வீகோட்..!
இம்முறை திருமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு காரிலும், அங்கிருந்து திருமலைக்கு மீண்டும் பஸ்ஸிலும் வரமுடிவெடுத்து, அதற்கேற்ப திட்டங்கள் போட்டேன். பெரும்பாண்மையான திட்டங்கள் வெற்றி பெற்றன. சில கவலையீனத்தால் சொதப்பி விட்டன..! அப்படியான நிகழ்வுகளுடன் யாழ் பஸ் தரிப்பிடத்திற்கு வந்து, எனது சீற்றைப் பார்த்து பையை மேலேயுள்ள தாங்கியில் வைத்துவிட்டு, வெளியே வந்து போனைப்பார்த்தேன், சார்ஜ் இல்லை என்று புரிந்து..!
இரண்டு மூன்று தடவை போட்டுப்பார்த்துவிட்டு, என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டே
இருந்தேன்.
நான் இணைய உதவியுடன் பணம்
கொடுத்து பஸ்ஸை புக்செய்து விட்டேன். அதில் எனது தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி
இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன கொடுக்கப்பட்டுள்ளது. எனவே ஏன் பயப்பட வேண்டும்..? சீற் புக் பண்ணினது
உண்மை தானே..! என நினைத்துக்கொண்டு இருக்க
சாரதி பஸ்ஸில் ஏறினார். நானும் ஏறினேன். எனது சீற்றில் ஒரு பெண் உட்கார்ந்து இருந்தார்.
பக்கத்தில் ஒர் இளைஞர் இருந்தார். நான் போனதும், சீற்றை விடச்சொன்னேன். அவரும் எழுந்து நின்றார். உண்மையில் நான், அந்தப்
பெண்ணை எழுப்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் சிலர் அதனை எமது பலவீனமாக எடுத்துக்கொண்டு,
செயற்படுவார்கள். நிற்க முடியாமல் சாய்ந்து
கொண்டு, அந்தப்பெண் நின்றார். பின்னர் பஸ் வெளிக்கிட்டு ஒரு கட்டத்தில் நடத்துனர் வந்து
வீகோட்டைக் (V-code: பயணம் செய்பவருக்கான இலக்கம்)கேட்டார்..! நான் நடந்ததைச்
சொன்னேன். அவர் வீகோட் இல்லாமல் பஸ்ஸில் பயணம் செய்ய இயலாது. இல்லை என்றால் ரிக்கெட்
எடுக்க வேண்டும் என்றார். அந்த நடத்துனர் முதலே என்னுடன் அறிமுகமானவர். இருந்தாலும்
அவர், அவரது கடமையைச் செய்கின்றார். நான் போன் சார்ஜ் போனது பற்றிச்சொல்லி, எனது தேசிய அடையாள அட்டையைப் போட்டுப்பார்க்கச் சொன்னேன். அவர் தெரிந்திருந்தாலும்,
அப்படிச்செய்ய முடியாது. நான் பணம் கட்ட வேண்டிவரும். இடையில் செக்கர்கள் ஏறுவார்கள் என்று சொல்லி ஒரு ரிக்கெட்டையும் கிழித்துத் தந்தார்.
அங்கே நடத்துனருடன் நான் இவ்வாறு கதைக்க, சனம்
என்னை வேடிக்கை பார்த்தது..! ரிக்கெட் எடுக்காத நபரைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தார்கள்..!
எனக்கு, இன்றைய பகல் சூழல் தான் ஞாபகத்திற்கு வந்தது..!
காலையில் 6.00இற்கு எழுந்து, கட கடவென எல்லா வேலைகளையும் முடித்து
9.30இற்கு சாமத்திய வீடு செல்வதற்காக மனைவியின் தம்பி வீட்டிற்குச்சென்றேன். அவர்கள்
வெளிக்கிட்டு வர மேலும் 30 நிமிடங்கள் எடுத்தன. இருந்தாலும் விரைந்து ஹோலுக்குச் செல்ல
அங்கே ஒரு சிலர் மாத்திரம் நின்றார்கள்..! எல்லாரும் வந்து ஒவ்வொரு விதமான புதிய நிகழ்வுகளைச்
செய்ய மணி ஏறக்குறைய 12.30ஐ தாண்டிவிட்டது.
அதுமாத்திரமன்றி, இன்று எமது வீட்டில் திவசம். சாமத்திய வீட்டில் முழுமையாக
நிற்க முடியாமல் எமது வீட்டிற்கு வந்து, சாப்பிட்டு சிறு நித்திரை போக, ஒருவர் வந்து
எழுப்ப கீழேவந்து பிள்ளைகளுடன் பொழுதுபோக்க நேரம் வந்துவிட்டது. உடனேயே வெளிக்கிட்டுப் போக மனம் தூண்டியதால் அவ்வாறே செய்தேன்.
