மோட்சம்..!

 


 


இன்று ஆடி அமாவாசை.

கைவிரலில் காயம் ஏற்பட்டதால் இருநாட்கள் லீவு எடுத்துவிட்டு கடந்த புதன் கிழமையே வேலைக்குப்போனேன்.  மனைவி கேட்டதற்கு இணங்க, விரதமிருக்க மட்டும், கையில் நோவுடன் திரும்ப யாழ் வந்தேன்.

தந்தையை இழந்தவர்கள் கிரிமலைக்கு அல்லது ஒரு ஆலயத்திற்குச் சென்று, மரணமடைந்த தந்தையாரினை நினைத்து, இறைவனாக, இயற்கையாக மாறிநிற்கும் அவரின் மகிழ்ச்சிக்காகவும், அவரால் நமக்கு நல்ல விடயங்கள்  நடக்கவேண்டும் என்பதற்காக, இறைவனுக்கும் இயற்கைக்கும் பக்கத்தில் அவர் இருப்பதால் எமது நல்வாழ்க்கைக்கு சிபாரிசு செய்வதற்கான ஒரு சடங்காக எமது முன்னோர்களும், அதனை கொண்டுவந்து, தாம் வாழுவதற்காக, மற்றவர்களை அண்டி வாழும் மனிதர்கள் வகுத்த வழிகளே அவை..!

இன்று எங்கும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக அந்தவழிமுறை மாறிவிட்டது.

இறைவனுக்கு ஏஜென்ஸியாக ஒரு சமூதாயமே உருவாக்கப்பட்டுவிட்டது..!

இறைவனுக்கும் மக்களுக்கும் இடையில் அணைபோடப்பட்டுவிட்டது..!

இயற்கையும் இறைவனையும் என்னைப்பொறுத்தவரை பிரிக்க முடியாதவையாகவே  உணர்கின்றேன்.

ஆனால் அந்த இயற்கையுடன், இன்னார் தான் தொடர்புபட வேண்டும் என்ற கொள்கையை என்னால்  இன்றுவரை ஏற்கமுடியவில்லை..!

ஒரு  இறைதூதராக யாரும் வரலாம் என்பதே எனது கருத்து..!

இந்த வழியில் வந்தால் தான் இறைதூதர் என்பதையும், அவர்கள் இவ்வாறான இயல்புகளைக்கொண்டிருக்க வேண்டும் என்பதையும், இந்த மொழியே இறைவனின் மொழி என்றும் இறைவன் தமிழர் அல்ல என்றும் சொல்வது அல்லது சொல்ல வருவது எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை..!

உண்மையும், உளத்தூய்மையும் சரியான வகையில் தமிழில் இறைவனுடன் கதைக்கக்கூடிய ஆற்றலும் இருந்தால்  இறைவன் தமிழிலே புரிந்துகொள்வார்.  நான் என்னை அப்படியான தகுதியுடையவராகவே நினைக்கின்றேன்..!

 

எனது வீட்டிலே இன்று, தந்தையாரினை நினைத்து கிரிமைக்குப்போய்வரச்சொல்ல எனக்கு மனத்தில் அது தேவையில்லாத ஒன்றாகவும், பல மாபியாக்கள் மாதிரி ஆலயங்களிலும் மாபியாக்கள் வருவது வேதனையளிப்பதுடன், கடவுளே களவுக்குத் துணைபோவதாகத் தோன்றுகின்றது..!

விரதமிருப்பது தவறு அல்ல..!

தான தர்மங்கள் செய்வது தவறல்ல..!

இவர் சொல்லி, இவருக்கூடாகச் செய்வதே சிறப்பானது என நம்ப வைத்த எமது சமூகம் எனக்கு அறிவிலிச்சமூகமாகத் தோன்றுகின்றது.

ஆதியில் அறிவில்லாமல் இருக்கும் போது அதனை ஏற்பது தவறு அல்ல..!

ஆனால் அகிலமே கைக்குள் அடங்கக்கூடிய காலத்தில், அறிவை யாரும் பெறலாம் என்ற சூழலில் இன்றும் ஆதிகால வழிக்குப் போவதே சிறந்தது என்று சொல்வது வேறுப்பாய் இருக்கின்றது.

 எனது தந்தையார் நிறையப்படிப்பவர். வீட்டிலேயே நூல் நிலையம் மாதிரி வைத்திருந்தவர்.  கழிவறை போகும் நேரத்தையே விரயப்படுத்தக்கூடாது என்பதற்காக அங்கும் புத்தகமோ அல்லது செய்தித்தாள்களோ படிப்பவர். அவர் கோவிலுக்குப் போவதைவிட, ஒருவருக்கு, தரப்பட்ட பொறுப்புக்களை சரியாக, சிறப்பாகச் செய்பவர்களைத்தேடி இறைவனே வந்துவிடுவார் என்பார்..! அதற்காக அவர் தனது பொறுப்புக்களை நூறுவீதம் செய்தார் என்றோ தான் ஒரு சரியான ஆள் என்றோ சொல்வது கிடையாது..! மதுவுக்கு மிகவும் அடிமையானவர். ஆனால் யாருக்கும் கெடுதல் செய்ததை நான் பார்க்கவில்லை. வேண்டும் என்றால் தனது குடும்பத்தைக் கவனிக்காமல் ஞானியாக இருந்து, தனது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சுயம்பாக வெளிவர மறைமுகக் காரணமாக இருந்தவர் என்று சொல்லலாம்..! சிறுவயதில் நானும் மற்றவர்களைப்போல் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்து, அது கிடைக்காமல் போக, முரண்பாடுகளை வளர்த்து, ஒரு கட்டத்தில் தந்தையுடன் பேசுவதையே தவிர்த்து, இறக்கும் காலத்திலே அவரின் உண்மையான முகத்தை அறிந்தேன்..!

என்னை நல்லவனாக மாற்றியதில் அவரின் பங்கு பெரியது. தனது மகன் “தவறு செய்ய மாட்டார்.” என்று மற்றவர்களுக்கு, எனக்குத் தெரியாமல் சொல்லும்போது, அதனை அறிந்து, அந்த நம்பிக்கையை காக்க, நான் நீண்டகாலம் போராடிக்கொண்டிருக்கின்றேன்.

நான் வீடுகட்டும்போது, எனக்குப் பிடித்த கோவில்களில் மண்ணெடுத்துவந்தே அதனைக் கட்டினேன். எனக்கு இறைவனையும், கோவில்களையும் பிடிக்கும். ஆனால் அதற்கான நேரம் எனது மனம் சொல்லும்போதே தெரியும்..! யாரும் சொல்வதால் சிலவேளை போகலாம். ஆனால் அது எனக்குப்பிடித்திருக்கும் என்று சொல்ல முடியாது. மற்றவர்களுக்காக, அவர்களின் திருப்திக்காகப் போவதுண்டு.

ஆனால் நான் வீட்டில், என்சுவாமியறையில் ஒரு இறைதூதராகவே மாறிவிடுவேன். இறைவனுடன் நேரடியாகக் கதைப்பேன்..! கண்டிப்பேன்..! பாராட்டுவேன்..! நன்றி சொல்வேன்..!

இன்றும் விரதமிருந்து, அப்பாவின் ஆத்மா சாந்தியும் சமாதானமும் அடைந்து, மகிழ்வுடன் இறைவனுடனும் இயற்கையுடனும் இருக்க வேண்டுவேன்.

அதுவே அப்பாவிற்கும் பிடிக்கும். அப்பா ஆரம்பத்தில் தந்தை பெரியார் பற்றியும் அம்பேத்கார் பற்றியும் சொல்லியுள்ளார்.

அன்பாய் இறைவனை நினைத்தால், அவனருள் எங்கும் கிடைக்கும்.


ஆ.கெ.கோகிலன்

04-08-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!