வயிற்றுக்குள் இசை..!

 


கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக எந்தச் சாப்பாட்டை சாப்பிட்டாலும்,  எல்லாம் விரைவாக வெளியேறிவிடுகின்றன..! நானும் வெளிக்கடைகளில் எடுத்துச் சாப்பிட்டாலும் அதே நிலை தான். ! ஊருக்குப் போய் சாப்பிட்டாலும் அதே நிலை தான்..! சரி எமது சிற்றூண்டிச்சாலையில் சாப்பிட்டாலும் மாற்றம் ஒன்றும் இல்லை. அதே நிலைதான் தொடர்கின்றது..!

இடையிடையே வெந்தயத்தை தண்ணீருடன் விழுங்குவேன்.  சற்று தணியும், பின்னர் திரும்பவும் ஆரம்பிக்கும்..!

சில சமயங்களில் வயிற்றுக்குள் யாரோ தொதல் கிண்டுவது போல் இருக்கும்..! சில சமயம் பல வித ஒலிகள் கேட்கும்..!

உள்ளே ஏதாவது போர்கள் நடக்கின்றதா  என்று தெரியவில்லை..! ஒரே இசைக்கச்சேரி தான்..! இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமானே தோற்றுவிடுவார்கள் போல் அவ்வளவு வேறுபட்ட இசைகள் ஒலிக்கின்றன..!

அவற்றை ஒரு சமயம் பதிவு செய்யவும் நினைத்தேன். பின்னர், எமது இசை வல்லுனர்கள் பிழைத்துப்போகட்டும் என்று, இயற்கையினது இசையை மறைத்து விட்டேன்.

இன்று காலை உடற்பயிற்சி செய்யும் போது, அந்த சத்தங்கள்  எனக்குப் பெரிதாகக் கேட்டன. பயிற்சிக்கு முன்னரும், பின்னரும் குளியறைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இயற்கை என்ன இசைபோட்டாலும், நான் எனது உடற்பயிற்சியைக் குறைக்கவில்லை.  உடலை வருத்தினால் தான் கொஞ்சக்காலமாவது ஆரோக்கியமாக வாழலாம் என்பது எனது எண்ணம்.

இந்த இடத்தில், இன்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவான ரொனால்ட் ரம்பின் ஒரு பேச்சு ஞாபகத்திற்கு வருகின்றது. அவர் ஒரு நாளும் தனது உடலை வருத்துவதில்லை..! எந்த உடற்பயிற்சிகளும் செய்வதில்லை..! அவரின் கருத்து, உடலை எவ்வளவு தூரம் கஷ்டப்படுத்தாமல் இருக்கின்றோமோ அவ்வளவு தூரம் உடல் எங்களுக்கு கஷ்டங்களைத் தராது என்பது தான்..!

ஆரம்பத்தில் வேடிக்கையாக அவரது கருத்து இருந்தாலும், அதிலும் ஒரு உண்மை இருக்கின்றது. சிறுவயதில் இருந்தே நான் மிகவும் ஒல்லியாகவே இருப்பேன்..! எனது காற்சட்டையைப் போட்டு நிழலைப் பார்த்தால், இரண்டு குச்சிகளே தெரியும். அவ்வளவு மெல்லிய கோடுகள் போலவே இருந்தேன்..! பின்னர், ஒரு வயது வர, கடும் முயற்சிகள் செய்து, உடலை வருத்தி, பெரிய பலமான உடலைப் பெற்றுக்கொண்டேன். அதேநேரம் எனது மச்சான், அப்படியே ஒல்லியாகவே இருந்தான்..! திருமணத்திலும் அதே ஒல்லி உருவத்துடனேயே இருந்தான். இப்போது கிழவனாக மாறத்தொடங்கிய நிலையிலும் ஒல்லியாகவே இருப்பதால் அவனால் இலகுவாகவே இயங்க முடிகின்றது.

ஆனால் எனக்கு சில நாட்கள் உடற்பயிற்சிகள் இல்லை என்றால், உடல்சோர்வாக இருப்பதாக உணர்கின்றேன். எப்படியாவது உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டும்..! அப்படி ஒன்றும் செய்ய இயலாத சூழல் வந்தாலும், கடினமான சில வேலைகளையாவது செய்யவேண்டும் எனத்தோன்றும்.

உடலை வலுப்படுத்தவும், ஆரோக்கியமாக இருப்பதற்கும், தற்போது ஒழுங்காக இயங்குவதற்கும் உடற்பயிற்சி எனக்கு இன்றியமையாதது ஆகிவிட்டது.

நீண்டநாட்களாக எனது இந்திய நண்பர்கள் திருகோணமலையில் வந்து தங்கியுள்ளார்கள்..!  ஆரம்பத்தில் ஒரு முறை அவர்கள் வீட்டிற்குச் சென்று வந்தேன். பின்னர், அவர்களது வீட்டிற்கு போக நினைத்தும், முடியவில்லை..! பல மாதங்கள் ஓடிவிட்டன. கடந்த வாரம், அந்த வீட்டுக்குடும்பத் தலைவர், தனது மகன் கனடா போக உள்ளதாகவும்,  என்னை ஒருக்காப் பார்க்க விரும்புவதாகவும் போன்மூலம் சொன்னார். அதனடிப்படையில் இன்று அவர்வீட்டிற்குச் சென்று வந்தேன். போகும்போது, ஒரு சின்ன பரிசு பையுடன் சென்றேன். வரும்போது, என்னை வேறுசில பரிசு உணவுகளைத் தந்து அனுப்பிவிட்டார்கள்..! அங்கிருந்த சமயம், ஒரு உணவை எடுக்க சொல்ல, நான் எனது வயிற்றின் நிலையைச் சொல்லித் தப்பித்தேன். இருந்தாலும் சில உணவுப்பொருட்களைத் தர, அதை ஒருநேர உணவாக மாற்றி உண்டேன்.

வயிறு சத்தங்களுடன் இருக்க, பல சம்பவங்களும் நடந்தன..!  குறிப்பாக யாழ்ப்பாண உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் படித்து முடித்த மாணவர்கள் ஒரு காரில் திருமலை வந்துள்ளார்கள்..! நான் இங்கு இருப்பதை அறிந்து, என்னைவந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள்..! மாணவர்கள் என்றாலும் அதுவும் பிள்ளைகள் போன்ற ஒரு உறவு தானே..!

இடையிடையே வயிறு வேறுவித இசையை மீட்டும்போது, இந்த மாதத்திற்கான கூட்டத்தை   மாணவர் மற்றும் ஊழியர்களுடன்  நடாத்திமுடித்தேன். மாலையும் ஒரு ஜூம் கூட்டம் இருந்தது..! அதை எனது பதிவாளரிடமும், போதனாசிரியரிடமும் விட்டுவிட்டேன்.

மீண்டும் வயிறுசத்தம்போட உணவே எடுக்காமல் இருக்கப்பார்த்துவிட்டு, பின்னர் கறுப்புக் கோப்பியை சிற்றூண்டிச்சாலையில் வாங்கிக் குடித்தேன்.

இசை ஓய்ந்ததாக நினைக்க, இரவுச்சாப்பாட்டுடன் மீண்டும் இசை தொடர்ந்தது..!

வெளியிசையைவிட உள்ளிசையே அமர்களமாக இருந்தது..! எல்லா வாத்தியங்களும் கேட்டன..! அது தான்  எனக்கு உச்சமாக இருந்தது..!

 

ஆ.கெ.கோகிலன்

06-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!