தமிழ் இளைஞர்களின் அரசியல்..!

 



அர்சுனாவும், மயூரனும் நன்கு படித்தவர்கள். அதிலும் மயூரன், இலங்கையில் அதிக மதிப்பெண்கள் பெற்று இன்றுவரை அவரது சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது இயற்கையின் ஒரு ஆசீர்வாதம்..!

அதேபோல் அர்சுனாவும் வைத்தியராக இருந்தாலும், பெரும்பாலான வைத்தியர்கள் செய்த தவறை வெளிக்கொண்டுவந்தது உண்மையில் அசாதாராண மனநிலையில் இருந்தால் தான் முடியும். அவருக்கு இன்னமும் நாளை எப்படி இருக்கும் என்பதை கணக்கிட முடியாமல், ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமாகக் கதைத்து, யாரை நம்புவது..?, யாரை நம்பக்கூடாது..? என்ற அடிப்படையே புரியாமல் குழப்பத்துடனேயே இருக்கின்றார். 28 வருட கால நட்பு எங்களுடையது என்று சொன்ன அர்சுனா, மயூரனிடம் எல்லா பொறுப்பையும் கொடுத்துவிட்டு, பின்னர் முதுகில் குத்திவிட்டார்..! என்றால் யாரில் குற்றம்..? 28 வருட காலம் பழகிய நண்பன் உண்மையானவனா அல்லது கெட்டவனா என்பதை அறியமுடியாத அளவுக்கு வைத்தியர் முட்டாளாக இருப்பது, உண்மையில் வேதனையானது..! அவரைச் சிலர் “படித்த முட்டாள்” என்று சொல்வது உண்மைபோல் தோன்றுகின்றது.

அதேவேளை அர்சுனா என்ன செய்தாலும் அதற்கு ஆமா போட்டுக்கொண்டிருப்பதும் உண்மையான நண்பனுக்கு அழகு அல்ல..! ஆனால் அர்சுனாவிற்குப் பிடிக்காத கட்சிகளுடன் மயூரன் சந்திப்பது, அர்சுனாவை கேலிக்கு உள்ளாக்கும் என்பதையும், அவரின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை மழுங்கடிக்கும் என்பதையும் மயூரன் புரிந்து இருக்க வேண்டும். புரிந்து இருப்பார் என்றே நம்புகின்றேன்.

 

அடுத்து, யாரையும் தோற்றத்தில் வைத்து எடைபோடக்கூடாது. “வெள்ளையாக இருக்கின்றவன் நல்லவன்..!”, ”கறுப்பாக இருக்கின்றவன் கெட்டவன்..!” என்று சொன்னால் அது மிகவும் தவறானது. அப்படி என்றால் வெள்ளையர்கள், தமிழர்களை மாநிறத்தவர் என்றோ அல்லது கறுப்பர்கள் என்றோ அல்லது தென்னாசியாவைச் சேர்ந்தவர்கள் என்றோ தான் நினைப்பார்கள்.  பொதுவாக நாம், யாரையும் குறைத்தோ கூட்டியோ மதிப்பிடத்தேவையில்லை. தோற்றம் என்பது குறித்த நபர்களால், செதுக்கி வருவதல்ல..! பிறப்பிலே வருவது..!

நீக்ரோக்கள் எல்லாம் கறுப்பு..! அதனால் கெட்டவர்களா..?

ஜரோப்பியர்கள் எல்லாம் வெள்ளை..! அதனால் அவர்கள் அனைவரும் நல்லவர்களா..?

ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். ஆபிரிக்கர்கள் ஆதிக்க வெறிகொண்டு அலையவும் இல்லை..! எந்த நாட்டையும் அடிமைப்படுத்தவும் இல்லை..! ஆனால், வெள்ளையர்கள் அப்படியல்ல..! நான் எல்லா வௌ்ளையர்களையும் சொல்லவில்லை.  ஆனால் வெள்ளையர்களிலும் கெட்டவர்கள் இருக்கின்றார்கள் என்பதைப் புரிய வேண்டும். இது ஓர் வரலாற்று உண்மை..!

அண்மைக்காலங்களில் வந்த திரைப்படங்களான ஜெய்பீம், வேட்டையன் படங்களில் சில மக்களின் முட்டாள் தனமான நடைமுறைகள் வெளிச்சமிடப்பட்டுள்ளன..!  சேரியில் வீடு இல்லாமல் ஏழையாக அழுக்காக இருப்பவன் கள்ளன்..! ஆனால், படித்து, பணத்துடன் யாரும் சந்திக்க முடியாத மாளிகையில், இருப்பவன் நல்லவன்..! இவை திரைப்படக் கருத்துக்கள் என்றாலும், அதில் பல உண்மைகள் உண்டு..!

அண்மைக்காலங்களில், அர்சுனாவின் பெயர்கெட்டு “மென்டல்..” என்று சொல்லுமளவிற்கு  அவரது ஒன்றுக்கு ஒன்று முரணான பேச்சுக்கள் போகும் நிலையில், மயூரன் போன்ற நண்பர்கள் வந்ததால் தான், மக்களின் நம்பிக்கை மீண்டும் அர்சுனா அணிக்கு கிடைத்தது..!

அதேநேரம் பல அரசியல் சூட்சிகள், முன்னைய மற்றும் புதிய அரசியல் வாதிகளாலும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன..! எதையும் எடுத்தன், கவுத்தன் என்று செயற்படாமல் நன்றாக அலசி ஆராய்ந்து, செயற்படவேண்டும்.

மாத்தையா, கருனா, பிள்ளையான், டக்லஸ் போன்றோர் ஏன் உருவாகினார்கள் என்ற வரலாற்றைத் திரும்ப நினைக்க வேண்டும்..? பிளவு படாமல் இருக்க, அனைவரும் விட்டுக்கொடுப்புடன் ஒத்துழைக்க வேண்டும். கருத்து மோதல்கள் எவ்வளவும் செய்யலாம். சிந்தனைகள் சீர்ப்பட நன்றாகச் சிந்திக்கலாம். ஆனால், எதற்காக அரசியலில் குதித்தார்கள் என்பதை திரும்பத்திரும்ப நினைக்க வேண்டும்.

அர்சுனாவிற்கே 38 வயது என்றால், கௌசல்யா 23 வயதோ  அல்லது அதைவிடக்குறைவோ தெரியாது. இவர்கள் இளையவர்கள். படிப்பு இருந்தாலும், வாழ்வியல் அனுபவங்கள் குறைவு..! அதனால் தான் முன்பு, பிரபாகரன் போராட்டம் செய்யும் போது, பல பெரியவர்கள் “சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது..!” என்பார்கள். அந்தக்கூற்று இன்றுவரை உண்மையாகவே இருக்கின்றது..!  யாராவது மறுக்க முடியுமா..? தற்போதும் அர்சுனா, பிரபாகரனின் தம்பி என்று சொல்லி வந்துவிட்டு, திரும்பவும் அதே மாதிரியான காட்சிகளைக் கொண்டுவருவது வேதனையானது..!  வெட்கித்தலைகுனிய வைக்கின்றது..!

தமிழர்களில் அரசியலில் ஈடுபடுபவர்கள் யார்..? அவர்கள் என்ன கொள்ளைகளுடன் இருக்கின்றார்கள்..?

என்னைப்பொறுத்தவரை முதலில், தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சாதி, சமயம், பிரதேசம் பார்க்காது நியாயமாக நடக்க வேண்டும். அதன் பிறகு, தமிழ் மக்களுக்கும், ஏனைய மக்களுக்கும் என்ன நல்ல விடயங்களைச் செய்து நாட்டை முன்னேற்றலாம் என்று தொழிற்படவேண்டும்.

ஆளுக்காள் சேற்றை வாரி எறிவதால் அசிங்கப்படுவது என்றும் எல்லாத் தமிழர்களே..! உண்மை பேசினாலும் பிடிக்காது..! யதார்த்தமாய் நடந்தாலும் சிக்கல்..! உயிர்கள் மேல் மரியாதை வைத்துப்பழகினாலும் தவறு..!

யாரும், யாரைப்பற்றியும் எடுத்த எடுப்பிலே, பொத்தம்பொதுவாக முடிவு செய்யக்கூடாது.

20 நாட்களில் ஒருவன் துரோகியாவதும், மற்றவன் பெரிய தியாகியாவதும் சாத்தியமில்லை..! நீதிகள், சட்டங்கள், ஒழுங்குகள் இருக்கின்றன..! செம்மையான தேர்தல் முறைகள் இருக்கின்றன. எல்லாவற்றிலும் எல்லா வகையான மக்களும் இருக்கின்றார்கள்.  காலம் சரியான பதிலை உங்களுக்குச் சொல்லும். உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை மற்றவர்களுக்கு திணிப்பதில் சிறு வெற்றிகள் வேண்டும் என்றால் ஏற்படலாம். ஆனால் அவை நீண்டகாலத்திற்கு தேவையான உறுதியான வெற்றியாக இருக்க வேண்டும் என்றால் அனைத்தும், நன்கு ஆராயப்பட வேண்டும். அது தான் நீடித்து நிலைக்கக்கூடிய வெற்றியாக இருக்கும்..!  இவ்வாறான சூழல்களால்  தான்,  நீதிமன்றங்கள் உடனே தீர்பைத் தருவதில்லை..!  விசாரனைகள் மூலம், எந்த நிரபராதியும் தண்டனைக்கு உட்படாததை உறுதிப்படுத்த வேண்டும். அதிலும் தவறுகள் நடப்பதைப்  பார்த்திருக்கின்றோம். அது யாரால் வந்தது..? சரியான தடய ஆவணங்களை அல்லது சான்றுகளைச் சேகரிக்காது விட்ட மனித தவறுகளாலே ஏற்படுகின்றது..!

இம்முறைத் தேர்தலில் யார் நல்லவர்..? யார் கெட்டவர்..? என்ற குழப்பம் சமூகவலைத்தளங்களால் மேலும் குழப்பப்பட்டுள்ளது..! ஒவ்வொரு வாக்காளரும் நாட்டிற்கும், இனத்திற்கும், அனைவரும் நல்லதைச் செய்யக்கூடிய சரியான நபர்களை, ஆட்சிபீடத்திற்கு கொண்டுவர வேண்டும். அரசியல் சாக்கடை என்று இல்லாமல், அதனை நீச்சல் தடாகமாக மாற்றி, ஆரோக்கியமான போட்டிகளூடாக மக்களுக்கு நல்லதைச் செய்யப்போட்டிபோட வேண்டும். யார் வந்தாலும், நல்லதே செய்யவேண்டும் என்ற நோக்கில் வரவேண்டும்.  எப்போதும் மக்கள் வெற்றி பெறவேண்டும்.  மக்களின் நியாயமான பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அது தான் மக்களின் உண்மையான வெற்றி..! மாறாக, தமது ஆட்களுக்கு அல்லது பணம் கொடுப்பவர்களுக்கு ஏற்ப அரசியல் செய்யவேண்டும் என்று நினைத்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் உங்களைப்பற்றி மக்கள் பின்னர் பாடம் நடத்துவார்கள்..!

சிந்தித்து செயற்படுங்கள்.

சிரிப்பு அழகாக இருக்கின்றது என்பதற்காக ஏமாந்துவிட வேண்டாம்.

குப்பைகளிலும் குண்டுமணிகள் இருக்கின்றன..!

 

 

ஆ.கெ.கோகிலன்

01-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!