கடைசி உலகப்போர்..!
இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகியது..? என்றும் உயிர்கள் ஏன் உருவாகியது..? என்றும் உணவுக்காக
ஏனைய உயிர்களை கொல்லும் உயிர்களைத் தவிர, ஆசைக்காக உயிர்களைக் கொல்லும் ஒரே உயிரினம்
மனித இனம் என்பது தான் இந்தப்படத்தின் கரு..! சரியான இந்தக்
கருத்தைச் சொன்னதற்கு ஹிப்பொப் தமிழா ஆதியைப் பாராட்டலாம்.
அதேபோல், நாம் காணும் உயிர்களும், அந்நேரச்சூழ்நிலைகளும்
ஏதோவோர் சிவப்புக் கயிற்றால் பிணைக்கப்பட்டுள்ளது என்ற சீனப்பழமொழியைச் சொன்னதும் சிறப்பு..!
புதிய சிந்தனையாகவும், கற்பனையாகவும் இந்தக்கதை உருவாக்கப்பட்டுள்ளது..!
ஆனால் இதேமாதிரியான ஒரு சூழல் உண்மையில் உருவாகிக்கொண்டிருப்பதாக இரகசியத்தகவல்கள்
சொல்கின்றன. எது எப்படியோ..? காலம் அதற்கான பதிலைச் சொல்லும்.
உலகே இரு அணிகளாகப் பிளவுபட்டு, அவற்றிற்கிடையே பெரும் சண்டை
நடக்கின்றது. அந்த சமயத்தில் பலர் கொல்லப்படுகின்றார்கள். அதற்குள், இந்தியாவிற்கு
எதிரான அணி, இலங்கையின் உதவியுடன் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி, பல அநியாயங்களைச் செய்கின்றது..!
அதில் பலர் கொல்லப்படுகின்றார்கள். அதில் இருந்து எப்படி தமிழக முதல்வரையும், அவரது
மகளையும், ஏனைய முக்கிய நபர்களையும் ஹீரோ காப்பாத்துகின்றார் என்பதே படத்தின் கதை..!
எடுக்கப்பட்ட கதைக்களம் மிகப்பிரமாண்டம்..! அதை எடுத்த விதம்
தடுமாற்றம்..! எல்லாத் துறையிலும் முத்திரை பதிக்க ஆதி ஆசைப்பட்டாலும், அது ஒரு மிகச்சவாலான காரியம் என்பதை இப்போது புரிந்திருப்பார்.
இருந்தாலும் சில இடங்களில், அவரது சிந்தனை பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு இருந்தது. ஆனால், இந்தக்கதையை சரியாகத்திட்டமிட்டு நல்ல திரைக்கதையோடு,
தெளிவாக எடுத்திருந்தால், இது ஒரு பான் வேல்ட் படமாக இருந்திருக்கும்.
இருந்தாலும், இந்தப்படத்திற்கு 20 கோடி செலவழித்தது ஆச்சரியம் தான்..! காட்சிகளில் தத்துரூபமில்லை. அதனால் எனக்கு ஈர்ப்பு
வரவில்லை.
நடிகர்களின் பங்களிப்பு, தொழில்நுட்பங்கள், இயக்கம் எல்லாம்
சராசரியைவிட குறைவாக இருப்பது போல் தோற்றின..!
சில இடங்களில் பெரிய ஓட்டைகள் தெரிந்தன..! இந்தியர்கள், இலங்கைக்கு பக்கத்தில் இருப்பதை, தமக்கு
அச்சுறுத்தலாகக் கருதிவிட்டு, ஏனைய அயல் நாடுகளில் கவனம் எடுக்காமல் இருப்பது அதைவிட
அவர்களுக்கு அச்சுறுத்தல் கூட..!
தற்போது அல்லது வருங்காலத்தில் பகையோடு இருக்கும் நாடுகள் எல்லாம் அவர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும். மாறாக, நாடுகளிடையே
நல்லெண்ணத்துடனும், ஒற்றுமையோடும் இருந்தால் இப்படியான சிந்தனைகள் தோன்றாது.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும் ஹிப்பொப் தமிழா என்று
சொல்லித் தமிழ்நாட்டில் இருப்பது சற்று இடிக்கின்றது..! வாழ வைக்கும் தமிழ்நாடு, உண்மைத் தமிழர்களை திண்டாட
வைக்கின்றது..!
படத்தில், இலங்கையில் இருந்து, சீனர்களுக்கு உதவியாகச் சிங்களவர்கள்
வந்ததாகக் காட்டுகின்றார்கள்..! உண்மையில் சிங்களவர்கள் என்பது முன்னைய காலத்தெலுங்கர்கள்
தான்..!
நல்லவேளை தமிழர்கள் சீனர்களுக்கு உறுதுணையாக இல்லை என்பதைக்காட்டி,
தமிழ் பேசும் மக்களின் மனதை நோகடிக்காமல் விட்டதற்கு, ஆதிக்கு மீண்டும் ஒரு நன்றி.
திறமையிருந்தாலும் பல துறைகளையும் கையில் எடுக்கும் போது எதிர்பார்த்த தரம் கிடைக்கவில்லை
என்பது எனது கருத்து.
ஆ.கெ.கோகிலன்
02-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக