பணிப்பாளர் நாயகம் விலகல்..!

 



என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, நான் பணிப்பாளராக வந்த காலத்தில் இருந்து எமது தலைமையகத்திற்கு ஒரு நிலையான, மனவுறுதியுள்ள, எந்தப் பிரச்சனைகளையும் சமாளித்து, நிறுவனத்தை வழிநடத்தக்கூடிய ஒரு தலைமை வந்து அமையவில்லை என்பது ஒரு தொடரும் பெரும் கவலையாக மாறியுள்ளது..! உலகே கொரோனா, காலநிலை மாற்றம், உலகப் போர் பதட்டம், பொருளாதார வீழ்ச்சி என்று திண்டாட, இவ்வாறான நிகழ்வுகளும் எமது நிறுவனத்திற்குள் வர, முடிவுகள் எடுப்பதற்கே தடுமாற வேண்டியுள்ளது. என்னைப்பொறுத்தவரை, ஒரு பதவிக்குச் சென்றுவிட்டால், இயற்கையால் எமக்குத்தரப்பட்ட வசதி வாய்ப்புக்களையும், அறிவையும் பயன்படுத்திப் போராடி பதவிக்கு நியாயமாக இருந்து, நிறுவனத்தை சுமூகமாக வழிநடத்திச் செல்வதையே நான் விரும்புவேன். அதற்காகவே எனது பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவேன். அது முடியவில்லை என்றால் ஒரு குறித்த காலத்திற்குப் பிறகு, என்னால் எதுவும் செய்யமுடியாது என்பதை ஒத்துக்கொண்டு, விலகிவிடுவேன். அல்லது மாற்றம் பெற்று, வேறு ஒரு நிறுவனத்திற்குச் சென்றுவிடுவேன்.

இவ்வாறே, எமது தலைமையகத்திற்கு வரும் பணிப்பாளர் நாயகத்தினையும் எதிர்பார்க்கின்றேன்.

அண்மையில் எமது நிறுவனத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை மிகவும் சிரமப்பட்டு, மிக நிறைவாகக் கொண்டாடினோம். அதற்கு, உள்ளூர் தலைகளையே விருந்தினர்களாக அழைக்க முனைய, எமது ஊழியர்கள், குறிப்பாக கல்விசார் ஊழியர்கள், பணிப்பாளர் நாயகத்தை அழைக்க விரும்பினார்கள். நான் மறுக்கவில்லை. அவர்களின் எண்ணப்படியே அனைத்தையும் செய்து முடித்தோம். அந்த சமயத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் நாயகத்துடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர்  ”நான் ஒரு வருடம் வரை தான் இந்த நிறுவனத்தை நிமிர்த்த முனைவேன். அது சரிவரவில்லை என்றால் நானே விலத்திவிடுவேன்.” என்று சொன்னார்.

நான் சொன்னேன் “கொஞ்சக்காலம் எடுத்து, ஒரு நிலைக்கு கொண்டுவரும்வரை முயலலாம். ஒரு வருடம்  என்பது சிலவேளை போதாமல் இருக்கலாம்.” அவர் சொன்னார் ” தன்னால் ஒரு வருடத்திற்குள் முடியவில்லை என்றால் அது என்னால் எப்போதும் முடியாது என்றார்.”

மேற்கொண்டு நான் எதுவும் அவருடன் இதுபற்றிக் கதைக்கவில்லை. தற்போது, அவர் சொன்னதை 7  மாதத்திலே செய்துவிட்டார். 

ஒவ்வொரு நிறுவனங்களும் ஆய்வுகூடங்களோ அல்லது சோதனை பொருட்களோ அல்ல.  உயிரும், உடலும், சூழலும், இயந்திரங்களும், நிதியும், காலமும் சேர்ந்தே இவை எல்லாம். இவற்றை பரிசோதனை செய்வது போல் உள்ளீட்டையும், நிரற்படுத்தலையும் மாற்றி மாற்றி ஒரு எதிர்பார்த்த வெளியீட்டை குறித்த காலத்தில் எடுப்பது என்பது அவ்வளவு இலகுவான விடயம் கிடையாது.  உலகின் ஒரு மிகச்சிறு நுண் உலகமாகவே இதனைப் பார்க்கலாம். இங்கு எல்லாம் இருக்கின்றது.  பொதுவான முடிவோ அல்லது தனியாள் முடிவோ அல்லது இரண்டும் இணைந்த முடிவோ எடுக்க முடியும். அதற்கான காலத்தைக் கொடுக்க நாம் தயாரானால் தான் அது சாத்தியப்படும்.  அதற்கு எமது பணிப்பாளர் நாயங்கள் தயாரில்லை. வேறு என்ன செய்ய..?

அவ்வாறான சூழலை ஏற்கத் தயாரான தலைமைகளே எமக்கு வேண்டும்.  முதலில் தாம் சரியாக இருந்துகொண்டு, மற்றவர்களை வழிநடத்த வேண்டும். மாறாக மற்றவர்கள் சரியாக நடக்க வேண்டும், தாம் எவ்வாறும் நடக்கலாம் என்றும் நினைத்தால் இன்னும் பல பணிப்பாளர் நாயகங்கள் வந்தேயாக வேண்டும்.

 

03-04-2023

ஆ.கெ.கோகிலன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!