண்டும் என்பதால் நான் குடும்பத்தை தியாகம் செய்து திருகோணமலையில்
உள்ளேன். வேலை வேண்டாம் என்றால் நான் குடும்பத்துடன் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியும்.
ஒன்றைப்பெற ஒன்றைத் தியாகம் செய்வது இந்த யுகத்தில் தவிர்க்க முடியாது.
எமது சமூகமே சொந்த இருப்பிடங்களையும், உறவுகளையும், ஏனைய வசதி வாய்ப்புகளையும் இழந்தே
வெளி நாடுகளில் வாழுகின்றார்கள். நன்றாக இருக்கின்றார்களோ இல்லையோ தியாகம் மட்டும்
செய்துள்ளார்கள். தாயை விட்டு யாராவது மாற்றன் தாயை நாடுவார்களா..? அப்படியான சொந்தத்தாய்
நாட்டை விட்டு, வேறு நாடுகளை மாற்றன் தாய் போல் பாவித்து வாழ்கின்றார்கள். இதுவும்
ஒரு வித தியாகமே..! ஒரு மனிதனின் வாழ்க்கையில்
எது தேவையோ அதனைப்பெற அவன் எந்தத்தியாகங்களையும் செய்வான்.
இன்று சில மாணவர்கள் பதிவாளரைத் தேடி வந்தார்கள். அவர் இல்லாததால்
அவரது சேவைகள் தடைப்பட்டன. உடனே நான், அந்த சேவைகளை எனக்குக் கீழ்கொண்டுவந்து செய்து
முடித்தேன். அத்துடன் தலைமையகத்திற்கும், இவ்வாறு இங்குள்ள வேலைகளைச் செய்ய ஒரு பதிவாளரை அனுப்பும்படி கோரிக்கையைவிடுத்தேன்.
அது நடைபெறாதுவிடின், அந்த வேலையைச் செய்யக்கூடிய தகுதியுடைய இருவர்களை
அழைத்து, அவர்களுடன் கதைத்து அதில் இருந்து ஒருவரை பதில்கடமை ஆற்றப் பணித்ததுடன், அதற்கான
அனுமதியைப் பெறவும் தீர்மானித்துள்ளேன்.
அண்மைக்காலமாக பலர் இடம்மாறிச் செல்கின்றார்கள்..! இங்கு கூட ஒரு முகாமைத்துவ உதவியாளர் ரூமேனியா நாட்டிற்குச்சென்றார். இன்னோரு பாதுகாப்பு அதிகாரி
வியட்நாம் செல்லக்காத்து இருக்கின்றார்..! உதவிப்பதிவாளர் கண்டி செல்கின்றார்..!
இவ்வாறு இடம்பெயர்வுகள் நடைபெறக்கூடிய காலமாக இருப்பது, எமக்குக் கவலையையும்,
இன்னோர் விதத்தில் அவர்களுக்கு நன்மையையும் தருகின்றன..! எல்லாம் நன்மைக்கே..!
ஆ.கெ.கோகிலன்
24-07-2024
கருத்துகள்
கருத்துரையிடுக