வஸ்கொடகாமா..!
நீண்ட நாட்களுக்குப் பிறகு போய்ஸ் படத்தில் நடித்த நகுலின்
படத்தைப் பார்க்கக்கிடைத்தது. உண்மையில் வித்தியாசமான படம் என்றால் இந்தப்படத்தைத்
தான் சொல்ல வேண்டும்..! இதுவரை நான் பார்த்த படங்களில் தலைகீழான படம் என்றால் இதைத்தான்
சொல்ல வேண்டும். எதிராகச் சிந்திப்பவர்களுக்கு, நிறையத் தெரிந்து வைக்கக்கூடிய விடயங்கள்
படத்தில் இருக்கின்றன.
இந்தப்படத்தின் ஆரம்பத்திலே, யுகங்கள் பற்றியும், ஒவ்வொரு யுகத்தில் இருக்கும்
நன்மை, தீமைக்குரிய மதிப்பைப் பற்றியும் சொல்லி, இறுதியில் கலியுகத்தில் தீமை செய்பவர்களே
வாழமுடியும் என்றும்
நன்மை செய்பவர்களை “வஸ்கொடகாமா” என்ற ஜெயிலில் போட்டு, அவர்களை
கெட்டவர்கள் ஆக்கும் பணி நடக்கும்..! இதற்காகப் பல வகையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக ஒரு கொலையை எப்படிச் சரியாகச் செய்ய வேண்டும் என்றோ, பாலியல் குற்றங்களை
எப்படிச்சிறப்பாக முடிக்க வேண்டும் என்றோ கஞ்சா, அபீன் போன்ற போதைப்பொருட்களை எப்படி
எல்லாருக்கும் மூன்று வேளையும் தவறாது வழங்குவது பற்றியோ அல்லது மதுபானங்களை செய்து,
அதனை மக்களுக்கு வித்து, அரச கஜானாவை எப்படி நிரப்ப வேண்டும் என்றோவெனப் பல விதமான
பயிற்சிகளை வழங்கி, ஒருவரை கெட்டவராக மாற்றினால் தான் அவரின் சேவை கௌரவிக்கப்படுவதுடன்,
கெட்டவரான அந்த நபரை நாட்டுக்குள் விடுவார்கள்..! நல்லவர்கள் எல்லோரும் நிம்மதியாக
ஜெயிலுக்குள் இருக்க, கெட்டவர்கள் எல்லோரும் அட்டகாசம் புரிந்துகொண்டு நாட்டில் நடமாடமுடியும்..!
பலர் இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி
நடித்தவர் நகுல் மட்டுமே..!
மற்றவர்கள் எல்லோரும் நாடகத்தில் நின்றது போன்றே தெரிந்தார்கள்.
இந்தக்கதை வேடிக்கையானதாக இருந்தாலும், நாட்டில் இருக்கும்
உண்மை நிலை இப்படித்தான் இருக்கின்றது..! நல்லவனாக வாழ்வது என்றால் கடினம் என்றும்,
அவனுக்கு பெண்ணே கிடைக்காது என்றும், கெட்டவனாக,
அதிலும் பயங்கரமான ரௌடியாக இருந்தால் தான், பெண்களை விரும்பிக் கட்டிக்கொடுப்பார்கள்..!
உண்மையில் நல்லவனான நாயகனே, பொய்சொல்லித்தான் நாயகியை கைப்பிடிக்கின்றான். அதேபோல்
ஜெயிலில் கொலைசெய்து, கெட்டவனாக வெளியே வந்து, தனது வாழ்வைத்தொடருகின்றான்.
விரலில் சிறு காயத்துடன் சென்ற அண்ணனை எல்லாச் சோதனைகளையும்
செய்து, இறுதியில் பிணமாக அனுப்பும் மருத்துவமனையின் கடமை உணர்வு உச்சம்..!
நிச்சயம், இந்த சமூகத்தில் இருப்பவர்கள் இந்தப்படத்தைப் பார்க்க
வேண்டும்.
தொழில்நுட்பங்கள், நடிப்பு எல்லாம் இன்றும் சிறப்பாக மெருகேற்றி
இருந்தால், இது ஒரு வெற்றிப்படமாக மாறியிருக்கலாம்.
இருந்தாலும் உலகத்தின் தற்போதைய போக்கைவைத்து, இப்படிச் சிந்தித்து
இயக்கிய ஆர்.ஜி.கிருஷ்னன் என்ற இயக்குனரைப் பாராட்டுவதுடன், அனைவரும் ஒரு தடவை இந்தப்படத்தைப்பார்த்து, தமது அறிவை இன்னும் பலப்படுத்த
வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
ஆ.கெ.கோகிலன்
08-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக