காரும் சுடலையும்..!
இறைவன் இருக்கும் இடம் எங்கே என்று கேட்டால் இந்து சமயத்தில்உள்ளவர்கள்,
கோவிலில் அல்லது எமக்குள் அல்லது எல்லா இடத்திலும்
எனப் பல்வேறுமாதிரிச் சொல்வார்கள். அப்படிப்பார்க்கும்
போது எனக்கு இறைவன் சுடலையில் இருப்பதாகத் தோன்றுகின்றது. அங்கே பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்
அற்ற சமத்துவம் ஒன்று இருக்கின்றது. ஒரு உடல் எரியும்போது தான் மனித வாழ்க்கையே புரிகின்றது.
சைவக்கடவுளான சிவபெருமானை சுடலைக்கடவுளாகக்
கொள்வார்கள். சுடலையிலே ஆடுவதாகக் கூறுவார்கள். சாம்பலை பூசிச் சுடலைப்பொடி பூசியன்
என்பார்கள். அப்படிப்பட்ட சிவபெருமானே விரும்பக்கூடிய இடத்திற்கு அண்மைக்காலமாக அடிக்கடி
போய்வரக்கூடிய வாய்ப்பு எனக்கு வருகின்றது.
எனக்கு மாத்திரமல்ல. எனது காருக்கும் அதேமாதிரி நடக்கின்றது. கடந்த மூன்று வருடத்தில்
எமது சூழலிலுள்ள 3 முக்கிய சுடலைகளுக்கு எனது காரும், நானும் பல முறை போய்வரவும், அத்துடன்
கீரிமலைக்குப் போகவும் சந்தர்ப்பங்கள் வந்தன. அது ஒரு ஆச்சரியமான விடயமாக எனக்குத்
தோன்றுகின்றது.
நான் கார் வாங்கும் போது மனைவியிடம் கேட்டேன் “நீரும் வந்து,
உமக்குப்பிடித்த நிறத்தைத் தெரிவு செய்யும்படி” ஆனால் அன்றைய சூழலில் குறிப்பாக மாமனாரின்
உடல் நோயினால் மனைவியால், வரமுடியவில்லை. பின்னர் நான் தனியாகச் சென்று, எனது வீட்டின்
நிறம் வெள்ளை என்பதால், காரை கறுப்பாக அதுவும் கிருஷ்ணரின் நிறமான நீலம் கலந்த கறுப்பாகத்
தெரிவுசெய்தேன். என்ன மாயமோ மந்திரமோ தெரியாது
போகும் நாய்கள் குலைக்கும். காரின் இரண்டு
தவளை விளக்குகளும் (Frog light) தொடர்ந்து
எரிவதால், நாய்களுக்குப் பீதியைக் கிளப்புகின்றதோ தெரியவில்லை. பல இடங்களில் நாய்கள்
குலைப்பதை நான் அவதானித்து இருக்கின்றேன்.
உண்மையில் காரில் எமதர்மன் தான் இருக்கின்றாரோ தெரியவில்லை.
அதுமாத்திரமன்றி, கோயில் போகும் சந்தர்ப்பங்களுக்குச் சமமாக அல்லது அதைவிடக்கூடிய சந்தர்ப்பங்கள், சுடலைகளுக்குப் போவதற்கு அமைகின்றன. இதனை நானும் விரும்பியே செய்கின்றேன்.
நேற்றும் எனது பாலிய நண்பர்களின் தாயார் மறைவையொட்டி, அலுவலகத்திற்கு
லீவு போட்டு, எமது ஊரிலுள்ள சுடலைக்கு இருமுறை சென்றுவந்தேன். அத்துடன் கீரிமலைக்கும்
போகவேண்டிய சூழல் வந்தது.
அஸ்தியை எடுக்க சுடலைபோகும்போது, நண்பர்களின் தாயார் உடல்,
முற்றாக எரியாமல் இருந்தது. நானே பல பனை மட்டைகள் மற்றும் ஓலைகள் போட்டு மேலும் கொளுத்தினேன்.
அப்போது அந்த தாயாரின் உடலின் பாகங்கள் குறிப்பாகத் தலை மற்றும் நெஞ்சுப்பகுதி வெண்ணைய்
உருகுவதுபோல் உருகி உருகி எரிந்தது. இடையில் எனக்கு எச்சில் கூட வந்துவிட்டது. மற்றவர்களுக்குத்
தெரியாமல் தூரப்போய் துப்பினேன். மூக்கில்
சிறு அடைப்பு இருந்ததால் பிணவாடை தெரியவில்லை. இருளும்வரை எரித்து, பிண்ணர் தண்ணீர்
ஊற்றி அணைத்து, அதன்பின்னர் வழமையான சடங்குகளுடன் அஸ்தி எடுக்கப்பட்டு, அதற்கான முட்டியில்
போடப்பட்டு, வெள்ளைத்துணியால் கட்டி கடலுக்குக்
கொண்டுசென்றோம்.
சடங்குகளைப் பார்க்கும்போது, மரணவீட்டில் நடக்கும் வழிமுறைகளும்,
காடாற்றும்போது நடக்கும் வழிமுறைகளும், அந்தியேட்டியின் போது செய்யப்படும் வழிமுறைகளும்
ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. நீண்டகாலமாகப்
பின்பற்றிவரும் முறை என்பதால் அது தொடர்பாகக் கேள்விகள் கேட்பது நியாயமற்றது என்ற நோக்கில்
நமது வாழ்க்கை நகர்கின்றது. உலகில் ஜந்தில் ஒரு பங்கு மக்கள் கூட இந்த முறைகளைப் பின்பற்றுவது
கிடையாது. இருந்தாலும் விசேடமான இந்த முறையே எமக்குத் தெரிவதாலும், உறவுகளும், சுற்றமும்
பின்பற்றுவதாலும் நாமும் பின்பற்றுகின்றோம். “காக்கைக்குத் தன்குஞ்சு பொன் குஞ்சு”
என்பது போல் எமக்கு, எமது முன்னோர் வழிமுறையே சிறந்தது. அதைப்பின்பற்றுவதே நமது கடமை.
சுருக்கமாக சொன்னால், சொந்த அன்னையே எமக்கு அன்னை. பிறந்த நாடே எமது தாய் நாடு. அதேபோல் தாய் தந்தையரின் மதம் என்னவோ
அதுவே எமது மதம்.
இவற்றை மதித்து நடப்பதே நமக்கு நல்லதும், நமது கடமையுமாகும்.
ஆ.கெ.கோகிலன்
29-04-2023.
கருத்துகள்
கருத்துரையிடுக