இரத்தம் சிந்தல்..!

 

 


அண்மையில் எமது மாணவர்கள் ஒழுங்கு செய்த இரத்த தான நிகழ்வில் நான் இரத்தம் கொடுக்கச் சென்றேன். முன்பு யாழில் வேலை செய்த காலத்திலும் கொடுத்துள்ளேன். 50 வயதிற்குப் பிறகு, காலில் நரம்பு சம்பந்தமான ஒரு பிரச்சனையும் வந்ததால், பின்னர் தவிர்த்துவிட்டேன்.

ஆனால் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த ஆசை தான் என்றாலும் உள்ளுக்குள் பயமும் இருந்தது. தற்போது தனியாக அங்கே இருப்பதால் ஏதாவது மயக்கம் போன்ற சம்பவங்கள் நடந்தால், என்னால் பலருக்கு கஷ்டம் கொடுக்கவேண்டி வந்துவிடும். பொதுவாக நான் யாரையும் சார்ந்தோ, அல்லது அவர்கள் என்னில் சார்ந்தோ இருக்க விடுவதும் இல்லை. பழக்குவதும் இல்லை. இயற்கை என்னையும் அவ்வாறே தகவமைத்தது..!

இறுதியாக சற்றுத்துணிவுடன் வைத்தியரிடம் காட்டி, நான் இரத்தம் கொடுக்க முடியுமா என்று கேட்க, அவர் எனது இரத்த அழுத்தத்தைப் பார்த்துவிட்டு, இரத்த அழுத்தம் கூடவாக இருக்கின்றது. நீங்கள் இரத்தம் கொடுக்கக்கூடாது. அதுமாத்திரமன்றி, இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை எடுப்பதுடன் அதற்கான மாத்திரைகளையும் உட்கொள்ள வேண்டும் என்றார்..! எனது நிறுவன கல்விசார் ஊழியர்களும் அதையே சொன்னார்கள். நான் எனது உடற்பயிற்சி, சாப்பாடு, ஏனைய உடல் நிலைகள் தொடர்பான கட்டுப்பாட்டால், இயற்கையான முறையில் ஆரோக்கியமாக இருக்க முனைவேன். அவ்வாறு நடந்ததும் உண்மை..!

நான், திருகோணமலைப் புதிய கட்டடத்தில் முதன் முதலாகப் பயன்படுத்திய கணினி ஆய்வுகூடக் கதவில் கைவிரல் நெரிபட்டு, அண்மையில் காயப்பட்டது ஒரு கேள்வியை மனதில் ஏற்படுத்தியது..!

பலியெடுப்பது, இரத்தம் சிந்துவது என்பது முந்தைய காலங்களில் ஒரு வழிபாடாகவே இருந்து வந்துள்ளது. நாகரீகம் வளர வளர அதன் தேவையில் கேள்வியெழ, தற்போது குறைந்துவிட்டது..! இருந்தாலும் சில இடங்களில் இப்போதும் பலியெடுப்பது தொடர்கின்றது..!

நான் தொடங்கிய அந்த ஆய்வுகூடம் ஏறக்குறையக்குறைய 15 வருடங்கள் கழித்து எனது கையைக் கடித்து கிழித்துள்ளது..! எனது இரத்தம் அந்த இடங்களில் சிந்தி, என்னால் இயன்ற இரத்த தானம் அந்த இடத்தில் இவ்வாறாக நடந்துள்ளது..!

எனது தொடக்கமும், முடிவும் திருகோணமலை உயர்தொழில்நுட்பவியல் நிறுவனம் எனபதை ஓரளவிற்கு உணர முடிகின்றது. இருந்தாலும் இன்னும் சில வருடங்கள் பொறுத்தால் தான் இயற்கையின் எண்ணம் எனக்கே புரியும்..!

என்ரபிறைஸ் ஆர்க்கிரெக்ஸர் Enterprise Architecture), செயற்றிட்ட முகாமைத்துவம் (Project Management – MS Project & SPSS) என்ற இரு பாடங்களே அங்கு படிப்பித்ததாக ஞாபகம். யாராவது எனது மாணவர்கள், இதனைப் பார்த்தால் அல்லது வாசித்தால் தெரியப்படுத்தவும்.

2024இல் இன்னமும் அந்த கணினி ஆய்வுகூடத்தில் பாடங்கள் படிப்பிக்கவில்லை என்றாலும், செயற்றிட்ட மதிப்பீடுகளில் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டதால் அந்த அறைக்குள் அடிக்கடி போய்வர வேண்டிய சூழல் வந்தது.

அது, திருகோணமலை உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கு  எனது சில துளிகள் இரத்தத்தை அங்குள்ள அசையும் மற்றும் அசையா நுண்ணுயிர்களுக்கு கொடுக்க உதவியது.

மனிதனே இறுதியில் மண்ணாவது தான்..! இப்ப தான் சில துளி இரத்தத்தை கொடுத்துள்ளேன். இனி போகப்போக இயற்கையே தேவையானதை என்னிடம் இருந்து எடுக்கும். இது எனக்கு மட்டுமல்ல..! இந்த உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்கும் இதேநிலை தான்..!

ஆக கவலைப்பட ஒன்றுமில்லை..! இவ்வாறானவற்றைக் கடந்து போய், அடுத்ததைப் பார்க்க வேண்டும்.

 

ஆ.கெ.கோகிலன்

03-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!