இலங்கை பாராளுமன்ற தேர்தல்-2024
ஆங்கிலேயர்களிடம் இருந்து சுகந்திரம் பெற்றாலும், நாடு விடுதலையடையாமல்
ஒவ்வொரு ஆளும் அரசியல் கட்சிகளின் கீழ் மாட்டிக்கொண்டது காலத்தின் கொடுமை..!
இது சிங்களவர்களுக்கு மட்டும் அல்ல..! ஏனைய இன, மத, மொழி,
சாதி சமூகங்களின் நிலையும் இதேதான்.
“வெள்ளையாக இருப்பவன் நல்லவன்” என்ற மோட்டு அடிப்படைக்கொள்கையில்
மக்கள் அடிமைப்படுத்தப்பட்டார்கள்..! எல்லா இனங்களிலும் இவ்வாறான தன்மைகள் இருந்துள்ளன.
ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டது, இந்து சமயத்தின் அடிப்படையில் வந்த மதங்களினைப் பின்பற்றுபவர்கள்
இடையே தான்..!
சமூதாயக்கட்டமைப்பில் கீழேயுள்ளவன் எப்போதும் கீழே இருக்கும்
விதமாகவும், மேலேயுள்ளவன் எப்போதும் மேலே இருக்கக்கூடியவாறும், வெளிப்படையாகக் காட்டாமல்,
தந்திரமாக இந்த நகர்வுகளை நடாத்திச் சென்றவர்களே எமது பெரும்பாண்மையான அரசியல் வாதிகள்..!
அவர்களில் சில நல்லவர்கள் இருந்தாலும், அவர்களின் குரல்கள்
நெரிக்கப்பட்டே இருந்தன..!
இதில், தமிழ் அரசியல் வாதிகளும் விதிவிலக்கு அல்ல.
இவ்வாறான இலங்கையின் அரசியல் பயணத்தின்போது ஏற்பட்ட யுத்தவெற்றி,
சில அரசியல்வாதிகளை கடவுளாக்கியது..! அதேபோல் கொரோனாவும், பொருளாதார வீழ்ச்சியும் அதே
அரசியல்வாதிகளைக் கள்ளராக்கியது..!
சாதாரண மக்கள் எல்லாவற்றையும் பார்க்கின்றார்கள். முன்பு
மாதிரி மறைக்கக்கூடிய சூழல்கள் அற்று வருகின்றன..! சுத்துமாத்து செய்பவன் மாட்டக்கூடிய
வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன..! எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், தற்போதுள்ள
தொழில்நுட்பங்களில் மாட்டுப்படவேண்டிய சூழல் நிறையவே இருக்கின்றன..!
தானுண்டு, தன்வேலையுண்டு என்று இருப்பவன் இங்கு பிரச்சனையில்லை.
எல்லாரையும் பார்ப்பவன், தன்னுடைய வேலையைத் தவிர அனைத்தையும் செய்து, அதில் பணத்தை
அள்ளுவதையே குறிக்கோளாகக்கொண்டு, அனைவருக்கும் பிரச்சனையாக இருப்பான்..!
இதுவரைகாலமும், எமது நாட்டின் அரசியல் கலாசாராமே நீயும் கொள்ளையடி..!
நானும் அடிக்கின்றேன்…! ஆனால் யாரும் யாரையும் மாட்டக்கூடாது..! இது தான் எழுதா மறை
ஒப்பந்தம்..!
நாடு இவ்வளவு குட்டிச்சுவராவதற்கு காரணம் அரசியல் வாதிகள்
மாத்திரமல்ல, அவர்களைப் பதவிகளுக்கு கொண்டுவந்த மக்களும் தான்..!
ஒவ்வொரு குடிமகனும் நியாயமாக வாழ நினைத்தால், இவ்வளவு ஊழல்
நிறைந்த நபர்கள் நாட்டில் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை.
சிலர், தமது நலன்களுக்காகப் பிழையான நபர்களை ஆட்சிக்கு கொண்டுவந்து,
இறுதியில் நாட்டையே நாசமாக்கிவிட்டார்கள்..!
பின்னர் மக்கள் அனைவரும் விழித்துக்கொண்ட போது, தலைக்குமேல்
வெள்ளம் போனாலும், “தப்பலாம்..!” என்ற ஒரு சிறு நம்பிக்கையை அண்மையில் நடந்த ஜனாதிபதித்
தேர்தல் முடிவு தந்தது..!
அதனைத்தொடர்ந்து நடந்த அதிரடி மாற்றங்கள், புதிய ஜனாதிபதி
தலைமையிலான கட்சிமேல் மக்களிற்கு பூரண நம்பிக்கை வந்தது..! இது தனியே சிங்களப்பகுதிகளில்
மாத்திரமன்றி, தமிழ் பகுதிகளிலும் பற்றிக்கொண்டது..!
கிட்டத்தட்ட நேற்றுவெளியான பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்,
மட்டக்களப்பைத் தவிர, அனைத்து இலங்கையின் பகுதிகளையும் திசைகாட்டியே கைபற்றிக்கொண்டது..!
மக்களின் பெரும்பாண்மையைப் பெற்றதால், நாட்டில் நியாயமான ஆட்சியை இந்தக்கட்சியால் வழங்க முடியும். தற்போது இருக்கும் சரியான சட்டங்கள் ஒழுங்காக நடைமுறைப்படுத்த
வேண்டும். தேவை என்றால் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். நீதி நியாயங்கள் பாதுகாக்கப்பட அரசு அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த நாட்டில் நல்ல திறமையான யாரும் இனிவரும் காலத்தில்
ஜனாதிபதியாக வரக்கூடிய சூழல் உருவாக வேண்டும்.
அனைவரும் ஒன்றுசேர்ந்து நாட்டிற்காக உழைக்கும் நிலை தோன்ற வேண்டும். பிரித்து
ஆளும், குரங்குத் தந்திரங்கள் நிறுத்தப்பட வேண்டும். ஏமாற்றிப் பொய்சொல்லிப் பிழைப்பு
நடத்தக்கூடாது.
சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்படவேண்டும்.
அடுத்த ஜந்து வருடங்களில், நாட்டில் முன்னேற்ற அறிகுறிகள் தெரிய வேண்டும். நடக்கும்
ஆட்சி “நல்ல ஆட்சி” என்றால் நீடிக்கவும், இல்லை என்றால் ஆட்சியை மாற்றக்கூடியதாகவும்
மக்களிடம் பலம் இருக்க வேண்டும். ஜனநாயகக்கோட்பாட்டிலோ அல்லது சமத்துவக்கோட்பாட்டிலோ
நாடு இருக்க வேண்டும். காலப்போக்கில் நாட்டின்
விருத்திக்குப் பொருத்தமான கோட்பாட்டை அனைவரும் பின்பற்றி, நாட்டை ஆசியாவின் “ஜொலிக்கும்
முத்தாக” வைத்திருக்க வேண்டும்.
யுத்தத்தாலும், பொருளாதார முன்னேற்றங்களுக்காகவும் வெளிநாடு
சென்ற எமது மக்கள், திரும்பத் தாயகம் வரவேண்டும். தொழில்துறைகள் இங்கு முன்னேற வேண்டும்.
80களில் 90களில் வெளிநாடுகளுக்குச் சென்ற எமது முதல்தலைமுறையினர்
வளர்ச்சியடைந்த நாடுகளில் எந்த வேலையையும் செய்து பிழைக்க முனைந்தார்கள். தற்போது
2ம் மற்றும் 3ம் தலைமுறை மக்கள் அந்த நாட்டு பூர்வக் குடிமக்களுக்குப் போட்டியாக வரும்
நிலையில், இனிவரும் காலங்களில் பல பிரச்சனைகள்
அங்கே வரலாம். அமெரிக்காவின் புதிய ஆட்சி மாற்றம், கனடா மற்றும் பிரித்தானியா அரசுகள்,
புலம்பெயர்ந்த மக்களின் ஆசைகளுக்கு ஆப்படிக்கும்
சூழல்கள் வரத்தொடங்கிவிட்டன..! சொந்தத் தாயைவிட
எந்தவொரு மாற்றான் தாயும், பிள்ளைக்கு உயிராக இருக்க மாட்டாள்..! அதேபோல் தான்,
சொந்த நாட்டிற்கு ஈடு இணை, இந்த உலகில் எந்த
நாட்டிலும் இல்லை.
இந்தச் சூழல்களை உணர்ந்த நம்மவர்கள், இந்தப்பாராளுமன்றத்
தேர்தலில் பெரும்பாங்கை ஆற்றியுள்ளார்கள்..! பலர், நேரடியாக வாக்குப்போடாவிட்டாலும்,
மக்களுக்கு பல வகையான விழிப்புணர்வுகளைக்கொடுத்து, சரியான நபர்களை ஆட்சிப்பொறுப்பிற்கு
அனுப்ப உதவியுள்ளார்கள்..!
அந்த வகையில் வடக்குத் தமிழர் பகுதியில், பாரிய மாற்றங்கள்
நடந்துள்ளன..! வழமையான அரசியல் வாதிகள், பலர் தோற்றுள்ளார்கள்..! ஜே.வி.பியின் திசைகாட்டியில்
3 புதியவர்கள் பாராளுமன்றம் போகின்றார்கள். அதேபோல் ஊசிச்சின்னத்தில் சுயேட்சைக்குழுவில்
நின்று வெற்றிபெற்ற வைத்தியர் அர்சுணாவைப் பாராட்ட வேண்டும். மருத்துவ ஊழல்களை ஊருக்குக்காட்டி நியாயம் கேட்டவரிடம், அனைத்தையும்
பறித்து, அநாதரவாக்கும்போது மக்களின் கருணை, அவரை எம்பியாக்கியுள்ளது..! அவரது சொல்லுக்குக் கீழ்படிந்து மக்கள் போட்ட வாக்குகளால்,
கௌசல்யாவும் நல்ல முடிவை பெற்றுள்ளார்.
எனது வீட்டில் நாம் அனைவரும் அர்சுணா அணிக்கே குறிப்பாக அர்சுணா, மயூரன் மற்றும் யோகபாலனுக்கே
வாக்களித்தோம்.
வைத்தியர், பொறியியலாளர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டோம்.
அதேபோல் இன்னும் பலர் வரக்கூடிய வாய்ப்பு இருந்தும், அர்சுணாவின் கட்சிக்குள் நடந்த
முரண்பாடுகளும், காட்டிக்கொடுப்புக்களும், பக்கச்சார்புகளும் ஊசியணிக்கு ஒரு சீற்றுடன்
முன்னேற முடியாமல் செய்துவிட்டது..! 28 வருடங்கள்
பழகிய அறிவான உண்மையான நண்பனே துரோகியாக்கப்பட்டார்..! வாய்மை தவறக்கூடாது. சரி, சிறுபிள்ளை
வேளாண்மை, இந்த அளவிற்கு வந்ததற்கே, இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும்.
வழமைபோல், பல சமூகங்கள் யாழில் வழமையான தலைமைகளை நம்பவே இல்லை.
வெளிநாட்டு மக்களும், கொரோனாவிற்கு பின்னர் தமது உண்மையான
நிலையை உணர்ந்துள்ளார்கள்..! பலருக்குத் தமது
தாய் நாடு பற்றிய எண்ணம் திரும்ப வந்துள்ளது..!
அதன் வெளிப்பாடு, பல அழுத்தங்களை, எமது இளைஞர் தலைமைகளுக்கு கொடுத்துள்ளார்கள்.
அந்த அக்கறைக்கு, நாம் அவர்களைப் பாராட்டியே ஆகவேண்டும். அவர்களுக்கும் எமது நாட்டில்
பூரண உரிமையுண்டு.
இந்தத் தேர்தல் முடிவுகள் எமது மக்களுக்கு, ஒரு உறுதியான
நம்பிக்கையைத் தந்துள்ளது. நாடு வளர்ச்சிப்பாதையில் செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
அனுரா தலைமையில் ஏற்பட்ட அரசியல் சுனாமி, நாட்டிற்கு பெரும் பலன்களைத்தந்து, மக்களின்
வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்த வேண்டும். அதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். இயற்கையும்
இதற்கு ஆதரவாக இருந்தால் தான் இது சாத்தியப்படும்.
பணக்கார அரசியல் வாதிகளின் ஆட்சி ஆதிகாரத்திற்கு வந்திருந்தால்,
இப்படியான ஒரு மாற்றத்தை நாம் கனவில் கூட கண்டிருக்க முடியாது. அதற்கு உதவிய இயற்கைக்கு
மேலும் எனது நன்றிகள்.
2024 ஆண்டுக்கடைசியில் தான் இவ்வாறு நாட்டுச்சூழல் உருவாக,
காலம் வழிவிட்டதற்கு இறைவனுக்கும் எனது நன்றிகள்.
ஆ.கெ.கோகிலன்
15-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக