குழந்தை இல்லையா..?
2003இல் எனது நிறுவனத்தின் பணிப்பாளர் என்னைப்பார்த்து “என்னடா கலியாணமாகி
இரண்டு மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.. என்ன இன்னும் ஒன்றையும் காணோம்.. சும்மா இருக்கின்றயா..?
அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றாயா..?” என்று கேட்டார். நான் என்ன சொல்ல முடியும்..?
நான் எப்போதும் முயற்சிகள் செய்வது வழக்கம். வழமையானவர்களை விட கூட, நித்திரையை தவிர்த்துக்கூடச்
செய்வேன்..! ஆனால் பலன் வருவது என்னுடைய கையில் இல்லை. அது எப்ப வரவேண்டுமோ அப்போது
தான் வரும் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கின்றது.
அதுவரை என்ன என்ன மகிழ்ச்சியான விடயங்கள் இருக்கின்றனவோ அவற்றைச் செய்யவோ அல்லது
நடைமுறைப்படுத்தவோ முயல்வேன்.
என்னுடைய பணிப்பளார் சொன்னதை மனைவியிடம் சொன்னேன். உடனே அழத்தொடங்கிவிட்டார்..!
எனக்கு என்னைப்பற்றி நன்றாகத் தெரியும். நான் எப்படியான ஆள் என்பதும்
மனைவிக்குத்தெரியும். மனைவியை சந்திக்க முதல்,
நான் ஒரு 10 வருடங்களுக்கு மேல் எங்கே இருந்தேன் என்பதை என்னுடன் பழகிய பலருக்குத்
தெரியாது..! சிலர் கலியாணம் முடித்துப் பிள்ளையுடன் இந்தியாவில் இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்..!
சிலர் யாருடனோ தொடர்பில் இருப்பதாகப் பேசியுள்ளார்கள்..! சிலர் காதலில் விழுந்துள்ளார்
என்றும், காதலிக்குப் பிள்ளை கூட இருப்பதாகவும் பேசிக்கொண்டார்கள்..! இந்தக்கதைகளை,
எனது ஊரிலேயே அதிகம் பேர் பரிமாறியுள்ளார்கள்..!
இந்தக்கதைகள் அதிகமாக இருந்த காலத்திலே, இந்தியாவில் படித்துவிட்டு
வவுனியா இணைந்த பல்கலைக்கழகத்தில் போதனாசிரியராக சில காலம் வேலைசெய்யும்போது தான்,
என்காதுபடப் பேசப்பட்ட கதைகள் குறையத் தொடங்கின..! ஏதோ ஒரு பிரச்சனை இருப்பது மட்டும்
உண்மையாக இருக்கலாம். ஆனால் மற்றைய கதைகள் வதந்தியாகவும் இருக்கலாம் என நம்பத்தொடங்கினர்.
சிலர் என்னிடம் நேரடியாகக் கேட்பார்கள். நானும் “ஓம், எனக்குப் பிள்ளை
இருக்கின்றது என்று சொல்வேன்..!” எங்கு இருக்கின்றது..? யாருடன் இருக்கின்றது..? என்ன
பெயர் என்று எல்லாம் கேட்பார்கள்..? சிலருக்கு
அதைப்பற்றிக் கேட்க வேண்டாம் என்று சொல்வேன். சிலருக்கு சொல்லக்கூடியதைச் சொல்வேன்.
சிலருக்கு ஒன்றும் சொல்வதில்லை. உண்மை, எனக்கும் இறைவனுக்கும் இன்னும் சிலருக்கும்
தெரியலாம்..!
அழும் சத்தம் கேட்டு, மனைவியிடம் நான், இதற்கு எல்லாம் அழக்கூடாது.
எது எப்ப நடக்க வேண்டுமோ அது அப்போது நடக்கும் என்பேன். சில சமயம் சமாதானம் ஆவார்.
சில சமயம் கவலையை மறைத்துக்கொண்டு சந்தோசமாக இருப்பதாகக் காட்டுவார்..! எனக்கும் சில சமயம் கோபம் வரும். யாராவது இதைப்பற்றிக்கேட்டால், உடனே வேறு மாதிரிக் கதைத்து
வேறுப்பை ஏற்படுத்திவிடுவேன்..!
பணிப்பாளருக்கும் அவ்வாறே சொல்லியுள்ளேன்..! அதுமாத்திரமன்றி, நாம் எதனையும் சொல்லிச்செய்ய முடியாது.
இப்படித்தான் பிள்ளை வேண்டும் என்றும், இப்படித்தான் அந்தப்பிள்ளை வளரவேண்டும் என்றும்
இப்படித்தான் அந்தப்பிள்ளை வாழவேண்டும் என்றும் யாராலும் தீர்மானிக்க முடியாது. அந்த
சக்தியை இறைவன் நமக்குத் தரவில்லை. பிள்ளையிருப்பதால் சந்தோசப்படவோ இல்லை என்பதால்
கவலைப்படவோ தேவையில்லை. காலங்கள் போக சம்பவங்கள் மாறும். கவலைகளும் மாறும். பிள்ளையிருப்பவன்
அழுவான்..! இல்லாதவன் நிம்மதியாக இருப்பான்..! இதுவும் மாறி நடக்கலாம். இதனைப்பற்றி
நாம் பெரிதாக அலட்டத்தேவையில்லை என்று எனது
பணிப்பாளருக்குச்சொல்லி, திரும்ப, “அப்பா..!” என்ற சத்தத்துடன் மகள் நின்றார். அவரைப்பார்க்க
கவலையாக இருந்தது. க.பொ.த (உயர்தரம்) பரீட்சைப்பேறுகள் அவரை மாற்றியிருந்தன..! எம்மையும்
கூட யோசிக்க வைத்தன..!
உண்மையில் இந்தக்கனவில் இருந்தது
போல் பிள்ளையே இல்லாமல் இருந்தால் நிம்மதியாக இருந்திருப்போமா..? இறைவனிடம் மன்றாடி,
வேண்டிய பிள்ளை, இப்படிக்கவலையுடன், ஒரே படிப்பாகத் தன்னை வருத்துவதைப் பார்க்க வேதனையாக
இருந்தது..!
கல்வியே வியாபாரமாகிப் போன நிலையில் இதனை நினைத்து வேதனைப்படுவது தவறு.
பெற்றோராகிய நாம், குழந்தை இல்லை என்றால் எமது பாட்டிலே போகலாம்..! குழந்தை இருந்தால்,
அவர்களை ஏதாவது ஒரு வழியில் வாழவைப்பதற்குத் தேவையான அடிப்படைகளைச் செய்து கொடுப்பது
என்பது முக்கியமான எமது பொறுப்பு..!
கனவுகள் காண நன்றாக இருக்கும். நிஜம் கடினமாக இருக்கும். எந்தத்துன்பத்தையும்
தாங்கப் பழகின், எம்மை யாரும் அசைக்க முடியாது..!
ஆ.கெ.கோகிலன்
16-08-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக