உயிர் சமநிலை

 



“சான்றினேஸ்” என்ற ஒரு  அறிவான அழகன், ”சினோடியா” என்ற நாட்டில் வசிக்கின்றான். அவன் அங்குள்ள இளம் அழகிய பெண்பிள்ளைகளைக் கடத்தி, தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி, அதன் பின்னர் கொன்று அவர்களின் தடயங்களைக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அழிக்கின்றான்.

 

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம், சான்றினேஸ் அந்நாட்டிலுள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பேராசிரியராகவும், அத்துறையில் நிபுணராகவும் இருந்து சேவையாற்றி வருகின்றான். அவன், செல்வச்செழிப்போடு வாழக்கூடிய வசதிகள் அவனுக்குப் பரம்பரையாகவே வந்துள்ளன.  அத்துடன் அவன் திருமணம் செய்யாமலே வாழ்கின்றான்.

 

சினோடியாவில் யாரும் விந்துத்தானம் செய்யலாம். அந்நாட்டில் அதற்கான அனுமதியும் வழிமுறைகளும் இருக்கின்றன.  அத்துடன் அந்நாட்டில் ஆண்களோ பெண்களோ திருமணம் செய்யாமல் தனித்து வாழவும் சட்டம் அனுமதிக்கின்றது.  அதேபோல் துணையில்லாமல் குழந்தைகள் பெறவும் வசதிகளும் சட்டங்களும் போதிய அளவில் அந்நாட்டில் இருக்கின்றன..!

அவ்வளவு நாகரீகம் மிக்க நாட்டில்  சான்றினேஸ் விந்துத்தானத்தில் நாட்டில் முதல் நிலை மனிதராகக் கௌரவிக்கப்பட்டான்.

இந்த நிலையில் சான்றினேஸ் உளவியல் சேவை செய்யும் அறையில் இருந்து ஒரு இளம் வயது பெண் வெளியேறி, சான்றினேஸ் பற்றி மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கு  முரணான தகவல்களை வெளியே தெரிவிக்கின்றாள். இது விஸ்வரூபம் எடுக்கின்றது. பல பெற்றோர்கள், தமது காணாமல் போன பெண் பிள்ளைகள் பற்றிய செய்திகளை சான்றினேஸூடன் தொடர்புபடுத்தி வெளிவந்தன. அந்நாட்டின் அரசிற்கும் அந்த விடயம் பெரும் நெருக்கடியாக வர, காவல் துறை மற்றும் புலனாய்வுத்துறைகள் தமது சேவைகளைத் துரிதப்படுத்த அனைத்தும்  சான்றினேஸ் என்ற உளவியல் பேராசிரியர் மேல் வந்து முடிந்தது.

பின்னர் அவன், அரச  காவல் படையால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். விசாரணை முடிவில்  அவனும்   மனநிலையில் முரணான தன்மைகளைக் கொண்டிருந்தது தெரியவந்தது.  தான் எத்தனையோ உயிர்களை உருவாக்கி இந்நாட்டுக்கு உதவியிருக்கின்றேன். அதேபோல் எனக்குப்பிடித்த உயிர்களை பாலியல் ஆசைகளுக்காக அழிக்கவும் செய்திருக்கின்றேன். இது தவறா..?

”மரம் பல நட்டவன்.. மரம் தறிப்பதற்கு தகுதியற்றவனா..?” என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்த அவனை, அரசு தனிச்சிறையில், அடைத்து அவனின் மனக்கோளாறைப் போக்க மேலும் பல உளவியல் நிபுணர்களை வைத்து சிகிச்சை செய்வதுடன், பாதிக்கப்பட்ட  பெற்றோருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கியதுடன்,  அவர்கள் ஒவ்வொருவருக்கும், சான்றினேஸின் உயிர் அணுக்களால் உருவாக்கப்பட்ட பெண்குழந்தைகளை,  வழங்கி, நீதியை நிலைநாட்ட உயிர் சமநிலையை செய்தது அரசு..!

(முழுவதும் பொய்)

 

ஆ.கெ.கோகிலன்

10-05-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!