ஓர் அறிமுகம்..!

 

 


நேற்று அதிகாலையே  மழை பெய்யத்தொடங்கிவிட்டது. அதன் காரணமாக என்னால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. அத்துடன் கடந்த சில வாரங்களாக வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனை நேற்று கொஞ்சம் அதிக சோர்வைக்கொடுத்ததாக உணர்ந்தேன். இரு நாட்களுக்கு முதலே வெளிக்கிட்டு, யாழ்போக நினைத்தேன். இம்முறை தனியாக இரண்டு பாடங்களை எடுத்துவிட்டேன்..! அந்தப்பிள்ளைகளுக்காக நின்று சில பகுதிகளை எடுத்துவிட்டுப் போக நினைக்கவே,  வயிறு சற்று ஒத்துழைக்க மறுத்தது. இருந்தாலும் ஒருவாறு சமாளித்து நினைத்ததை முடித்துவிட்டு, எனது பதிவாளரிடம் பதில் பொறுப்பையும் கொடுத்துவிட்டு வெளிக்கிடத் தயாராக இருந்தேன். அப்போது ஒரு ஊழியர் “இன்று 1 மணியில் இருந்து கடும் மழையாக  இருக்கும் என்பதை செய்திகள் சொல்கின்றன..!” என்றார். நான் குறுகிய லீவுடன் செல்ல நினைக்க, இந்தச்செய்தி சற்று விரைவுபடுத்தியது. அந்த வகையில் உடனே போய் சாப்பிட போவதற்குத் தயார்படுத்த, மேலும் சில உணவுகள் வந்தன..! அதுமாத்திரமன்றி, சில வேலைகளும் வந்தன..! பின்னர் குறித்த நேரத்தில் போகமுடியாது என்பது புரிய, வழமைபோல் பொறுமையாக இருந்து, 2.45மணி பஸ்ஸை எடுத்தேன். நல்ல கூட்டம். வவுனியா வரை நின்று வந்ததாலும், வயிற்றில் ஒரு மாதிரியான சூழல் இருந்ததாலும் அமைதியாகவே பின்னர் இருந்து வந்தேன். சிறிது நேரத்தில் அருகில் ஒருவர் வந்தார்..! அவரை முன்பு பார்த்திருக்க வேண்டும். பஸ்ஸினுள்ளும் வேறு ஒரு இடத்தில் இருந்தவர்  என்று எண்ணியபடி, வரும் தனியார் மற்றும் அரச பஸ்களின் போட்டி பற்றிக் கதைக்கத்தொடங்க, நானும் கதைக்க சம்பாசனை நீடிக்கத்தொடங்கியது. யாழில் இறங்கும்வரை இருவரும் மாறி மாறி தமது ஜெயதலப்பிரதாபங்களைப் பீற்றிக்கொண்டிருந்தோம்.  அவரும் என்னை போல் ஒரு மாகாணப் பணிப்பாளராகவும், கணித வல்லுணராகவும் இருக்கின்றார்..! அவரது மனைவியாரும் ஒரு பிரதேச செயலாளராக இருக்கின்றார்..! தற்போது அவரது தயாரின் வீடு, எனது அம்மாவிட்டிற்கு பின்னால் தான் இருக்கின்றது. அவர், பல நாடுகள் போயுள்ளார். பல அனுபவங்கள் பெற்றவர். ஏறக்குறைய எனது வயதை ஒத்தவர். என்னைப்போல் பல வீடுகள் கட்டியுள்ளார்..! தற்போதும் கட்டுகின்றார்..! வாஸ்து சாத்திரம், படவரைஞர் படிப்பு போன்றவற்றைக் கற்றுள்ளார்.  அவரது கனவு இல்லம் தொடர்பான பல ஆச்சரியமான விடயங்களைக் கூறினார். நான் எனது வீடு கட்டும்போது, எப்படி என்னுடையவீடு இயற்கையின் ஆசிப்படி அமைந்ததோ அதற்கு நேர்மாறாக தான் நினைத்த மாதிரி வரவேண்டும் என்பதற்காகக் கோடிக்கணக்கான பணத்தை விரயப்படுத்தி, கட்டிய பகுதிகளை உடைத்துத் திரும்பக்கட்டி வருகின்றார்..! எல்லாவற்றிற்கும் காரணம், அந்த வாஸ்து புருசனில் இருக்கும் பயம் தான்..!  அவர், தான் எப்போது அந்த வீட்டு வளவிற்குச் சென்றாலும் காயத்துடன் திருப்பிய அனுபவத்தை, அவரது வீட்டு வாஸ்தின் பலத்தைப் பற்றிக்கூற நானும் ஆமோதித்தேன். ஏறக்குறைய நானும் அதே மாதிரி இல்லாவிட்டாலும், நான் நினைத்ததைவிட இயற்கை நினைத்த மாதிரியே அல்லது வாஸ்து நினைத்த மாதிரியே எனது வீடு அமைந்துள்ளது. பல வெற்றிகளைத் தந்துள்ளது..! என்னையும் பல நிலைகளில் உயர்த்தியுள்ளது. எனது பெயரை இன்றுவரை கெடாது பாதுகாக்கின்றது..! அனைத்திற்கும் இந்த வாஸ்துவிற்கும், இயற்கைக்கும்  ஏதோவோர் தொடர்பு இருப்பதை நான் அறிந்து, பல வருடங்கள் ஆகிவிட்டது..!  அவருக்கும் எனது அனுபவத்தைச் சொன்னேன். அவரும் தனது அனுபவத்தைச் சொன்னார். இரண்டு பேரும் எதிர் எதிரான திசைகளில் பயணித்துவருகின்றோம். எனது மாணவன், உறவுக்கார இளைஞர் ஒருவர், திருகோணமலை போகும்போது இவரை அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது அந்த விடயம் எனக்கு நினைவிற்கு வந்தது. ஆனால் அப்போது இவருடன் நான் பெரிதாகக் கதைக்கவில்லை. தற்போது நண்பர்கள் போல் பல விடயங்களைப் பகிர்ந்துள்ளோம். எமது தொலைபேசி இலக்கங்களையும் பகிர்ந்துள்ளோம். இனி வரும் காலங்களில், மாணவர்கள் தொடர்பான நல்ல பயனுள்ள சேவைகளை, இருவரும் இணைந்து செய்ய முடிவெடுத்தோம்.

இந்தப்பயணம்  மிகப்பெறுமதியானதாக மாறிவிட்டது..! அதேவேளை வயிற்று நோயின் தாக்கமும் வீடு வரும்வரை தெரியவே இல்லை..!

 

ஆ.கெ.கோகிலன்

09-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!