மனக்குழப்பங்கள்..!

 



கடந்த சில வாரங்களாக இருவழிப்பயணங்களிலும் யாருக்கும் சீற் கொடுத்து உதவ முடியவில்லை. ஏறக்குறைய 4.00 மணிகளுக்கு மேலாகத் தொடர்ந்து இருப்பதால், பல வலிகள் உடலில் ஏற்படும். தவிர்க்க முடியாமல் அசைந்து அசைந்து ஒருவாறு குறித்த பயணங்களை நிறைவு செய்தேன்.

இன்று, வீட்டில் இருந்து புறப்படும் போது, போனை விட்டுவந்தது இடையில் தான் தெரிந்தது..! பரவாயில்லை என்று வந்து விட்டேன். இன்னொரு போன் இருப்பதால் பழைய போன் இல்லாவிட்டாலும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

பல சமயங்களில், ஒரு இளம் பெண் தோற்றத்தில் சற்றுப் பருமனானவர் என்னுடைய பஸ்ஸில் வரும் சந்தர்ப்பங்களைப் பார்த்துள்ளேன். இன்றும் அவ்வாறே அமைந்தது. முன்பு பார்த்தாலும், நான் அவருடன் கதைக்க வாய்ப்பு வரவில்லை. அவரைப் பார்க்கவும் சற்று பழகுவது குறைவு என்பதுபோல் தெரிய, கதைக்கவேண்டிய தேவை வரவில்லை. ஆனால் இன்று அவருடன் கதைக்க முடிந்தது. அவர் திருகோணமலை டி.எஸ் அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராகக்கடமை ஆற்றுகின்றார். அத்துடன் முகாமைத்துவப் பட்டம், முகாமைத்துவ பட்டப்பின் பட்டம் மற்றும் பொதுநிர்வாகம் என்ற துறையிலும் இன்னொரு பட்டப்பின் பட்டம் படித்துள்ளார்..! அவரும் உவர்மலையில் தான் இருக்கின்றார். தயார் யாழில் வேலைசெய்கின்றார்.

தாய்காக, அடிக்கடி யாழ்ப்பாணம் போய்வருவார். இவருக்கு உவர்மலையில் வீடு இருக்கின்றது. எனக்குத் தெரிந்த பலர், இவரது உறவினர்கள்..!

இந்த பெண், கொஞ்ச நேரம் போனில் யாருடனோ உரத்துக்கதைத்துக்கொண்டிருந்து விட்டு, கிளிநொச்சி பஸ் நிலையத்தில் இறங்கி, திரும்பவும் யாழ் சென்றார்..!

அவரது முடிவு திடீரென மாற என்ன மனக்குழப்பங்கள் காரணமோ..? அவருக்குத் தான் தெரியும்..! நான் சங்கடத்துடன், அவருக்கு விடை கொடுத்தேன். திரும்ப சந்திக்கும் சமயம், தேவைப்பட்டால் அந்தக்காரணத்தைச் சொல்வார்.

 

அதேநேரம், எனக்குப் பக்கத்தில் ஒரு சகோதர மொழிபேசுபவர் வந்து நின்று, தனது ஹெல்மெட்டைக் கொழுவி விடச்சொன்னார் செய்தேன். மகிழ்ச்சியடைந்தார். தான் கெப்பிட்டிக்கொலவாவில் இறங்குவதாகச் சொன்னார். அவருக்கு நான் சீற் கொடுக்க, முதலில் அவர் மறுத்துப்பின்னர் ஏற்றுக்கொண்டார். வவுனியாவில் பலர் இறங்க, பலருக்கும் சீற் கிடைத்தது. எனக்கும் திரும்ப சீற் கிடைத்தது..!

வவுனியாவில், எனது பஸ்ஸில் வந்த சில சின்னப்பெண்களுக்கும், அவர்களது பைகளை எடுப்பதற்கு உதவிகள் செய்தேன். அப்பெண்கள் இறங்கிச் செல்லும் போது,  மேலும் ஒரு தாயும், மகளும் ஏறி எனக்குப் பக்கத்தில் வந்து நிற்பது தெரிந்தது. மகளுக்கு கெப்பிட்டிக்கொலவாவில் சீற் கிடைத்தது. தாய்க்கு, இடையில் நான் எழுந்து, எனது சீற்றைக்கொடுத்தேன். சில நிமிடங்களில், எனக்கு இன்னொரு சீட் கிடைத்தது..! ஆகமொத்தம் பலருக்கு உதவுவதால், களைப்பில்லாமல் சற்று மெல்லிய பழைய வயதில் இருப்பதைப்போன்ற உணர்வுகளுடன் தங்குமிடம் வந்து சேர்ந்தேன்..!

பயணங்கள் சந்தோசமாக மாற பல வேலைகளைச் செய்ய வேண்டும். இல்லை  என்றால் விரைவில் பயணங்களே வெறுத்துவிடும். வாழ்வே ஒரு பயணம் தான்..! பலர் இருக்கும்போது அவர்களுடன் நாம் இணைந்தோம். காலங்கள் போக, பலர் காணாமல் போக பயணத்தைத் தொடர்ந்தோம். மீண்டும் பலர் எம்முடன் இணைந்துள்ளார்கள். அவர்களோடு பயணிக்கின்றோம். எமக்கான இடம் வர இறங்க வேண்டியது தான்.  அதேபோல் எம்மோடு இணைந்தவர்கள் அவர்களது இடங்கள் வரும்வரை பயணத்தைத் தொடர வேண்டியது தான்.

வாழ்க்கையும் பயணமே..!

வாழ்விலும் பயணமே..!

ரசிக்க வேண்டியது தான்.

 

ஆ.கெ.கோகிலன்

03-11-2024.

 

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!