போனை ஓன்பண்ணிப்பார்க்கவில்லை..! அதற்கு அங்கே சந்தர்ப்பமும் அமையவில்லை..!
பஸ்ஸில் என்ன செய்யலாம்..? ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சிக்கல் வந்துகொண்டே
இருப்பது போல் தோன்றியது..! நடத்துனரைப் பார்க்காமல் நித்திரை கொள்ள முயன்றேன். ஒரு
கட்டத்தில் முழித்துப்பார்க்க, நான் எழுப்பிவிட்ட பெண் சாய்ந்து,
கைபிடிக்கம்பியிலே படுப்பது போல் இருந்தது. நான் எழுந்து அந்தப்பெண்ணுக்கு
உதவட்டா என மனம் கேட்டாலும், இன்னொருமனம், வேறுமாதிரிச் சொன்னது..! கஷ்டப்பட்டு, வலியுடன்
இருந்தேன். எழும்பி சீற்றைக் கொஞ்சநேரம் அவருக்கு கொடுத்திருக்கலாம். இதற்கு இடையே
கிளிநொச்சிவர அந்தப்பெண்ணும் இறங்கிச்சென்றார்.
சரி அவருக்கு உதவ முடியவில்லை. இருந்தாலும் இன்று இரண்டு பேருக்காவது
உதவ வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தேன். ஏறக்குறைய மாங்குளம் தாண்ட ஒரு சிங்களப்பெண்ணுக்கு
இருக்க இடம் கொடுத்தேன். அவர் வவுனியாவில் இறங்கும் வரை மழையும் அடித்துக்கொட்டியது..!
வவுனியாவில் பலர் ஏறினார்கள். எனக்கும் சீட் வந்துவிட்டது. ஆனால் முன்னால்
ஒரு பெண்குழந்தையுடன் ஒரு தயார் நின்றார். கெப்பிட்டிக்கொல்லாவ வரை பொறுமையாக அவர்களை
அவதானித்து வந்தேன். அவரும் நிற்கக் கஷ்டப்பட்டார். பின்னர் ஹொரோப்பொத்தான வரை அவரையும்,
பிள்ளையையும் இருக்கச்சொன்னேன். இந்த நேரம்
திரும்ப நடத்துனர் வந்து வீகோட் இல்லை என்றால் ரிக்கெட்டிற்கு காசைக்கேட்டார்..! நான்
சொன்னேன், உங்கள் போன் நம்பரைத் தாருங்கள். நான் போனதும், உங்களது நம்பருக்கு
அந்த வீகோட்டை அனுப்புகின்றேன், என்று சொல்லி, அவரது போன் நம்பரையும்
எழுதியெடுத்தேன். அவர் சொன்னார், போன் மெசேஜ்ஜிலும் தனது போன்நம்பர் இருக்கும் என்றும்,
அந்த இலக்கத்திற்கு வீகோட்டை அனுப்பும்படியும்..! சரி என்றேன்.
ஹொரோப்பொத்தான வரும்போது, அந்தப்பெண்ணும், குழந்தையும் எழவில்லை. நான்
எனது நிலைமையைச் சொல்லிப்புரிய வைக்க, உணர்ந்து, எழுந்து, நன்றிசொல்லி, வேறோர் சீற்
வர அங்கேபோய் இருந்தார்கள்.
நானும் திரும்ப சீட்டில் இருந்தேன். இந்த சமயத்தில் மழையும் பெய்துகொண்டிருந்தது.
சில இடங்களில் பெய்யாமலும் ஆச்சரியப்படுத்தியது. கன்னியாவிற்கு கிட்டவர மழை நன்றாகப்பெய்தது.
ஆனால் எமது நிறுவனத்திற்கு வரும்போது மழையில்லை..! நான்நேரடியாக அறைக்குவந்து, சார்ஜ்ஜரைப்போட்டு, போனை ஓன்பண்ணி,
நடத்துனருக்கு வீகோட்டை அனுப்பிய பிறகுதான்,
குளித்துச் சாப்பிட்டேன்.
நடத்துனர் கொஞ்சம் அறிமுகமானவர் என்பதால் பொறுமையுடன் என்னைக் கையாண்டார்.
இல்லை என்றால் கைகலப்பு வந்திருக்கும். இல்லை சத்தமாவது வந்திருக்கும்.
பாடம் படிப்பதற்கு இயற்கை எப்போதும் எனக்கு ஏதாவது வாய்ப்பைக் கொடுத்துக்கொண்டே
இருக்கின்றது..!
ஆ.கெ.கோகிலன்
11-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக