மயில் எண்ணெய்..!
எனது வயது முதிர்ந்த தாயார், எலும்புகள் தொடர்பான நோயால் பெரும் அவதிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்..!
காலைத் தரையில் வைத்தாலே நோகின்றது என்பார்..! பல வகை மென்மையான செருப்புகள் வாங்கி
அவருக்கு கொடுத்தாலும், அவரது வருத்தம் இன்னும் குணமாகவில்லை. வீடு எங்கும் வித்தியாசமான
பாத அணிகளே கண்ணில் தெரிகின்றன..! பல வழிகளில் முயன்றாலும், இதற்கு இன்னும் வழி கிடைக்கவில்லை.
நான் அம்மாவிடம் வேடிக்கையாக இதற்கான மருந்து இறைவனின் கைகளிலே இருக்கின்றது என சொல்லிவிடுவேன்.
அவரும் அதனை “நீ சொல்வது சரி என்பது போல” எடுத்துக்கொள்வார்.
வயதுமூப்புக்காரணமாக எலும்புகள், அதோடு கூடவுள்ள தசைநார்கள் அனைத்தும்
அவர்களுக்கு பேரும் துன்பத்தைக் கொடுக்கின்றன..! அம்மாவும் பலரிடம் இதற்கான ஆலோசனைகள்
கேட்டிருப்பார். அதில், எனது தாயாரின் தமையனார் கனடாவில் இருந்துகொண்டு, வவுனியாவில் மயில் எண்ணெய்
கிடைக்கும் என்றும், அதனைப் பூசினால் அவரது
எலுப்புப்பிரச்சனைகள் முற்றாகத்தீரும் என்றும்
சொல்ல, பல முறை அம்மா என்னிடம் திருகோணமலையில்
இருந்து யாழ் வரும்போது, வவுனியாவில் மயில் எண்ணெய் வாங்கிவரும்படி சொல்வார்..! நான்
வவுனியாவில் நிற்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
நிச்சயம் வேண்டும் என்றால், நின்று வாங்கிச் சென்றிருக்கலாம்.
ஆனால் திருகோணமலையிலும், குறிப்பாக நான் இருக்கும் பகுதிகளிலும் அதிக
மயில்கள் இருக்கின்றன..! அதனால் திருமலையில் மயில் எண்ணெய்
தேட முயற்சித்தேன். அப்போது, சிங்கள ஆயுள்வேத
மருத்துவ முறைகள் பற்றித் தெரிந்த ஒருவர், “நல்ல சுத்தமான இலுப்பெண்ணெய் போட்டு, அந்த எலும்புப்பகுதிகளில் தடவினால் வலி
குறையும் என்றும், மயில் எண்ணெய் என்பது சும்மா மயிலைக்கொன்று, அதன் கொழுப்பை எடுத்து
சூடாக்குவதன் ஊடாகக் கிடைப்பது என்றும், உண்மையான
தரமான மயில் எண்ணெய் என்பது இலகுவில் கிடையாது என்றும், மயிலைக்கொன்று, அதன் கால்களை
துடைப்பகுதிவரை வெட்டியெடுத்து, அதனைக் கடும் சூரிய ஒளிபடும் இடத்தில் கால் பகுதியைக்
கட்டித் தொங்கவிட்டு, அந்த தொங்கவிட்ட தொடைக்கால்
பகுதியில் இருந்து கிடைக்கும் சில எண்ணெய் துளிகளே உண்மையான சுத்தமான மயில் எண்ணெய்
என்பதுடன், அதனை அவ்வளவு சுலபமாக எடுக்க முடியாது என்றும், கலப்பட எண்ணெய்களே கிடைக்கும்
என்றும், அதனால் எந்தப்பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை என்பதுடன், வேண்டும் என்றால்,
மனதிற்கு மயில் எண்ணெய் பூசிய ஆறுதல் மட்டும் கிடைக்கும்” என்றார்..!
“மயில் எண்ணெய் மிகச்சிறிய அளவிலே கிடைக்கும் என்றாலும், அது உண்மையில்
எலும்பு மூட்டுகளில், இறுக்கமான அசைக்கமுடியாத நிலையேற்படும் போது அதனைப் பூசினால்,
அந்த பகுதியில் சற்று இளக்கம் ஏற்பட்டு, இறுக்கம்
குறைந்து, அந்தப்பகுதியில் இருந்த வலிக்கு நிவாரணம் கிடைக்கும்” என்றார்..!
இயற்கை, சிலருக்கு இலகுவான வழிகளில் உடல் உபாதைகளுக்கான தீர்வுகளைக்
காட்டியுள்ளது..! நாமும் அதனை நம்பினால், செய்து பார்க்கலாம். சாதாரணமாக எமது வீடுகளிலுள்ள நாய், பூனைகளே இவ்வாறான
இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி, ஆரோக்கியமாக உலாவும்போது அறிவு படைத்த மனிதனுக்கு இயற்கையில் நம்பிக்கை வராமல்,
ஆங்கில மருத்துவம் படித்த வைத்தியரே பார்க்க வேண்டும் என்பது, எமது சூழலுக்குப் பொருத்தமானதா
என்பதைச் சரியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்..! சரியான ஆய்வுகள் வருமாயின் எமது சூழலுக்கு
ஏற்ற மருத்துவங்களும் வரும்.
காலம் கனிகின்றது என நம்புகின்றேன். இயற்கையின் அருள் இருந்தால், நன்மைகள்
மக்களுக்கு இயல்பாய் கிடைக்கும்.
ஆ.கெ.கோகிலன்
26-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக