முகாமைத்துவக் கூட்டம்..!

 



 

இன்று காலையே Projector தெளிவில்லை என்றும் அதனை உடனே மாற்றித்தரும்படியும் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளர் இறுக்கமான சூழ்நிலையில் கேட்டுக்கொண்டார். அதற்கு ஏற்பாடு செய்யும்போதே Vaiva இற்கான மாணவர்கள் கையெழுத்தைப் பெற வரிசைபோட்டார்கள். அதேநேரம் புகைப்படம் எடுக்க ஒரு துறைமாணவர்கள் தயாராக வேண்டிக்கொண்டார்கள். இவற்றை முடித்து வெளிவர, கல்விசார் ஊழியர்கள் யாவரும் ஒற்றுமையாகக் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை என்னிடம் தந்தார்கள். அதனை, வாசித்து பின்னர் தலைமையகத்திற்கு அனுப்பக் கேட்டுக்கொண்டார்கள்.  அவர்களுக்கும் எனக்கும் இடையில், அக்கடித விடயங்கள் தொடர்பாகச் சில கருத்தாடல்கள் நடந்தன. அவர்கள் நினைக்கின்றார்கள் ”தங்களுடைய சேவையை விட ஏனைய சேவைகளைப் பணிப்பாளர் பெரிதாகக் கருதுவதாக..” தங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காது காலம் தாழ்த்துவதாகவும், முன்னுரிமைப்படுத்துவதில் தவறுகள் இடம்பெறுவதாகவும், சில சேவைகளை தவிர்க்கலாம் என்பது போலவும், மாணவர்களைப்

போராட்டங்கள் செய்யக்கூடிய வகையில் வழிநடத்தத் தவறுவது போலவும் கருதுகின்றார்கள். நான் வழமைபோல் எதையும் மறைக்காமல் உண்மையாகவே கதைத்தேன். நம்பினார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அவர்கள் என்னையும்,  எனது வார்த்தைகளையும் நம்பவில்லை என்பதை மட்டும் உணர்ந்துகொண்டு, மிகவும் வேதனைப்பட்டேன்.  நான் இந்த நிறுவனத்தில் ஏறக்குறைய  6 வருடங்களுக்கு  சேவையாற்றிவிட்டேன்.  ஏறக்குறைய மூன்று வருடங்கள் இலகுவாகவும், கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் மற்றைய மூன்று வருடங்களும் கடினமாகவே நகர்கின்றன. இந்தக்காலப்பகுதியில் நானும் நோயால் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றேன்.  இந்தசமயத்தில், கல்வியாளர்கள் இவ்வாறு நினைக்கும் போது, அவர்களுக்கு ஒரு வணக்கத்தைப்போட்டு, தயவுசெய்து நீங்கள் நேரடியாக தலைமையகம் சென்று என்னை மாற்றும் கோரிக்கையை வைக்க வேண்டினேன். எனக்கும் மாற்றம் வந்தால் நல்லது என்ற எண்ணத்தில் தான் நானும் இருக்கின்றேன். போனவருடமே அதற்கான சூழல் வந்தது. நான் அவர்களாகப் போட்டால் ஏற்றுக்கொண்டு செல்வது என்ற எண்ணத்தில் இருந்தேன். எனது காரணங்களைக் கேட்டதால் உண்மைகளைச் சொன்னேன், மாற்றம் தடைப்பட்டது. இனி, எந்தவோர் காரணமும் சொல்லாமல், தலைமையகம் என்ன சொல்கின்றதோ அதனையே செய்ய முடிவெடுத்துள்ளேன்.  அது தான் அனைவருக்கும் நல்லது.  நான் ஆரம்பத்தில் இருந்தே யாழ்ப்பாணம் வர நினைக்கவில்லை.  பணிப்பாளராக வரவும் எண்ணவில்லை. அதுவும் எங்கிருந்து, தொலைந்தேனோ அதே இடத்தில் என்னைத்தெரிய வைத்ததற்கு  இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

மேலும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, உடனேயே முகாமைத்துவக் கூட்டத்தைக்கூட்டினேன். அதனூடாக அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற முயற்சித்தேன்.  இருந்தாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எல்லோரையும் சிக்கலுக்குள் மாட்டியேயாகும்.  இதற்கு ஒரே வழி தான் உண்டு. அது, ஒவ்வொருவரும் தங்களை நம்புவதும், வேலை நேரம் தவிர ஏனைய நேரங்களில், அனைத்து விரயங்களையும் தவிர்த்து, பயனுள்ள நடவடிக்கைகளில் இறங்குவதேயாகும்.

“நாடு முன்னேற நாமே உதவவேண்டும்.

நாடு முன்னேறினால், நாமும் நலமாக இருக்க முடியும்.” இது தான் எனது நம்பிக்கை.

 

ஆ.கெ.கோகிலன்

12-05-2023.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!