எல்லைப் பிரச்சனை..!
நாட்டிலும் சரி, வீட்டிலும் சரி இதே பிரச்சனை தொடர்ந்துகொண்டே
இருக்கின்றது. எமது நாட்டில் மாத்திரமல்ல. இந்த நோய் முழு உலகையும் ஆட்டிப்படைக்கின்றது. நாளை
நாம் இருப்போமா என்பதைக் கூட சரியாகக் கூறமுடியாத நாம் வருங்காலத்தைப்பற்றி அதிகம்
அலட்டிக்கொள்வது என்னைப்பொறுத்தவரை அநாவசியமானது. எனது குடும்பத்திலேயே இந்தப்பிரச்சனையால்
உறவுகளுக்குள் தொடர் பகை நிலவுகின்றது. ஒருத்தரோடு ஒருத்தர் கதைப்பதில்லை. என்னை ஏமாற்றிவிட்டார்கள்
என்பதும், சட்டத்தின் துணையை நாடுவதும், அரச அலுவலகங்களில் நேரத்தைச் செலவழித்து, நிம்மதியின்றி
அலைவதும் வாடிக்கையாகப் போய்விட்டது. சொந்தக்காணிகளை விட்டு எத்தனையோ பேர் வெளிநாடுகளில்
குத்தகைக்கும், நீண்ட கால வாடகைக்கும் பணங்களைச் செலுத்தி, காலத்தைக்கடத்தி வருகின்றார்கள்.
பிறந்த நாட்டிலேயே நிம்மதியாகவும், நிறைவாகவும் வாழ முடியவில்லை என்றால் எங்கே தான்
அது கிடைக்கும். என்னைப் பொறுத்தவரை, அயலோடு அளவாகப் பழகவும் கதைக்கவும் வேண்டும்.
பகைவராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ”குற்றம்
பார்க்கின் சுற்றம் இல்லை” என்பதை உணர்ந்து நடக்க வேண்டும். அதே போல ஒருவரையும் குறைகூறக்கூடாது.
எம்முடன் ஒருவர் முரண்படுகின்றார் என்றால் எமது செயற்பாடு அவருக்குப் பிடிக்கவில்லை
என்பது அர்த்தம். அதனை தவிர்க்க முனைய வேண்டும். ஒன்றில் மற்றவர்களுக்கு பிடித்த மாதிரி
இருக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு எம்மால் தொல்லைகள் வராத வகையில் நாம் விலத்திச்
செல்ல வேண்டும். இது பயத்தால் வந்தது அல்ல. சிந்தனையால் வந்தது. வீரம் இருக்கு என்பதற்காகச்
சண்டை பிடிப்பதால் அப்பிரச்சனை தீராது. மாறாக வளரும். இருபக்கங்களிலும் என்றும் அமைதியைக்
குலைக்கவே செய்யும். ”நல்லதும், தீயதும் பிறர் தரவரா” என்பது போல் கெட்டது நடக்கின்றது
என்றால் அதற்குக்காரணம் நாமாகவே இருப்போம்.
வரலாற்றையும், இயற்கையையும் சரியாகப் புரிந்தால் யாரையும்
கோபிக்க இடமில்லை. மாறாக எம்மை நாமே மாற்றிக்கொள்ள நிறைய இடமுள்ளது. அதனைச் செய்வதன்
ஊடாக நிறைவாகவும், நிம்மதியாகவும், எமது வாழ்க்கை உலகிற்கு ஒரு பயனுள்ள வாழ்க்கையாகவும்
மாறும் என்பது எனது நம்பிக்கை. இந்தப்பாதை மிகவும் கடினமான பாதை தான். இயற்கை அல்லது இறைவன் துணையுடணே பயணப்பட வேண்டியுள்ளது.
யாரும் எதையும் கொண்டு செல்லவும், நீண்ட காலத்திற்கு அனுபவிக்கவும் இயற்கை வரம் கொடுப்பதில்லை.
எல்லாம் இரவும் பகலும் போல் மாறி மாறித் தான் வரும். பிடிக்காவிட்டாலும், இது தான்
உண்மை. ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும்.
ஆ.கெ.கோகிலன்
14-05-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக