கொடுப்பதற்கும் பலன் வேண்டும்..!
இந்தக்கிழமை முதலில் வீட்டுக்கு போவதில்லை என்று முடிவெடுத்தாலும் பின்னர் சில தவிர்க்க முடியாத திருமண அழைப்பிதழ்களால் போகவேண்டி வந்துவிட்டது..!
வழமைபோல் நேற்றே பஸ்ஸை புக் பண்ணி, இன்று மனைவி, பிள்ளைகளுக்கு வழமைபோல்
“போய்வாறேன்” என்று சொல்லி 4.15 மணி பஸ்ஸில் ஏறிய பிறகு தான் தெரிந்தது தெரிந்தது
அன்று போல் இன்றும் கூட்டம் என்று..! அன்று
போயா தினம்..! செல்வச்சந்நிதி தேர்..! இன்று
என்னவென்று தெரியவில்லை..? நாளை பாடசாலைகள் தொடங்குவதால் சுற்றுலாச்சென்றவர்கள் ஊருக்குத்
திரும்புகின்றார்களோ என்னவோ..?
வழமையாக நான் வெளிக்கிடும் போது ரன்னிங் ஷூவை (Running Shoe) போட்டு லேசைக்கட்டுவேன்.
இன்று வரும்போது, மனைவியும் மூத்த மகளும் ஆளுக்காள் ஒவ்வொரு பக்க ஷூவின் லேசையும் கட்டிவிட்டு, நான் பிழையான
இடத்தில் கட்டியுள்ளதாகச் சொன்னார்கள்..! அவர்கள் எப்படிக் கட்டினார்களோ என்னவோ தெரியவில்லை..?
இன்று கால் சற்று கூட வலித்தது..! கொஞ்சம்
இறுக்கிக் கட்டிவிட்டார்கள் போலும்..!
ஏறிய திருமலை பஸ்ஸில் போன கிழமைபோல், இந்தக்கிழமையும் எனது பொதிப்பையை
வைக்க அங்கே இடம் இல்லை..! அதுமாத்திரமன்றி,
சில வாரங்களுக்கு முன்னர் விகோட் இல்லாமல், போனில் சார்ஜ்ஜூம் இல்லாமல் திண்டாடியது
போல், போன கிழமை விகோட்டை ஒரு கடதாசியில் எழுதிக்கொண்டும் போனேன். ஆனால் பிரச்சனை வேறு
மாதிரி வந்தது..! சிலர் சீற் மாறி இருந்ததால் எனது போனைச் சோதிக்க வேண்டிவந்துவிட்டது..!
இந்த முறை விகோட்டை எழுதிக்கொண்டு போயும் போன் பாவிக்கவேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டது..!
நல்ல வேளை வேறு ஒரு பிரச்சனையும் எழவில்லை.
பையை மடியில் வைத்துக்கொண்டு, கிளிநொச்சி தாண்ட, யாருக்காவது சீற்றைக்கொடுக்க
நினைத்தேன். ஒரு நாகரீகப்பெண், ஆண்கள் போல் சேட்டும், பாண்டும் போட்டுக்கொண்டு, ஒரு
கண்ணாடியும் அணிந்துகொண்டு, காதுக்குள் புளூருத் இயர்போனையும் செருகிவிட்டு, அவர் கேட்கும் பாட்டுக்கு ஏற்ப தலையசைத்துக்கொண்டு
நின்றார்..! யாழில் ஏறின பெண், ஏறக்குறைய கனகராயன் குளம் வரை நிற்க, நான் இன்னொரு நபரின்
ஊடாக அந்தப்பெண்ணை இருக்கச்சொன்னேன். பராவாயில்லை என்று தொடர்ந்து, கஷ்டப்பட்டுக்கொண்டே நின்றார். எனது மகளின் வயதை ஒத்த அந்தப்பெண் பின்னர்
வவுனியாவில் இறங்கினார். அப்போது அருகிலுள்ள
எனது சீற்றுக்கு பக்கத்தில் உள்ள சீற்றுக்குப் பக்கத்தில் உள்ள இன்னோரு இளம் பெண், யாரோ பார்ச்சல் கொண்டு வருகின்றார்கள்..! அதனை நடத்துனரிடம் சொல்லி வாங்கித்தரச்சொன்னார்.
அவரும் மகளின் வயதை ஒத்தவரே..! நடத்துனருடன் அவரது கோரிக்கையைச் சொன்னேன். பின்னர்,
அந்தப்பெண் அவர்கள் வர சற்று தாமதமாகும் எனவும், சொன்னதைக் கைவிடவும் சொன்னார்.
நான் எழும்பி, நடத்துனரிடம் கதைக்கும்போது, ஒரு முஸ்லீம் தாயார் எனது
இடத்திற்கு கிட்ட வந்தார். நான் திருகோணமலைக்குப் போகின்றேன் எனவும், எழவில்லை எனவும்
சொல்ல ஒதுங்கினார்..! பின்னர் கெப்பிட்டிக்கொலாவவிற்கு கிட்ட சீற்கொடுக்க முனைய, வேண்டாம்
இறங்கப்போறேன் என்றார். அடுத்து ஒரு நபரிடம் கேட்டேன் சீற்றில் இருக்க..அவரும், வேண்டாம்
ஹொரோபொத்தானையில் இறங்குவதாகச் சொன்னார். இறுதியாக மொரேவாவிற்கு கிட்ட இன்னோருவருக்கு
உதவ முன்வர, அவரும் வேண்டாம் என்றார்..! இன்று
4 பேர்களிற்கு உதவிசெய்ய நான் முனைந்தபோதும் அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இது எனக்கு ஒரு ஆச்சரியமாகவே இருக்கின்றது..! ஒருவர் கொடிகாமத்தில் ஏறியவர், மொரேவாவில்
கொடுக்க வேண்டாம் என்றுவிட்டு, நான் வந்து இருந்தால் கூட்டத்தில் நீங்கள் கஷ்டப்படுவீர்
என்பதற்காக வேண்டாம் என்று சொன்னதாக இறங்கும்போது
சொன்னார்..! ஒவ்வொரு முறையும் ஏதாவது சிறு உதவியாவது யாருக்காவது செய்ய அனுமதிக்கும்
இயற்கை இன்று அனுமதிக்கவில்லை..!
8.30 இற்கு கிட்ட அலுவலகம் வந்துவிட்டேன். வந்து, குளித்து, உண்டு
பின்னர் போய் கழிவு அறையைப் பார்த்தால் தவளைக்குஞ்சுகள்
ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தன..! அன்றொருநாள்
கன்டீன் ஓனர், சொப்பிங் பையை கையில் போட்டுக்கொண்டு தவளையைப் பிடித்து எறிந்தார்..!
இன்று நானும் அதேவேலையைச் சொப்பினைப்பிடித்துக்கொண்டு செய்தேன். பின்னர் அவற்றை ஒன்றாகக்கட்டி
தூரமாக ஏறிந்துவிட்டேன். நாளை அவை திரும்ப
வருகின்றனவா அல்லது ஏதாவது விலங்கு அவற்றை உண்கின்றதா பார்ப்போம்..!
சில கரப்பான்களும் தொல்லைப்பண்ண, இரண்டை மிதித்துக்கொன்றேன்..!
கொடுக்க நினைக்க, ஒருவரும் வாங்கவில்லை..!
மன்னிக்க மனமில்லாமல் சிலதைக் கொன்றேன்..!
முரணான மனம்..! சமூகத்தில்
எப்படி வாழ்வது என்று புரியாமல் தான், சிலர் ஞானியாகின்றார்களோ தெரியவில்லை..!
ஆ.கெ.கோகிலன்
25-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக