திசைப்படுத்தல் (Orientation)
ஒவ்வொருவருடமும் நடைபெறும் நிகழ்வு என்றாலும் இந்தமுறை எனக்கு ஒரு புதுமையான அனுபவம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இருந்தது. நினைத்த மாதிரி, அது பொய்க்கவில்லை..!
திருகோணமலைக்கு நேற்றுமாலையே யாழில் இருந்து புறப்பட்டு நேற்று இரவு
வந்துவிட்டேன். ஏற்கனவே சில ஏற்பாடுகள் செய்து இருந்தேன். முன்பு யாழில், நிறைய ஊழியர்கள்
இருப்பதால் அவர்களிடம் பொறுப்பைக்கொடுத்துவிட்டு, ஒரு பேச்சைத் தயார்பண்ணி, அனைத்து
துறைகளுக்கும் அனுப்பிவிடுவேன். மிகுதியை அவர்கள் செய்வார்கள். ஏதாவது பொதுவான விடயங்களை
மாத்திரம், வளவாளர்களை வைத்து தயாரித்து, அதனை வீடியோவாக எடுத்துக்கொண்டு,ஒவ்வொரு துறைக்கும்
அந்த வீடியோக்களை அனுப்பிவிடுவேன்.
உண்மையில் இந்த நடைமுறை கொரோனா வந்ததால் வந்த நடைமுறை..! அதற்கு முன்பு,
மிகக்கோலாகலமாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களையும் அழைத்து நடக்கும்.
ஆனால் இங்கு அவ்வாறு செய்யவில்லை. மாறாக எல்லாவற்றையும்
நேரடியாகச் செய்ய முயன்றோம். அதற்காகப் பலரைப் பயன்படுத்தினோம். குறிப்பாக இம்முறை
2ஆம் வருட மாணவர்களில் இருந்து, ஊடகப்பிரிவு
என்ற ஒன்றையும், மாணவ பிரதிநிதிகளை வரவழைத்து, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து, அதன்பின்னர்,
வரிசையாக புதுமுக மாணவர்கள் உள்ளே செல்லும் முன்னர் கைகுலுக்கிப்புகைப்படம் எடுத்து,
எமது விதிமுறைகளையும் விளக்கி, ஒவ்வொரு கற்கைநெறிதொடர்பான விளக்கங்களைக் கூறியதுடன்,
அந்தக்கற்கை நெறிகள் தொடர்பாக சிரேஷ்ட மாணவர்கள் செய்த பேச்சு அவர்களுக்கு மிகவும்
பயனுடையதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
நானும் எனது உரையில், “சிறந்த தொடக்கம் பாதிவெற்றி” என்பது மாதிரியே எல்லாவிடயங்களையும்
மேலோட்டமாகச் சொல்லி, குறிப்பாக எமது விரிவுரையாளர்களையும், ஏனைய கல்வி சார் மற்றும்
சாரா ஊழியர்களையும் அறிமுகப்படுத்தியதுடன்,
“கல்வியின் நோக்கம் நடத்தை மாற்றம்” என்பதையும்
எமது நிறுவனம் தொடர்பான மேலும் பல விடயங்களைக் கூறியதுடன் “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்பதைச் சொல்லி,
உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில் என்பதுடன் எமது சேவை என்ன என்பதைச் சொல்லி, ஒரு அரை மணிநேர
இடைவேளையை விட்டு, ஏனைய கல்விசார் ஊழியர்களின் உதவியுடன் தொடர்ச்சியை நடாத்தி முடித்தோம்.
நான் நினைத்ததில் 100 சதவீதம் சொல்லாவிட்டாலும் முக்கியமானவை சொன்னதாக
நம்புகின்றேன்.
அத்துடன் எமது ஊழியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் எல்லோரும் போதிய ஒத்துழைப்பை வழங்கியதால் இந்நிகழ்வு
எதிர்பார்த்த மாதிரியே சிறப்பாகச் சென்றது.
ஊடகப்பிரிவுக்கு, ஒவ்வொரு நாள் முக்கிய நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தச்
சொல்லியிருந்தேன். அவர்களும் அதனை தம்மால்
இயன்றவரை அர்ப்பணிப்புடன் செய்தார்கள். வரும் நாட்களில் முகப்புத்தகத்தில் அந்த புகைப்பட
ஆவணங்களைப் பார்க்கலாம்.
ஆ.கெ.கோகிலன்
12-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக