அருமை..!
இன்று எமது புதுமுகமாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்காக சில நிகழ்ச்சிகளை செய்திருந்தார்கள். திசைப்படுத்தல்
நிகழ்வின் இறுதி நிகழ்வு இவ்வாறாக முடிய, மாணவர் பிரதிநிதிகளை தெரிவதற்கான விண்ணப்பபடிவங்களைக்
கொடுக்கச்சொல்லிவிட்டு, வழமைபோல் எமது கன்ரீனில்
சம்சாக்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டு 12.30இற்கே அலுவலகத்தில் இருந்து புறப்பட்டேன்.
பஸ் வரவில்லை அல்லது நான் பஸ் தரிப்பிடத்திற்கு வரமுதல் போய்விட்டது..!
பொறுத்திருந்து 1.30 இற்குக் கிட்ட பஸ்ஸைப் பிடித்தேன். அதற்கு
இடையில் என்னிடம் கணிதம் படித்த ஒரு மாணவரைச் சந்தித்தேன். அவருடன் சிறிது நேரம் கதைத்துவிட்டு
நிற்க, எனது அலுவலக அறையில் குளிர்சாதன வசதியை (AC) நிறுத்தாமல் வந்துவிட்டேன் என்ற
செய்தி, ஒரு ஊழியர் வாயிலாக வந்தது. நல்ல வேளை பஸ் வரதாமதமாகியதால், எனது அறைத்திறப்பை, ஒரு பெண் ஊழியரிடம் கொடுத்து, உடனேயே அதனை நிறுத்திவிட்டு,
பாதுகாப்பு ஊழியர் உதவியுடன் அந்தத் திறப்புக் கோர்வை என்னிடம் திரும்ப வந்தது. அதுவரை
பஸ் வராததால் இவ்வளவும் நடந்தது. எனது அறையின் திறப்பை அவசரதேவைக்காகப் பாதுகாப்பு
ஊழியரிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.
பஸ்ஸில் நிறையக்கூட்டம். திருகோணமலை பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள்
சிலரைக்கண்டேன். ஒரு ஜப்பான் இளைஞருடனும் கதைத்தேன். அதிகம் கதைக்க சூழல் அமையவில்லை.
அதற்கு இடையே திருகோணமலைப்பல்கலைக்கழக ஊழியர் ஒருவருடன் நெருங்கிக் கதைக்க, அவரது ஏக்கம்
புரிந்தது..! திருமணமாகி 12 வருடங்கள் குழந்தையில்லாமல் செய்யும் மருத்துவ பரிசோதனைகளும்,
கோவில் பிரார்த்தனைகளும், அவரது விரதங்களும், கொள்கைகளும் மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும்
அவரிடம் ஒரு நெருக்கம் ஏற்பட்டது.
வேண்டாம் என்றால் சிலருக்கு கொடுக்கும் இறைவன், வேண்டும்
என்பவருக்கு கொடுக்காமல் விடுவதன் நோக்கம் தெரிய ஆவல்..!
முருகனில் நம்பிக்கை வைத்திருக்கும் அவருக்கு, எனது முருகன்
கதையை சற்று சுருக்கமாகச்சொன்னேன். என்னைவிட அவர் முருகனிடம் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.
அதன் பலனை இந்த திருவிழாக்காலங்களில் உணரக் காத்திருக்கின்றார்.
என்னைவிட மிகச்சிறிய வயதை உடையவர் என்றாலும், கல்வியில் பெரிதாகச்
சாதிக்காவிட்டாலும், ஒரு நல்ல நேர்மையான, குடிவெறி இல்லாத மனிதனாக இருக்க மிகவும் முயற்சி
செய்வதுடன், தனது தந்தைவழி உறவுகளுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றார்.
சில வருடங்கள் மேசன் வேலைகூடச் செய்தாலும் அவர் ஒரு பட்டதாரி..!
தற்போது நிதிப்பிரிவில் கடமை புரிகின்றார். அவரது மனைவியும் அவரைப்போலவே யாழ் பல்கலைக்கழகத்தில்
பணி புரிகின்றார். தற்போதைய துணைவேந்தர் பற்றற்றவர் என்பதால், அவரை யாராலும் வளைக்கவோ
வாங்கவோ முடியவில்லை. தனக்குச் சரி என்று படுவதைச் செய்து, நல்ல ஒரு துணைவேந்தராக இருப்பதாகச்சொன்னார்..! தனது கட்டார் நாட்டு அனுபவத்துடன், தான் குடும்பத்திற்கு
செய்த உதவிகளையும், இந்தியர்கள் என்றாலே நம்பமுடியாது என்றாலும் தான் நம்பிய ஒரு கேரள
பொறியியளாளர் பற்றி, பெருமையாகச் சொன்னார். ஒரு நாளும் எல்லாரையும் தப்பாகச் சொல்லக்கூடாது.
நல்லவர்கள் எங்கும் உள்ளார்கள். ஆனால் வெளிப்படுவதில் தான் சுணக்கம் ஏற்படும்.
கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் வழங்கும் துரைராஜா தங்க விருதை,
உண்மையான தங்க விருதாக மாற்றிய தற்போதைய வவுனியாத் துணைவேந்தர் பற்றியும், அவரது வேலைக்கான
ஆர்ப்பணிப்பு பற்றியும் பெருமையாகக் கூறினார்..! கோண்டாவில் மற்றும் அல்வா பகுதியுடன்
தொடர்புபட்ட அந்த இளைஞரின் எண்ணங்கள் மெய்பட வேண்டும் என்பதோடு, வாசியசாலைக் குழு,
கோவில் குழு மற்றும் மைதானக் குழு என்ற மூன்று குழுவில் தான் மைதானக்குழுவில் இல்லாததால்
நலிவடைந்தவர்கள் எனச் சொன்னாலும் தான் ஒரு நாளும் மது குடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக
இருப்பதாகச் சொல்லும்போது, எனக்கே அவரைப் பாராட்டத்தோன்றியது..! நல்ல அண்ணன், கணவன்,
தந்தை என பல அவதாரங்களில் அவர் ஜொலிக்க இறைவன் ஆசீர்வதிக்கட்டும் என்பதோடு, நானும்
வீடுவந்து சேர இருட்டவில்லை என்பது ஒரு மகிழ்ச்சி..!
என்னுடன் சில மணிகளில் மழையும் கூட சேர்ந்து வந்தது அதைவிட
மகிழ்ச்சி..!
ஆ.கெ.கோகிலன்
16-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக