கெட்டது உறக்கம்..!
இன்று காலையில் இருந்து “புதிய மாணவர்கள் திசைப்படுத்தல் தொடர்பான தொடக்க நாள்” என்பதால் பல நிகழ்வுகள் நடந்தன..!
எம்மால் இயன்றவரை அவற்றை சிறப்பாக நடத்தினோம். மாலை எனது வேலைகள் ஓய, சற்று நேரம் உறங்க
வழமையான தங்குமிடத்திற்குச் சென்று படுக்க, அந்த நேரம் மின்தடைப்பட்டது. அவ்வளவு தான்..!
உடல் முழுக்க வேர்த்துக்கொட்டி கட்டிலே நனையும் அளவிற்கு வந்துவிட்டது..! நேற்று யாழில்
இருந்து வரும்போது, வன்னிப்பகுதியில் நல்ல மழை பெய்தது. திருகோணமலையிலும் அவ்வாறு இருக்கும்
என நினைத்தேன். வெல்கம்விகார, கன்னியா தாண்ட மழையைக்காணவில்லை..! கடும் வெட்கை நிலவியது.
இன்றும் அதே சூழல்..! அத்துடன் மின்சாரமும் இல்லை என்றால் படுப்பது என்பது முடியாத
காரியம். ஏறக்குறைய, அரைமணிநேரம் கழிய மின்சாரம் வந்தது..! அதோடு சேர்ந்தே நிம்மதியும்
வந்தது..!
நான் தங்குமிடத்தில் போதிய காற்றோட்டம் இல்லை. கொங்றீற் கட்டடம் என்பதால்
வெப்பமும் அதிகம். மின்சாரம் இல்லை என்றால் நித்திரையும் இல்லை..!
வழமைபோல் இரவு உணவு மற்றும்
எனது வேலைகள் செய்து முடிக்கும் தருணத்தில் ஏறக்குறைய இரவு 10 மணியளவில் மீண்டும் மின்சாரம்
தடைப்பட்டது. எங்கும் இருட்டு..! போன் வெளிச்சத்தில் குறிப்பாக அதிலுள்ள ரோச்லைட் வெளிச்சத்தில்
எனது வேலையை முடித்துக்கொண்டு, தங்குமிட அறைக்குச் செல்லும் போதே, இன்று சிவராத்திரி தான் என நினைத்துக்கொண்டே சென்றேன்..! இருந்தாலும்
பின்னர், என்ன வெப்பம் இருந்தால் என்ன..? எப்படி வியர்த்தால் என்ன..? இன்று எப்படியாவது
“சிவராத்திரி கொண்டாடக்கூடாது” என்று நினைத்தேன். அதற்காகக் கடும் பிரயத்தனப்பட்டேன்.
ஆனால் நடப்பதாய் இல்லை. பின்னேரச் சூழலே தொடர்ந்தது.
ஒரு குட்டி அறையில், மின்னசாரம் இல்லாமல் போனால், இப்படியும் ஒரு கஷ்டம்
வரும் என்பதை ஆறு ஏழு மாதங்களுக்குப் பிறகே உணர்ந்தேன். கட்டிலில் மணிக்கணக்கில் உருண்டு,
பிரண்டாலும் கண் மட்டும் மூட மாட்டேன் என இருந்தது..! போதாததற்கு மூளையும் தன்பாட்டிற்கு
ஏதேதோ தூரங்களுக்குப் பறந்து பறந்து எனக்கு
ஒரு வித களைப்பையே ஏற்படுத்தியது..! ஒரு கட்டத்தில், அந்த அறையிலுள்ள ஒரு பொது ஜன்னலைத்
திறந்தேன். அதனை முற்றாகத் திறக்க முடியாது. அவ்வாறு அது அமைக்கப்பட்டுள்ளது..! இருந்தாலும்
திறக்கக்கூடிய அளவிற்குத் திறந்தேன். யாழ்
வீதியும் பாதுகாப்பு ஊழியர்களும் தெரிந்தார்கள்..! திரும்ப கட்டிலில் விழுந்தேன். ஏதாவது
முன்னேற்றம் நித்திரைக்கு, கிடைக்கின்றதா என ஏங்கினேன்..! வரவில்லை.
நான் யாழில் தனியொரு பெரிய மாடிவீட்டிலே இருந்து பழகியதால் இந்த நிலை
ஏற்பட்டுள்ளது என நினைக்கின்றேன்.
இற்றைக்கு 25 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் இதே மாதிரியான பல இடங்களில்
தங்கியுள்ளேன். ஒரு தனியறைக்குள் பிடித்த புத்தகங்கள், மட்டும் இருந்தால் போதும்.
எனக்கு ஒன்றும் தேவையில்லை. இப்படியான வாழ்க்கையில் பழக்கப்பட்ட எனக்கு கடந்த 10 அல்லது
12 வருடங்களில் எற்பட்ட மாற்றம்,
சின்ன விடயங்களையும் கடினமானதாகக் காட்டுகின்றது. இந்தியாவில் இருந்த
காலத்தில் ஓலைக்கொட்டிலிலும் தங்கியுள்ளேன். ஓரிரு முறை தீயாலும், சூறாவளியாலும் கொட்டிலே
கானாமல் போக, வெறும் தரையில் ஓலையை மட்டும் போட்டுப்படுத்த அனுபவமும் உண்டு..! வவுனியா,
திருகோணமலை, கொழும்பு மற்றும் மூதூர் இந்த இடங்களில் எல்லாம் மிகச் சிறிய அறைகளில் தங்கிய அனுபவங்கள் நிறைய இருக்கின்றன..!
ஆனால், வயதான பிறகு இவ்வாறான பழக்கப்பட்ட சூழல் என்றாலும் சற்று கடினமாகத்
தான் தெரிகின்றது.
இவ்வாறு ஓடிய எண்ணங்கள் மறைய, உடலே ஈரமாக இருந்தது..! கட்டில் சரிவராது
என்ற முடிவோடு உடற்பயிற்சி செய்வதற்காக வைத்திருந்த பிளாஸ்டிக் பாயை எடுத்து, இருக்கும்
சிறிய குறுக்கலான பகுதியில் போட்டு படுத்தேன். நான் பொதுவாக படுப்பதற்கு புற்பாயைத்
தான் பயன்படுத்துவது வழக்கம். எனக்கு பிளாஸ்டிக்
பாய் என்றாலே சற்றுவெறுப்பு தான்..! இன்று
வேறு வழியின்றி முயன்றேன். கட்டிலை விட சற்று
பரவாயில்லை என்று உணர்ந்தாலும் வெளிக்காற்று உடலில் படாததால் வெட்கையாகவே இருந்தது.
வேறுவழியின்றித் திரும்பவும் உருண்டு பிரண்டு படுக்க முயன்றேன். திரும்பவும் யோசனைகள்
வந்தன..!
நான், வீட்டில் பல கட்டில்கள் இருந்தாலும் பாயில் படுப்பது தான் வழக்கம்.
எனக்கு நன்றாக நீட்டி நிமிர்ந்து படுக்கவே பிடிக்கும். மின்சார சாதனங்கள் போடுவது மிகக்குறைவு.
அது எனக்கு பிடிக்காதும் கூட..! நல்ல வெயில்
காலத்தில், மொட்டை மாடிக்குச் சென்றுபோய் படுப்பேன். நான் பொதுவாக 11.00 மணி தாண்டவே
படுக்கப்போவேன். அப்போது மேலே ஜில் என்ற காற்று, உடலில் படும்போது எனக்கு மிகவும் மகிழ்வாகவும்
இயற்கையைப் பாராட்டவும் தோன்றும். சில வேளைகளில்
முழு நிலவைப் பார்க்கும்போது அவ்வளவு ரம்மியமான நித்திரையும் மகிழ்வும் கலந்துவரும்..!
ஜன்னல் திறந்ததால் நுளம்புகள் வந்து கடிக்கத்தொடங்கின..! ஒன்றும் செய்ய
முடியாது. நுளம்புகள் கடிக்காமல் இருக்க, ஒரு கிறீம் வாங்கி வைத்திருந்தேன். உடனே அதனைத் தேடி எடுத்து உடலில் பூசிக்கொண்டு படுத்தேன்.
நுளம்புகள் கடித்தன..! வியர்வை வடிந்து பாயை நனைத்தது. சிவராத்திரி நிச்சயமானது..!
நான், பொதுவாக விரதங்கள் பிடிப்பதில்லை. சைவம், மச்சம் என்று பார்ப்பதில்லை..!
ஆனால் இயற்கை எனக்கு அவ்வாறான நாட்களை உருவாக்கித்தரும். அதாவது, மச்சம் கிடைக்கவில்லை
என்றால் அது சைவநாள்..! சாப்பாடு கிடைக்கவில்லை
என்றால், அது விரதம். நித்திரைக்கு வாய்ப்பு
இல்லை என்றால் அது எனக்கு சிவராத்திரி..! இப்படித்தான் எனது வாழ்வில் வரும் சம்பவங்களைப்
பார்க்கின்றேன்.
இன்றும் சம்பவம் உறுதியானது எனநினைத்து, சிவராத்திரியைக்கொண்டாட இயற்கை
அனுமதிக்கவில்லை. அது என்ன நினைத்ததோ தெரியவில்லை..?
நடுச்சாமம் 12.00 மணி தாண்ட மின்சாரம் வந்தது. சிவராத்திரி குலைந்தது..!
விறுவிறுவென எழுந்து, ஜன்னலைப்பூட்டி, வழமையான ஏற்படுகளுடன் படுக்கைக்குப்
போனேன். நேரம் போனது தெரியவில்லை..! உடற்பயிற்சி தொலைந்தது..! எழும்பிக் குளித்து அலுவலகம் போக நேரம் சரியாக இருந்தது.
ஆனால் பிடிக்க இருந்த சிவராத்திரி மட்டும் தள்ளிப்போனது..!
ஆ.கெ.கோகிலன்
13-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக