கடல்..!

 

 





கடல் தரையைவிட பரப்பளவு கூடியது. விசாலமானது..! ஆழமானது..! பல மர்மங்களை மறைத்து வைத்திருப்பது..!

இவ்வாறாகப் பல விளக்கங்கள் கொடுத்தாலும், மணிரத்தினம் கொடுத்த விளக்கம் வித்தியாசமானது..!

மீனவர்களின் வாழ்க்கையையும், கிறீஸ்தவ மதத்தின் மார்க்கத்தையும் வைத்து, ஒரு மாயம் செய்துள்ளார்..! அன்று, இந்தப்படம் ஓடவில்லை என்றார்கள்..! நான் கூடப்பார்க்க முனையவில்லை. அண்மையில் அரவிந்த சாமியின் மெய்யழகன் பார்த்தபிறகு, இந்த நடிகர் பல குடும்பத் தோல்விகளில் இருந்து மீண்டு, மீண்டும், நடிக்க வந்த படம் தான் கடல் என அறிந்தேன். அதனால் தான் இந்தப்படத்தைப் பார்த்தேன்.

உண்மையில், இந்தப்படம் ஏன் ஓடவில்லை..? என இப்போது யோசிக்கின்றேன்..! என்னை இந்தப்படம் கட்டிப்போட்டுவிட்டது..! மக்களின் ரசனைகள் என்றும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எல்லாருக்கும் ஒன்றை மட்டும் பிடித்தால், பூமி எப்போதே அழிந்திருக்கும்..!

அர்ஜூன், அரவிந்தசாமி, கௌதம் கார்த்திக் போன்ற நாயகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு பாத்திரங்களாக மாறியிருந்தார்கள்..! ராதாவின் மகள் துளசியும், முதல் படமா என்று சொல்ல முடியாத அளவிற்கு நடித்திருந்தார்..!

 

மதகுருவாகத் தகுதிவாய்ந்தவர்களில் ஒருவன் தவறான பாதையில் செல்ல, இன்னொருவன் சரியான பாதையில் செல்ல, ஒரு கட்டத்தில் சரியான பாதையில் செல்பவன் கூட, சாத்தானின் பாதையில் செல்ல எத்தனிக்கும் சமயம், ஆண்டவன் அருளால் உனது பாதை சரி..! நீ அந்தவழியே பயணி என்ற சமிக்கையுடன், எவ்வளவு திறமையிருந்தால் என்ன..? வீரம் இருந்தால் என்ன..? பணம் இருந்தால் என்ன..? சாத்தானின் வழியில் கிடைக்கும் அனைத்தும் பாவம் தான், என்பதை அடித்துச்சொல்லும் படம்..!

பல காட்சிகள் கண்களைக் குளமாக்கியது..! கௌதம் கார்த்திக்கின் பிறப்பு..!  தாயார் இறந்து இருந்த சமயம், அது தெரியாமலே அவளிடம் அழும் குழந்தையை நகர்த்தி, விபச்சாரத்திற்கு வரும் கள்ளத்தந்தையை, என்னால் மன்னிக்க முடியவில்லை. இறுதியில், அவனுக்கு வரும் மரணத்தை என்னால்  நன்றாக ரசிக்க முடிந்தது..!

தாய் இறந்ததை அறிந்து கதறும் குழந்தையை மறக்க முடியாது. தாய், தந்தை இன்றி அநாதையாக அலையும் நிலையில், அந்தக்குழந்தை  ஒரு முரடனாக மாறி, அவன் செய்யும் காரியங்கள் வெறுப்பாக இருந்தாலும், தவிர்க்க முடியாதவை.

அதேபோல், ஒரு குழந்தைப்பேறின் போது, குழந்தையை பிடித்து இழுக்கும் காட்சியைக்கண்ட எந்த ஆண் மகனுக்கும் பெண்களுக்குத் தவறுசெய்ய மனமே வராது. அப்படி வந்தால்,  அவன் மனிதனாகவே இருக்க முடியாது. உறுதியாகச் சொல்லமுடியும் அவன் விலங்கு தான் என்பதை..! இந்தமாதிரியான காட்சியைப் பார்த்த எந்த முரடனாலும் தாய்மையை மதிக்காமல் இருக்க முடியாது. படத்தில், முரடனான கௌதம் கார்த்திக்கின் மனம் மாறுவதை ஏற்காமல் இருக்க முடியாது.

ஆகமொத்தம், நல்ல படம் என்றாலும், அந்நேர மனிதர்களால் ஜீரணிக்க முடியாத சில காட்சிகள், படத்தை தோல்விக்குள் தள்ளியிருக்கலாம்.

ஆனால், இப்போது தான் நான் பார்க்கின்றேன். எல்லாம் தரமாகத் தெரிந்தன..!

இயக்குனர் மணிரத்தினத்திற்கு எனது பாராட்டுக்கள்.

 


ஆ.கெ.கோகிலன்

11-11-2024.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!