வாழை..!
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், வாழை இந்த நான்கு
படங்களிலும் தான் யார் என்பதை மிக நன்றாக நிரூபித்துள்ளார் மாரி செல்வராஜ்..!
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை அப்படியே ஒரு அழகான
காவியமாக மாற்றி, அனைவரையும் கலங்கடித்துள்ளார்..!
சாதாரண விடயங்களையும் மிகப்பெரிய விடயங்களாக மாற்றியுள்ளார்..!
உதாரணத்திற்கு அழுக்குள்ள, வறுமையுள்ள, தந்தையற்ற சின்னவயதிலே வாழைக்குலைகளை ஏற்றுவதற்கு
போகவேண்டிய சூழலிலுள்ள சிறுவனின் பாடசாலை வாழ்க்கையும், அங்கே அவன் காணும் ஒரு அழகான
ஆசிரியர் மேல் ஏற்படும் ஒரு வித பக்தி கலந்த தாய் அல்லது சகோதர பாசம், அவனுக்கு மனத்தில்
மிகப்பெரும் சந்தோசத்தைத் தருகின்றது..! ஒரு சாதாரண சிறுவனுக்கு ஆசிரியர் மேலுள்ள ஒரு
பாசத்தை ஏறக்குறைய காதல் ரேஞ்சுக்கு சொல்லியிருக்கின்றார்..! மிகப்பெரிய அன்பே, காதல்
என்று அர்த்தப்படுத்த முடியும்..! அது கண்டிப்பாக யாரிடமும், எந்த உயிரிலும் வரலாம்
என்பதற்கு அது உதாரணமாகத் தெரிகின்றது..!
இரண்டு மாணவர்களுக்கிடையேயான உரையாடல்களும், ஒருவருக்கு ஒருவர்
செய்யும் சேட்டைகளும், இறுதியில் ஒருவன் இறப்பதும் மனதை இழக்கியது..!
அதேபோல் தாய் மீது வைத்துள்ள பாசம், சகோதரி மேல் வைத்துள்ள பாசம், தனது சகோதரியை விரும்பும்
இளைஞன் மீது வைத்துள்ள மரியாதை அனைத்தும் அந்தக்கிராமத்திற்கு எம்மைக் கூட்டிச்செல்கின்றது..!
வழமைபோல், பல குறியீட்டுக்காட்சிகள், மனதை உண்மையில் தொடுகின்றன..!
பறவைகள் பறப்பதும், பொம்மைக்கடவுள்களிடம் கதைப்பதும், ஒவ்வொரு பழகிய உயிரும் பூமியைவிட்டு
விடைபெறுவதையும், குறியீடுகள் மூலம், முத்திரை பதித்துள்ளார்..!
வாழைக்குலைகளை ஏற்றிய வண்டி குடைசாய்ந்து 20 இற்கு மேற்பட்டோர்
இறப்பது மனத்தை கனமாக்கிவிட்டது..!
ஒவ்வொருவராக, அவன் தனக்கு நெருக்கமானவர்களைத் தேடும் போது
நமது மனமும் சேர்ந்து தேடியது போன்ற உணர்வு வெளிப்பட்டது..!
பொய் சொல்லி, பாடசாலையில் ஆடல் பயின்றுவிட்டு, பசியால் வாழைப்பழம்
திருடி உண்டு, அதனால் உரிமையாளரிடம் அடிவாங்கிவிட்டு மீண்டும் வீடுவந்து தாய்க்கு தெரியாமல் சாதத்தைச் சாப்பிட, தாய் ஏச, அவன் பயந்து வீட்டைவிட்டு
ஓட, இறுதியில் பாடசாலை போனதால் தான், பிள்ளை உயிர்பிழைத்தான் என்பதை உணர்ந்து தாய்
கதற, கண்கள் கண்ணீரால் பார்வையற்றுவிட்டது..!
பெற்ற பிள்ளைக்கே சோறுகொடுக்க முடியாமல் இப்படிச் செய்துவிட்டேனே
என்று கதற, நமக்கும் நெஞ்சுக்குலையே நடுங்கியது..!
மாட்டைக்காணாமல் அவன் கதறிய கதறல், இன்னும் காதுக்குள் ஒலிக்கின்றது..!
நடிகர்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் இயக்கம் அனைத்தும் தரம்.
நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய, ஒரு பகுதி மக்களின் வாழ்வியல்..!
ஆ.கெ.கோகிலன்
17-10-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக