வியட்நாமில் வேலை..!
நாட்டின் பொருளாதாரச் சூழல் பலரை அண்மையில் வெளிநாடுகளுக்குத் துரத்தியது..!
பலர் உடனேயே பறந்துவிட்டார்கள். சிலர் முயன்று தோற்று, இங்கேயே இருக்கப்பழகிவிட்டார்கள்..!
இன்னும் சிலர் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கின்றார்கள்..! வாய்ப்பு வந்ததும் போகின்றார்கள்..!
இந்த மூன்றாவது வகையை சார்ந்த ஒருவர், எமது நிறுவனத்தில் பாதுகாப்பு ஊழியராக வேலைசெய்துகொண்டிருந்தார்.
நான் வந்த காலத்தில், என்னுடைய உடற்பயிற்சிக்கு மிகவும் ஒத்துழைத்தார். அவரும் சில பயிற்சிகளைக்
கூடச் செய்து காட்டுவார். சில பயிற்சிகளை எனக்கு மட்டுமே செய்யச்சொல்லித் தருவார்.
அதைச் செய்வது எனது உடலுக்கு நல்லது என்பார்..! அவரது உடற்பயிற்சி முடிந்ததும், ஒரு
Body Massage செய்து விடுவார். அவ்வளவு வலியும் பறந்து போனதாக உணர்வேன். இலங்கைக் கடற்படையில் நீண்டகாலம் வேலை செய்து, ஓய்வு பெற்றவர். ஒரு மகன்,
மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை. அவரது வீட்டிற்கும் ஒரு முறை என்னைக் கூட்டிச்சென்றுள்ளார்.
எமது நிறுவனத்திலுள்ள பல வேலைகளை அவரை வைத்து செய்துள்ளோம். அழகானவர்..! நல்லவர்..!
யாருக்கும் உதவும் மனப்பாங்கு கொண்டவர்..! சகோதர இனத்தைச் சேர்ந்தவர்..!
கடந்த சில மாதங்களுக்கு, முன்னரே வேலையை விட்டு விட்டு, எமது நிறுவனச்சிற்றூண்டிச்சாலையைத்
தனது உறவினரின் உதவியுடன் செயற்பட போதிய ஒத்துழைப்பைத் தந்தவர். சில சமயங்களில் அவரது
குடும்பமே சிற்றூண்டிச்சாலையில் நின்று, அங்குள்ள வேலைகளைச் செய்ய உதவுவார்கள்..! ஒரு
ஓட்டோ வைத்துள்ளார். என்னையே சில தடவைகள் நகருக்குக்
கூட்டிச்சென்றுள்ளார். ஒரு விதத்தில், அவர் எனது தம்பி மாதிரித்தான். அவரும், எனது
உண்மையான தங்கையின் கணவரும் ஏறக்குறைய சகோதரர்கள் போன்றவர்களே..! தங்கையின் கணவர் கனடாவில்
வங்கூவாரில் இருக்கின்றார்.
ஆனால், இவர் இன்று வியட்நாம் புறப்படுகின்றார். சில நாட்களுக்கு முன்னர் எனக்கும் ஒரு நேர உணவு
தர அழைத்திருந்தார். எனக்கிருந்த பல்வலி காரணமாகவும், நவராத்திரி காலத்தில் சைவமாக
இருக்கக்கூடிய சூழல் இருந்ததாலும் அவரது கோரிக்கையை அன்பாக தவிர்த்துவிட்டேன்.
ஏறக்குறைய இலங்கைப் பணத்தில் ரூபா.1200000 செலவழித்துப் போகின்றார்.
ஒரு மாதத்தில் குறைந்தது ரூபா.300000 சம்பாதிக்கலாம் என நம்புகின்றார். அவரை வாழ்த்தி,
அவரது பயணம் வெற்றியாக அமைய இயற்கையிடம் வேண்டிக்கொண்டு,
அவரைப்போல் இன்னும் பலர் நாட்டைவிட்டு வெளியேறி, வெளிநாடுகளில் உழைக்கவே விரும்புகின்றார்கள்..!
அது தவறு அல்ல..!
நாடு நல்ல ஆட்சியில் இருந்தால், இனி வரும் தலைமுறைகள், நமது நாட்டில்
உழைத்து நன்றாக வாழக்கூடிய நிலைக்கு நாம் அனைவரும் மாறவும், மாற்றவும் தயங்கக்கூடாது.
தொடர்ந்து திறனுள்ளவர்களும், மூளைசாலிகளும் வெளியேறுவது நாட்டின் வளர்ச்சிக்கு குந்தகமாக
அமைய வாய்ப்புண்டு. ஒரு கட்டத்தில் வேலைக்காகச்
செல்பவர்களை நிறுத்தி, அவர்களுக்கு இங்கேயே நல்ல வேலைகள் கொடுக்கும் விதமாக,
நாட்டை மாற்ற வேண்டும்.
அதற்கு அனைவரும் சரியான நபர்களை, நாட்டின் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும்.
நாடு நன்றாக இருந்தால், நாம் நன்றாக இருப்போம்..!
நாட்டைச் சுரண்டினால், நாமும்
நலிந்து போவோம்..!
எங்கு போனாலும், பிறந்த ஊரையும் நாட்டையும் போல் வேறு எதுவும் அமையாது
என்பதுபோல், சொந்தத்தாய்க்கு மாற்றாக எந்தத் தாயையும் நிறுத்த முடியாது என்பதைச் சமவலுப்படுத்தலாம்..!
ஆ.கெ.கோகிலன்
13-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக