அனிமல் (Animal)..!
மனிதன் ஒரு விலங்கு..! அவன் அறிவால் கடவுள் மாதிரி நடந்தாலும், உள்ளுக்குள் அவன் விலங்கு தான் என்பதை உணர்த்த வந்த படம் தான் அனிமல்..!
பணக்காரக்குடும்பம், தமது அந்தஸ்தை நிலைநாட்ட ஒரு குறிப்பிட்ட
மேட்டுக்குடி மக்களுடன் மாத்திரம் பழகுவதும், எப்போதும் பெரிய அளவில் பணம் சம்பாதித்து,
தாம் தான் உசத்தி என்பதைக் காட்ட முற்படுவதுமே, அவர்களது வாழ்க்கை முறை.
தனது தந்தையே தன்னுடைய ஹீரோ என்று சொல்லும் தனயன், தந்தையிடம்
பேச தவமிருப்பதும், தந்தை தனது வேலைப்பளுவால் மகனைச்சந்திக்காது விடுவதும், இதனையே
தந்தையை தான் பழிவங்க அல்லது தந்தைக்கு பாடம் புகட்ட நினைக்கும் தனயன், நீங்கள் ஒரு
நாள் மகனாகவும், தான் அதேநாள் அப்பாவாகவும் இருப்பதாகச்சொல்லி,
தனது மனக்குமுறல்களைக் கொட்டி, தந்தையைக் காயப்படுத்துவதும், தந்தை இந்தப்பிறப்பில்
தான் இப்படியே இருந்துவிட்டுப் போவதாகவும், அடுத்த பிறப்பில் மகனாக வந்து, உனது அன்பில்
வளர்வதாகவும், அதற்கு அடுத்த பிறப்பில் தான் திரும்ப வந்து, அந்தக்கடனைத் தீர்ப்பதாகவும்
சொல்லி காட்சிகள் அமைத்திருப்பது, விதிப்பயனையும், கர்மாவையும் சர்வசாதாரணமாகக் கடந்து
செல்வதைப் போல், மிருகம் என்றால் அப்படித்தான் இருக்குமோ எனத்தோற்றுகின்றது..!
சுருக்கமாக, இன்று நாயாக இருப்பது பின்னர் ஒருகாலத்தில் மனிதனாக வரும்..!
இன்று மனிதனாக இருப்பது பின்னர் நாயாக வரும். இதைப்புரிந்து இரு விலங்குகளும் நடக்க வேண்டும்.
இங்கிருக்கும் உயிர்களின் (ஆத்மா) ஆடைகளே உருவங்கள்..!
படம் முழுக்க கெட்ட வார்த்தைகள், முத்தக்காட்சிகள், படுக்கையறைக்காட்சிகள்,
கொலைக்காட்சிகள் என்று வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது..! சென்சார் போர்ட் என்னத்திற்கு
இருக்கு என்ற ஒரு எண்ணமே வந்துவிட்டது.
சகோதரியின் கணவனைக்கொல்வதும், சித்தப்பா பிள்ளைகளைக் கூட
வைத்திருப்பதும், தாத்தாவின் தம்பி குடும்பப் போட்டியில், ஒருவரை ஒருவர் கொன்று சாய்ப்பதும்
ஆதிகாலத்தில் இருந்த மனிதன் தான், இப்போதும் இருக்கின்றான் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார்கள்.
நடிப்பில் ரன்பீர் கபூர் பிளந்து கட்டியுள்ளார். ராஷ்மிகா
மந்தானாவிற்கு வாயில் புண்ணே வந்திருக்கும்..! அவ்வளவு உதட்டுக் கடி..! போதாததற்கு
இதய மாற்று அறுவைச்சிகிச்சையால் இன்னொன்றும் கிடைக்க, ரன்பீர் என்ன படம் நடித்தார்
என்பதே விளங்கவில்லை..!
அதேபோல் தான், பாபிதியோலும் கொடூர வில்லன். பெண் வேட்டையன்..!
அனில்கபூர் கடுமையான தந்தை..!
Body Double என்ற
இரட்டையர் நடைமுறையை வைத்து, மாறி மாறி வெட்டிக்குதறியுள்ளார்கள்.
சகோதரன் பாபிதியோலை, இன்னோர் ஒன்றுவிட்ட சகோதரன் ரன்பீர்,
கழுத்தை அறுத்துக்கொல்லும் காட்சி, மாட்டு இறைச்சிக்கடையை விட நரகமாகத் தோன்றியது..!
தொழில்நுட்பம் தரம். பாடல்கள் சிறப்பு..! பாபி தியோல் அறிமுகக் காட்சியில் வரும் பாடல் திரும்பத்திரும்பக் கேட்கத்தூண்டுகின்றது. அவ்வளவு அற்புதம்.
காட்சிகள் தத்துருபமாக வரவேண்டும் என்றால் உண்மையாகயே கணவன்
மனைவியாக வாழவேண்டும் போல..! பிறகு அங்கே ஏது நடிப்பு..? நிஜமாகவே வாழ்ந்துவிட்டு செல்லலாம்.
இலகு..!
சந்தீப் ரெட்டி வெங்கா என்ற இயக்குனர் காட்டுக்குள் தான்
இருக்கின்றார் போலுள்ளது..! அது தான், அந்த இயல்புகளைத் திரையில் காட்டியுள்ளார். அதே
இயல்புள்ள பலர் இங்கேயும் இருக்கின்றார்கள். நிச்சயம் அவர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும்.
இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் வந்திருக்க வேண்டிய
படம்.
ஆ.கெ.கோகிலன்
19-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக