வேட்டையன்..!
ரஜனி என்ற தமிழக உச்ச நட்சத்திரம் இந்த வயதிலும் இப்படியான
ஒரு படத்தில் நடித்ததற்காக முதலில் அவரைப் பாராட்ட வேண்டும். வழமையான மசாலாப்படம் போல்
சில பகுதிகள் இருந்தாலும் இந்தப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய கல்விக் கொள்ளையர்கள்
தொடர்பானது. இது பிறநாடுகளில் மாத்திரமல்ல..! எமது நாடுகளிலும் இவ்வாறு காணப்படுவதை யாராவது உங்களால் உணர முடிகின்றதா..?
அப்படி ஏதாவது இருக்கின்றது என்றால் சொல்ல முடியுமா..?
ஒரு சிறிய உதாரணம். ஒரு வகுப்பில் 40 பேருக்கு மேல் வைத்துப் படிப்பிக்கக்கூடாது
என்று சட்டம் போட்டு, எத்தனையோ பிரிவுகளை பாடசாலைகளில் வைத்திருக்கும் கல்வி நிர்வாகம்,
ஒரு சாதாரண கல்வி நிலையத்தில் ஒரு வகுப்பில் 1000 மாணவர்கள் இருந்து படித்தால், நிறைய
அறிவு கிடைக்கும் என்பதுடன், பிடித்த துறைகளில் பல்கலைக்கழகம் போகமுடியும் என்று அவற்றைத்
தீர்மானிக்கும் காரணிகளாக மாறிவருவதை எப்படிச்சொல்வது..? இவ்வாறான நடவடிக்கைகள், குறிப்பாக வறியவர்களையும்,
கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களையும் பாதிக்கும் என்பதை உங்களில் எத்தனை பேரால்
ஏற்றுக்கொள்ள முடிகின்றது..?
இதே போன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்தி, ஒரு மணித்தியாலத்தில்
இலட்சக்கணக்காணோர் படிக்கக்கூடிய கணினி செயலிகளை உருவாக்கி, அதனூடாகப் பெரும் பணம்
சம்பாதிப்பதைத் தவிர, ஏழைகளுக்கும், உண்மையான அறிவை விருத்தி செய்ய விரும்புபவர்களுக்கும்
அச்செயலிகள் என்ன நன்மையைத் தந்துவிடப்போகின்றது..?
இந்தப்படத்தைப்பொறுத்தவரை என்கவுண்டர் மூலம் ஒருவரை கொன்று
நீதியை நிலைநாட்டிவிட்டதாக நம்பும் ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக
உணர்ந்து, அந்தத்தவறை நிவர்த்திசெய்ய, அந்தக்கொலையுடன் சம்பந்தப்பட்ட நிஜமான திருடர்களை
நோக்கிப் பயணப்படும் போது, மாட்டும் பெரிய முதலாளிகளை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தி,
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கிக் கொடுக்கின்றார்
என்பதே படத்தின் கதை.
ரஜனி உட்பட அனைவர் நடிப்பும் சிறப்பு. தொழில்நுட்பங்களும்
தரம். பெரிய நட்சத்திரங்கள் படத்தில் இருந்ததால், பல மொழிகளிலும் வெற்றிபெறக்கூடிய
கதைக்கருவை வைத்தே இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள்.
ரஜனி ரசிகள் மாத்திரமன்றி, என்னைப்போன்ற ரஜனியின் வழமையான
மசாலாவை விரும்பாதவர்களும் விரும்பும்படியாக படம் எடுத்த இயக்குனர் தா.செ.ஞானவேலை பாராட்டலாம்.
ஜெம்பீம் தந்த இயக்குனரின் இந்தப்படைப்பும், சில சுவாரசியமான காதில பூச்சுற்றல்கள்
இருந்தாலும், படத்தின் உட்கருத்தை, அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும். பலருக்கு நன்மை செய்வதாக் கருதியே, கல்வி வியாபாரத்தைச் செய்துகொள்ள
பலர் நினைக்கின்றார்கள். வியாபாரம், ஒரு நிலையில் எல்லை மீறிப்போகும் போது, அது திருட்டாகும்..!
கல்வி வியாபாரமும் ஒரு நிலை தாண்டினால், கல்வித்திருட்டு (அதாவது கல்வி ஊழல் அல்லது
கல்வி மாபியா) என்று சொல்லக்கூடியதாக இருக்கும்.
மக்களுக்கு இவ்வறான விழிப்புணர்ச்சி தந்ததற்கு, இயக்குனருக்கு
மீண்டும் ஒரு நன்றி.
ஆ.கெ.கோகிலன்
01-11-2024.
கருத்துகள்
கருத்துரையிடுக