மெய்யழகன்..!

 


 


இது படம் என்பதை விட இருவரது வாழ்வியல் பயணம்..!  ஒருவருக்கும் மற்றவருக்கும் இருக்கும் உறவுமுறை தெரியாமலே ஒரு முழிக்க, உறவு முறை தெரிந்த நபர், தனது பாசத்தையும், அன்பையும் மற்றவர்மேல் கொட்ட படமே ஆனந்தக்கண்ணீரால் நனைகின்றது..! இந்தப்படத்தைப் பார்ப்பதற்கு என்றே, ஒரு தகுதி வேண்டும். இந்த படம் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் இயந்திர நரகவாழ்க்கைக்குள் சிக்குடவர்களாகத் தான் இருக்க முடியும்..! இந்தப்படத்தை ரசிக்க முடிகின்றது என்றால், உங்களில் அன்பு, பாசம், பொறுப்பு, நம்பிக்கை, உதவி போன்ற அனைத்து நல்ல பழக்கங்களும் இருக்கும். இந்தப்பூமியில் இப்படியான மனிதர்கள் அதிகம் வேண்டும். அப்போது தான் வாழ்வே பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் நிஜம் என்பது என்னவோ வேறுமாதிரி தான் உள்ளது..! கோபம், பொறாமை, களவு, கற்பழிப்பு, கொலை, ஏமாற்றுதல் போன்ற இயல்புள்ளவர்களே தற்போது பிழைக்கத்தெரிந்த வெற்றிகரமான மனிதர்களாக சமூகத்தின் கண்களில் படுவது, சமூகம் தற்போது எவ்வளவு பெரிய தீர்க்க முடியாத நோய்க்குள் மாட்டியுள்ளது..? என்றே நான் கருதுவேன்.

இணையத்தில் பார்த்த படம் என்றாலும் சில இடங்களில் மனம் கனத்தது.

பெரிய திரையில் பார்த்தால், அந்த உணர்வு இன்னும்  சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இங்குள்ள பல தியேட்டர்களில் படம் ஓடவில்லை..! அல்லது சனம் இல்லை என்று தூக்கிவிட்டார்களோ தெரியாது..!

படத்தின்  கதையே தலைப்புத் தான்..! ஆனால் அதை எவ்வளவு உண்மையாகக் காட்டமுடியுமோ அவ்வளவு உண்மையாகக் காட்டியுள்ளார்கள்.

நடிகர்கள் கார்த்தியும், அரவிந்தசாமியும் பாத்திரங்களாக வாழ்ந்திருந்தார்கள்..! படம் மெதுவாகச் சென்றாலும், ரசிக்கும் படி ஒரு மென்மையான உணர்வை மனதிற்குள் பரப்பிக்கொண்டே சென்றது..! படத்தில், யாரும் நன்மை செய்யவே விரும்புவதாகத் தெரிகின்றது..! சும்மா, வேண்டும் என்றால் அரவிந்த சாமியைத் தான்  சற்றுக் குறைவான எதிர்த்தன்மை கொண்ட யதார்த்த பாத்திரத்தில் பயணித்துள்ளார் என்று சொல்லமுடியும். கார்த்தி முழுக்க  முழுக்க அப்பாவியான,  அன்பான, பொறுப்பான, அனைத்து உயிர்கள் மேலும் அன்பு வைத்துள்ள மிகநேராக பாத்திரத்தில் பயணித்துள்ளார். வேண்டும் என்றால் அவர், மது அருந்துவதைத் தவிர்த்து இருக்கலாம்.

இது மாத்திரமன்றி படத்தில் நடித்த அனைவரும் தமது சிறப்பான நடிப்பால், ரசிக்க வைத்தார்கள்.

இசையும், பாடல்களும், ஏனைய தொழில்நுட்பங்களும் தரம்.  படமே ஒரு கவிதைபோன்றே இருந்தது..! கண்ணீருடன், உணர்வுகளும்  கலந்தே வெளிப்பட்டது..! முடிவு மிகவும் திருப்தியாக இருந்தது..! வெட்டுக்கொத்து இல்லாமல், பொய் புரளி இல்லாமல், உருட்டல் மிரட்டல் இல்லாமல், கத்தல் குளறல் இல்லாமல்   படம் இருப்பது எனக்குப் புதுமையாக இருந்தது.!. பலருக்கு இது படமாகவே இருக்கவில்லை என்றார்கள். இரண்டு பேர்களின் உரையாடலில் என்ன சுவாரசியம் இருக்கப்போகின்றது என்ற கேள்விக்கு விடைகாண, விரும்பினால் ஒரு தடவை, மென்மையான உணர்வுகளுடன், பொறுமையாகப் படத்தைப் பாருங்கள். எமது வாழ்க்கையும், அதற்குள் மறைந்துள்ள வழிமுறைகளும், பணத்தால் வரும் பாதிப்புக்களையும், நீங்கள் முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும்.

இயக்குனர் பிரேம்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வரும் சமூதாயத்திற்குத் தேவையான நல்ல விடயங்களை படம் காவிச் சென்றுள்ளது..! ஒவ்வொருவரும் விரும்பினால், தமக்குத் தேவையான கருத்தை படத்திலிருந்து இறக்கி வைத்துக்கொள்ளலாம்.



ஆ.கெ.கோகிலன்

31-10-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!