கல்கி..!
அமிதாப் பச்சன், கமலஹாசன், பிரபாஸ் என்று இந்திய சினிமாவின்
உச்ச நட்சத்திரங்கள் பலர் சேர்ந்து நடித்த படம் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு இந்தப்படத்தின்
மீது இருந்தது.
இற்றைக்கு 6000 வருடங்களுக்கு முன்னர் நடந்த மகாபாரதக்கதையின்
தொடர்ச்சி போல், வரும் காலத்தில் நடக்கும் சூழலையும் இறைவன் ஒரு பெண்ணில் கருவாக உருவாகி
வருவதையும், அதையொட்டி பல நல்ல சக்திகளும், தீயசக்திகளும் மோதிக்கொள்ளும் நாகரீக-புராதான
சண்டைகளைக்கொண்ட ஒரு திரைப்படமாக எடுத்து, எம்மை அடுத்த பாகம் வரை காக்க வைத்துள்ளார்கள்..!
சில காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. சில காட்சிகள்
சற்று வேடிக்கையாகவும் இருக்கின்றன.
“கொம்லெக்ஸ்” என்ற பகுதி எல்லா வசதிகளையும் கொண்ட சொர்க்கம்
மாதிரியும், ஏனையவை அழிவடைந்த வறண்ட மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளாகக் காட்டுகின்றார்கள்.
இதற்குள் ஒரு பகுதியில் நல்லவர்கள் இறைவன் வருவதை எதிர்பார்த்து, “சம்பாலா” என்ற ஒரு
குறித்த இடத்தில் மறைந்து வாழ்கின்றார்கள்..!
கொம்லெக்ஸிலுள்ள “சுப்ரீம்” என்ற அதிசக்தி வாய்ந்தவர், தனது
நீண்ட ஆயுளுக்காக சீரம் என்கின்ற பதார்த்தத்தைக் கற்பம் தரித்த பெண்களிடம் இருந்து
எடுத்து, தனது உடலைப்புத்துணர்ச்சிப்படுத்துகின்றார். அத்துடன், நீண்ட காலம் தான் வாழ,
உலகைத் தனது கைக்குள் போட்டு, எல்லோரையும் படாதபாடு படுத்துகின்றார்..!
துரோணாச்சாரியாரின் மகன், செய்த பாவத்திற்காக சாகாவரம் பெற்று,
அழுந்தி அழுந்தி அவதிப்படாமல் இருக்க, கலியுகத்தில் திரும்ப இறைவன் ஒரு பெண்ணில் சிசுவாக
வருவார் என்றும், அவளைக்காத்து அந்த சிசுவால் சாப விமோசனம் கிடைக்கும் என்பதாகவும்
சொல்லப்படுகின்றது..!
காண்டீபன், கர்ணன், கண்ணன் இடையிடையே வந்து, புராணத்தையும்
நவீனத்தையும் தொடர்பு படுத்துகின்றார்கள்..! இவர்களுக்கு உதவக்கூடியவராக வரும் பிரபாஸ்,
கர்ணனின் அம்சமாகக்காட்டுகின்றார்கள்..! அர்சுனனாக தெலுங்கு நடிகரான விஜய்தேவரகொண்டாவும், கர்ணனுக்குப் பயிற்சியளிக்கும் பரசுராமர் மாதிரி,
மலையாள நடிகர் துல்கர் சல்மானும் நடித்து இளசுகளை கவர முயன்றுள்ளார்கள். குறிப்பாக
இப்படியான அணுகுமுறைகளூடாக எல்லா மாநிலங்களையும் கவர் பண்ணுகின்றார்கள்..!
கடவுளைக் கருவாகச் சுமக்கும் பெண்ணாக தீபிகாபடுகோனும் நிஜ
வயிற்றுடன் நடித்ததாகக் கூறுகின்றார்கள்..! அப்படி என்றால், ரந்தீர் சிங்கின் பிள்ளை தான் கடவுளா..?
சரி, நன்றாக உணர்வுகளைத் தூண்டி மகாபாரதத்திற்கும், நவீன
காலத்திற்கும் ஒரு இணைப்பை ஏற்படுத்தி, காசி என்ற இந்திய நகருக்குப் பெருமை சேர்க்கின்றார்கள்.
தண்ணீர் அற்ற வறண்ட பிரதேசங்களையும், அங்காங்கே தெரியும்,
ஏதேதோ பழுதான இயந்திரங்கள், கட்டிடங்கள் எல்லாம் முன்பு நல்லா இருந்த நகரங்கள் என்பது
போலவும், சுப்ரீமால் நாசமானதாகவும் காட்டுகின்றார்கள்.
தற்போது கூட, உலகை
ஆள்பவர்கள், உலகிலுள்ள ஏனைய அனைவரது அனைத்து உடமைகளையும் உயிர்களையும் சுரண்டியே
வாழ்ந்து வருகின்றார்கள்..!
உண்மையில் இப்படி நடந்தால், நன்றாக இருக்கும் என்பது போல
படம் எடுத்தது பாராட்டக்கூடியதுடன், அனைவரையும் பார்க்கத்தூண்டுகின்றது..!
சில காட்சிகள் வெறுப்பை ஏற்படுத்துகின்றன. அமிதாப் பச்சன்,
வந்த பிறகே, கதை சற்று நன்றாக நிமிர்கின்றது..! அதுவரை பிரபாஸ் ஜோக்கர் மாதிரிச் சேட்டைகள்
பண்ணிக்கொண்டு, சண்டைகள் பிடித்து, தான் ஒரு ஹீரோ என்பதை சொல்வதாகத் தெரிகின்றது.
மகாபாரதத்தைப் பொறுத்தவரை, அசுவத்தாமாவும், கர்ணனும் சண்டைபோடும்போது,
தீயவர் பக்கத்தில் தான் நின்றார்கள். நவீன கர்ணன் பிரபாஸூம், அதே அசுவத்தாமா அமிதாப்பும்
சண்டைபோடும் போது, நல்லவர்கள் பக்கமே நிற்கின்றார்கள்.
கதைப்படி இன்னும் கடவுள் வரவில்லை..!
அதேவேளை கருவுற்ற பெண்களின் சீரத்தை எடுத்து, சுப்ரீம் சாகாமல்
இருப்பதாகக்காட்டுகின்றார்கள். நலிந்து இருந்த கமல், சீரத்தை எடுத்ததும், ஆரோக்கியமாக
மாறுவதுடன் படம் முடிகின்றது.
ஒரு விடயம், படத்தை வெற்றிப்படமாகவும், போட்ட காசை அள்ளவும்,
உணர்வுகளைத்தூண்டி ஒரு வித்தியாச உணர்வை ஏற்படுத்தவும் இயக்குனர் முயன்றதுடன், பெருவெற்றியையும்
பெற்றுள்ளார்.
சில இடங்கள் நன்றாக இருக்கின்றன. சாதாரண வாகனங்களுக்கு புதுவிதமாக ரிங்கறிங் செய்த
மாதிரி நவீன காலத்து வாகனங்களும், அவற்றோடு தொடர்புடைய காட்சிகளும் இருப்பது, சற்று
சலிக்கின்றது. இன்னும் தரமான கணினி வரைகலையினைப்
பயன்படுத்தியிருக்கலாம்.
இசை, பாடல்கள் முதற்கொண்டு ஏனைய அனைத்து தொழில்நுட்பங்கள்,
நடிப்பு போன்ற எல்லாம் நன்றாக இருக்கின்றன..!
நாக் அஸ்வின் என்ற இயக்குனர் வித்தியாசமாகச் சிந்தித்து,
மக்களைக் கவர்ந்துள்ளார்.
ஆ.கெ.கோகிலன்
25-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக