மச்சாள் வழிப்பேரன்..!

 

 


திருகோணமலையில் எனக்கு நிறைய உறவினர்கள் இருக்கின்றார். முன்பு எனது குடும்பத்தினரும் இங்கே இருக்கும்போது எல்லா வீடுகளுக்கும் போய்வருவது வழக்கமாக இருந்தது. யாழ்ப்பாணம் போனபிறகு அந்த தொடர்புகள் குறைந்து விட்டன..! அவரவர்கள் அவர்களது வேலைகளில் மூழ்கிவிட்டார்கள். நானும் தான்..!

அண்மையில் மச்சாளின் மகனுக்கு ஒரு மகன் பிறந்ததாகக் கேள்விப்பட்டும் என்னால் குறித்த தருணத்தில் போக முடியவில்லை. வேலைநாட்களின் போது,  மாலையில் அடுத்தநாளுக்கான தயார்படுத்தலில் ஈடுபடுவதால் எனக்கு நேரம் கிடைப்பதில்லை. வார இறுதிகளிலும் யாழ்ப்பாணம் போவதால், அந்த நாட்களிலும் இவ்வாறான விடயங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. இவ்வாறாக்காலங்கள் இழுபட்டுக்கொண்டு போக கடந்த சில வாரங்களாக, வார இறுதியில் இங்கே நிற்கவேண்டிய சூழல் வந்தது. ஆனால் அங்கே போவதற்கு திட்டம் போட்டாலும் ஏதாவது தடங்கல் வந்துவிடும்.

இறுதியாக எனது ஒன்றைவிட்ட தங்கையுடன் போகத் தீர்மானித்தேன். நான்கு அல்லது ஜந்து முறை முயன்றும், அந்த நாட்களில் நாம் போகத் தீர்மானித்த நேரத்தில் மழைவரும்..!  சரி இவ்வாறாகத் தள்ளிப்போய், மழை வந்தாலும் போக முடியும் என்றால் போகலாம் என்ற முடிவோடு நேற்று இருந்தேன்.

வழமைபோல் பல அலுவலக வேலைகள் இருந்தன. அவற்றைச் செய்து முடித்து மாலை தகவல் தொழில்நுட்ப பழைய மாணவர்களின் செயற்குழுவினரை சந்திப்பதாகவும், சில முக்கிய முடிவுகளை  எடுத்து, அதனை அவர்களூடாக பரப்புவதற்காகவும், முதலே தீர்மானித்து இருந்தோம். அதனை செய்துமுடிக்க மணி  மாலை 6.00ஐ தாண்டிவிட்டது. நேற்றும் மழை வந்தது. ஆனால் இரவு இருக்கவில்லை. எமக்கு வசதியாகப் போய்விட்டது. அனுராதபுரச் சந்தியில் ஒரு நல்ல பரிசுப்பொருளையும் வாங்கிக்கொண்டு, மருமகன் வீட்டிற்குச் சென்றேன். அப்போது தான் அவரும் வேலையால் வந்திருந்தார். தேர்தல் பணிகள் அவருக்கு வழங்கப்பட்டதால், நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யவேண்டியிருக்கும்.

உள்ளே போக, மருமகள் குழந்தையுடன் வந்தார். குழந்தை என்னுடன் ஒட்டிக்கொண்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குழந்தையைக் கையில் வைத்திருந்தேன். அதன் சருமம் பட கையே சிலிர்த்தது..! எனது மருமகனின் தந்தையார் ஒரு பறங்கியர் என்பதால் குழந்தையும்  ஐரோப்பியர் போலவே இருந்தது. மருமகன், அவரது தந்தை, மருமகள் அனைவரது முகச்சாடைகளும் குழந்தைக்கு இருந்தன. ஒரு பெரிய சந்தோசம் கிடைத்தது..! அவருடன் சில மணிகள் செலவழித்து, கதைத்து விளையாடியது எனக்கு சிறுநேரம் இறைவனுடன் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. அந்தக் குழந்தை என்னைப் பார்த்து  சிரித்து, விளையாடிப் பாட்டுப்பாடிக்கொண்டிருந்தது.

பொதுவாக எமது குழந்தைகள் சற்றுக் கறுப்பான ஆட்களைப் பார்த்தால் பயப்படும். இந்தக்குழந்தை, உண்மையில் வெள்ளைக்காரக் குழந்தை தான்..!  வெள்ளைக்காரர்களுக்கு கறுப்பர்கள் மேல் ஓர் அலாதி ஈர்ப்பு இருப்பது நான் கண்ட அனுபவம். அது இங்கே மீண்டும் நிரூபணமாகியது..! தன்னிடம் இல்லாததை இருப்பவரிடம் எதிர்பார்ப்பது வழமைதானே..! அது தான் இங்கும் நடந்திருக்கலாம்..! தங்கை நல்ல வெள்ளை..! அவளுடன் சேருவதைவிட என்னுடன் நன்றாகச் சேர்ந்தான்..! எனக்குத் தாத்தா வயது வந்ததால், கருணைகொண்டானோ தெரியாது..!

பின்னர், அவர்களிடம் இருந்து விடைபெற்று, அம்மாச்சியில்  எனக்கு உணவை எடுத்துக்கொண்டு, தங்கையின் உணவையும் கொஞ்சம் அதனுடன் சேர்த்துக்கொண்டு,  தங்குமிடத்திற்கு வந்து, அதனையும் உண்டு, சில வேலைகளையும் செய்துவிட்டு உறங்கினேன்.

குழந்தையின் பெயர் “சாய்தேவ்..!” எனக்கு இந்தப் பெயரிலுள்ள இரண்டு சிறு பெயர்களும் (சாய், தேவ்), ஏற்கனவே பிடிக்கும்.  அதனால் குழந்தையை இன்னும் பிடித்துபோய்விட்டது. ஒருவிதத்தில்  பேரக்குழந்தை தானே..!  நமக்குத் தற்போது வராவிட்டாலும்,  இருப்பதைப் பார்த்து மகிழ்வோம்.

 

ஆ.கெ.கோகிலன்

27-10-2024.

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!