வரப்பிரகாஷ்..!
இவர் எனது தம்பியின் பல்கலைக்கழகத்
தோழன் (Batch Mate). 1996இல் பொறியியல் பீடத்திற்குத் தெரிவாகி, ஒரு வருடத்திற்குள்
பகிடிவதை என்ற அரக்கனிடம் பலியாகிவிட்டார்..! அது மாத்திரமன்றி, அவரது பெற்றோரின்,
உறவுகளின் மற்றும் நட்புக்களின் கனவும் நாசமாகியது..!
அது மட்டுமா..? அவருக்குப் பகிடிவதை என்ற அரக்கனை ஏவிய சிரேஷ்ட மாணவர்களின் கனவும்
சிதைந்தது..! அதுமட்டுமல்லாமல் சட்டங்களுக்குப் பயந்து நாட்டைவிட்டு ஓடியவர்களும்,
இன்று வரை அந்தத் தவறால் வருந்துபவர்களும் இந்த உலகில் எங்கோ பல மூலைகளில் ஒடுங்கி இருக்கின்றார்கள்..! அந்த நிகழ்வுக்குப்
பின்னர் பகிடிவதை முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளது. யாராவது செய்தால், கடும் விசாரணைகளூடாகத்
தண்டனைக்கு உட்படுத்துவதுடன், அவரின் படிப்பு, நன்மதிப்பு மற்றும் பெற்றோர், உறவுகள், நட்புக்கள் என்பவர்களின் கனவுகள் எல்லாம் தொலையும்..!
1996இல் நிகழ்ந்த இவரின் மரணம் இலங்கையில் பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒரு நிகழ்வாகப் பார்க்கப்படுவதை,
பலர் தற்போது மறந்துவிட்டார்கள்..!
“வேடிக்கை வினையாகும்..!” என்பது பகிடிவதைக்கான கருவாகக்கூடக் கருதலாம்.
எமது நிறுவனங்களில் தற்போது புதுமுக மாணவர்கள் பலர் வந்துள்ளார்கள்.
சிரேஷ்ட மாணவர்களுக்கு அவர்களுடன் நட்புக்களை ஏற்படுத்தவும், நேசக்கரம் நீட்டவும் ஆசையிருப்பது
தவறு அல்ல..! ஆனால் அதே மாணவர்களுள் அதட்டிக்கதைக்கவும், கைநீட்டவும், வதைக்கவும் தயங்காத
மாணவர்களும் இருக்கின்றார்கள்..!
என்னவாக இருந்தாலும் இயல்பாக மனிதன் ஒரு விலங்கு தான்..! எவ்வளது தான்
அறிவால் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும்,
கணத்தில் ஏற்படும் கோப உணர்வுகள், அறிவை மதிக்காது போக, அங்கே சூழல் விபரீதமாகும்..! அது எப்ப வெளிவரும்
என்பது யாருக்கும் தெரியாது..? அவ்வாறு வந்தால் அதனை அடக்கவும் முடியாது. விபரீதங்களே
எச்சமாகும்..! பயனாகச் சட்டங்கள் தனது கரங்களை நீட்டும்..! கல்வி பாதியிலே நிற்கும்..!
குடும்பங்கள் கவலையில் மூழ்கும்..! நிறுவனத்தின் கண்களிலும் இரத்தக் கண்ணீர் வழியும்..!
இவ்வாறான சூழலைத் தவிர்க்கவே நாம் சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றோம்.
சிலர் அதனை உணர்ந்து கேட்டு நடக்கின்றார்கள். சிலர் தெரிந்தாலும் விபரீதத்தின் விளைவைப்
பார்க்காத படியால், புரியாத மாதிரியே திரிகின்றார்கள்..!
சிலருக்கு நாம் உணரக்கூடிய வகையில் சொல்லவில்லை என்று நினைக்கின்றேன். இரு சாராருக்குமான தொடர்பாடல் கால்வாய்களிலுள்ள
பிரச்சனைகள் அவை..! அதனைச் சரி செய்தால் எல்லாம் சரியாகப் புரியும். புரிந்தால் அனைவரது
வாழ்க்கையும் நன்றாக அமையும். அன்பும், அறிவும் தளைக்கும்.
புரிந்தும் புரியாதது போல் நடித்து, அர்ப்ப சந்தோசங்களுக்காக விபரீதங்களை
விலைகொடுத்து வாங்கக்கூடாது. அப்படி யாராவது வாங்கினால், யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
அவரது விதிப்பயனை அனைவரும் பார்க்க, சில சூழல்கள்
ஏற்படும். சிலவேளைகளில் வரலாறு மீண்டும் புரட்டப்படும்..!
ஆ.கெ.கோகிலன்
26-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக