மகாராஜா..!
விஜய் சேதுபதியின் 50 ஆவது படம்..! பழைய விஜய் சேதுபதியைப்
பார்க்க முடிந்தது. அண்மையில் பல படங்கள் வந்தாலும் இந்தப்படத்தில் மீண்டும் திரும்ப
பழைய இடத்திற்கு வந்துள்ளார்..! அப்படி அலட்டல் இல்லாமல் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்..!
படம் பார்க்கத் தொடங்கியபோது நிறுத்தவோ எழும்பவோ மனம் வரவில்லை. அவ்வளவு அழகாகத் திரைக்கதையை
அமைத்துள்ளார் இயக்குனர்..!
படத்தில் விஜய் சேதுபதி போல், அனுராக் காசியப் என்ற வில்லனின்
பாத்திரப்படைப்பும் மிகச் சிறப்பாக இருந்தது..! பெண் பிள்ளைகளின் தந்தைகளாக ஹீரோவையும்,
வில்லனையும் வைத்துக்கொண்டு, நேர்மையாக கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளையை வளர்க்கும் ஹீரோவுக்கும்,
அதேபோல் “எப்படி உழைத்தால் என்ன..?” தனது மகளின் அனைத்து ஆசைகளையும் தீர்த்துவைக்க
முயற்சிக்கும் பாசமான வில்லனுக்கும், ஒரே வித்தியாசம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதை..!
நேர்மையாக இருந்து, இடையில் மனைவியையும், குழந்தையும் இழந்து,
வில்லனின் குழந்தையே, ஹீரோவின் குழந்தையாக மாறுவதும், தனதுபிள்ளைக்கு தானே தீங்கு செய்ததை
நினைத்து வெந்து மனமொடிந்து விழுந்து, வில்லன் இறப்பதும் கச்சிதம்..! எந்தக் குழந்தைக்காகக்
கேடுகெட்டசெயல் என்று தெரிந்தும், பணத்திற்காக அதனைச் செய்து, பிள்ளையைச் சந்தோசப்படுத்த
நினைக்கும் “அப்பா” வில்லனின் பாத்திரப்படைப்பு
தற்போதுள்ள பெரும்பாலான அப்பாக்களுக்கும் ஒரு பாடம்..! இருக்கின்றதை வைத்து நிறைவாக வாழப் பழகவும், பழக்கவும்
வேண்டும். இல்லை என்றால் துன்பம் எந்தத்திசையில் இருந்து வரும் என்பதை நாம் அறியவே
முடியாது. நேர்மையாக வாழ்பவர்களே மரணிக்க வேண்டியவர்கள் தான். அப்படியிருக்க, நேர்மையற்று
இருந்தால் ஒவ்வொரு நாளும் ஆபத்தே..!
படத்தில் பல காட்சிகள் வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருந்தன.
அதை என்னால் நன்றாக ரசிக்க முடிந்தது. குப்பைத் தொட்டிக்கு “ Use Me” என்று பெயர் எழுதிவிட்டு,
“லட்சுமி” என்று அதனை அழைப்பதும், அதனைக்காணவில்லை
என்று பொலீஸில் முறைப்பாடு செய்யக் கேட்பதும், அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதும், சுவாரசியமாக இருந்தன.
உண்மைக்காக, நியாயத்திற்காக போராடும் வழி, வித்தியாசமாகவும்
இருந்தது..! இப்படியும் போராடலாம் என்ற ஒரு மார்க்கத்தைக் காட்டியது புதுமை..! அகிம்சையில்
ஒரு ரவுடிசம்..!
பல பாத்திரங்கள் நினைவில் நிற்கின்றன..! இயக்குனர் சிங்கம்
புலி, ஒளிப்பதிவாளர் நடராஜ் மற்றும் போயிஸ் ஹீரோக்களில் ஒருவராக நடித்த மணிகண்டன் இந்தப்படத்தில்
வரும் வில்லன்களில் ஒருவராக நடித்தாலும், அனைவரும்
தனித்துத் தெரிந்தார்கள்..!
மம்தா மோகன்தாஸ், அபிராமி, திவ்யபாரதி எனப்பல நடிகைகள் நடித்தாலும்,
வில்லனின் உண்மையான மகளும், ஹீரோவின் வளர்ப்பு மகளுமாக நடித்த இளம் பெண் சாசனா நமிதாஸ்
சிறப்பாக நடித்து இருந்தார்..!
தன்னை, இந்த நிலைக்கு கொண்டு வந்தவனைச் சந்தித்துப் பேசும்
வசனம், அவளது உண்மையான தந்தை என்றாலும், அது அவளுக்கும் தெரியாது..! தனது மகளை தானே
நாசமாக்கக் காரணமானேன் என்று அவனுக்கும் தெரியாது..! ஒரு கட்டத்தில், அது தெரியவர,
அவன் படும் வேதனை போன்ற ஒரு தண்டனையை அவனுக்கு யாரும் கொடுத்துவிட முடியாது. இயற்கை
வழங்கிய தண்டனை அது..!
தவறு செய்யும் எந்த ஆணுக்கும் தண்டனையாக, அவனது உறவுகளான
தாய், காதலி, மனைவி, மகள் மற்றும் சகோதரி இல்லாமலே அலையச் செய்வதே பெரும் தண்டனையாகும்.
கதைசொல்லப்பட்ட விதம் சற்றுப்புதுமையாக இருந்தது. மாறி மாறி வந்த இரண்டு கால காட்சிகளில் பெரிய வேறுபாடுகள்
இல்லாவிட்டாலும், விஜய்சேதுபதியின் தோற்றத்தை வைத்தே அதனை உணர வேண்டும். படத்தை முதலில்
பார்க்கும்போது சற்று குழப்பமாக இருந்தாலும் தொடர்ந்து பார்க்க தெளிவாகப் புரிந்தது.
ஆரம்பத்திலேயே, மகளைக் கெடுத்தவனை அழிப்பது போன்ற கதை என்று
தோன்றினாலும் போகப் போக படத்தில் பல திருப்பங்கள் இருப்பது கதையில் ஈர்ப்பைக்கொண்டுவந்துவிட்டது..!
அனைத்து தொழில்நுட்பங்களும் தரம். சிறப்பு. இயக்குனர் நித்திலன்
சுவாமிநாதனை நிச்சயம் பாராட்ட வேண்டும். அனைவரும் பார்க்க வேண்டிய படிப்பினையுள்ள படம்.
ஆ.கெ.கோகிலன்
03-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக