அறுந்த தாலிக்கொடி..!

 


நேற்று மாலை வேலையால் வந்து எனது வீட்டிலுள்ள பின்வளவு மரங்களுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் போது மனைவி சொன்னார் மகள் பஸ்ஸில் வரும்போது ஒரு விபத்து நடந்ததாகவும், மோட்டார் வண்டியையும், தலைக்கவசத்தையும் பார்க்கும்போது அப்பா மாதிரி இருந்தாகச் சொல்லி பயப்பட்டார், என்றும், அவர் பின்வளவில் மரங்களுக்கு தண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றார் நீ பயப்படாமல், வேறோர் பஸ்ஸைப் பிடித்துக்கொண்டு வீடு வந்து சேர் என்று தான் சொன்னேன், என எனக்கு சொன்னார்.

நானும் சிரித்துக்கொண்டு, மகளின் பாசத்தை நினைத்து வியந்தேன். இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் தண்ணீர் பாய்ச்சுவதிலேயே குறியாக இருந்தேன்.

சில மணிகள் கடந்ததும், தேநீர் அருந்திவிட்டு, சின்ன மகளுடன் சேர்ந்து கார சாரமாக பாணும் சாம்பாறும் சாப்பிட்டோம்.  அதனால் வயிறு சற்று ஊதியது போலிருந்தது. பின்னர் எனது வீட்டிற்கு வந்து, ஏதோ வீடியோ பார்க்கும் போது நெஞ்சிக்குள் ஏதோ இட்டுமுட்டாக இருந்தது. தண்ணீர் குடித்துவிட்டு, இங்குமங்கும் அலைந்தபோதும் அவ்வாறே இருந்தது.  “நெஞ்சுக்குள் நோகின்றது படுக்கப்போகின்றேன் என்று..“ சின்ன மகளிடம் மெல்லிய குரலில் சொல்லிவிட்டு மொட்டை மாடிக்குப் போனேன். சிறிது நேரத்தில் அவள் மேலே வந்து, அப்பா  ”அம்மா சாப்பாடு கொண்டுவந்துள்ளார், எழும்பி வந்து சாப்பிடுங்கள்..” என்றாள். நானும் முதலில் தயங்கி, பராவாயில்லை. வலிக்கு வலியே மருந்து என்பது போல், மாலை உண்டதால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரணம் இன்னொரு சாப்பாடு என நினைத்து உண்டேன். அத்துடன், எனக்குப் பிடித்த வாழைப்பொத்தி வறையும் சேர்ந்ததால் நன்றாகச் சாப்பிட்டுவிட்டேன். அதன் பிறகு வலி தெரியவில்லை.

அதேவேளை சின்ன மகளிடம் சொன்னது, மனைவி மற்றும் பெரிய மகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அத்துடன் நேற்று மனைவியின் தாலியும் பாடசாலையில் இருந்து வரும்போது அறுந்துவிட்டது.

இந்நிகழ்வால் அவர்கள் மேலும் பயந்துள்ளார்கள். ஆனால் நான் படுத்து நன்றாக உறங்கிவிட்டேன்.

இன்று தான்  நேற்று நடந்த தாலியறுந்த விடயமும் அதனோடு தொடர்புபடுத்தி   மனைவி பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பயத்தையும் அறிந்தேன்.

இன்று மதியம் மனைவியைக் காரில் ஒரு நகைக்கடைக்குக் கூட்டிச்சென்று, அறுந்த தாலிக்கொடியை ஒட்டி, மீண்டும் மனைவியிடம் கொடுத்தேன். மாலை மகள்களுக்கு முன்னே மீண்டும் அதனைக் கழற்றிப் போட்டுவிட்டேன். மனைவியும், பிள்ளைகளும் மகிழ்ந்தார்கள். எனக்கும்  ஒரு நிறைவு கிடைத்தது.

 

ஆ.கெ.கோகிலன்

20-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நம்பிக்கையீனம்..!